
வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்
8. நல்வினை தீவினை
இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு. (5)
பிறவித் துன்பத்தை உண்டாக்கும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளின் பயனும் கடவுளின் உண்மையான புகழை விரும்பியவர்களை அடையாது.
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க, மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (36)
இறக்கும் சமயம் வருகின்ற அப்பொழுது பார்த்துக் கொள்ளுவோம் என்று நினைக்காமல் இப்பொழுதே செய்ய வேண்டிய நல்ல காரியங்களைச் செய்க. இதுதான் இறக்கும் பொழுது, இறக்காமல் உயிருடன் கூடவந்து துணை செய்வது.
அறத்தாறு இதுஎன வேண்டா, சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (37)
நல்வினையின் பயன் இதுதான் என்று வேறு உதாரணங்களால் விளக்க வேண்டியதில்லை. பல்லக்கைச் சுமந்து கொண்டு போகிறவனையும், அதில் ஏறிக்கொண்டு போகின்றவனையும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
முன் பிறப்பில் தீவினை செய்தவன் பல்லக்குத் தூக்குகிறான்; நல்வினை செய்தவன் பல்லக்கில் சவாரி செய்தான்.
இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார்
சிலர், பலர் நோலாதவர். (270)
இவ்வுலகில் பணக்காரர்கள் சிலர்; ஏழைகள் பலர்; இதற்குக் காரணம் தவம் செய்பவர்கள் சிலர்; தவம் செய்யாதவர்கள் பலர்.
முன் ஜென்மத்தில் தவம் செய்தவர்கள் இப்பொழுதுள்ள பணக்காரர்கள்; முன் ஜென்மத்தில் தவம் செய்யாதவர்கள் இப்பொழுதுள்ள ஏழைகள். இக்கொள்கை தொன்று தொட்டு வழங்கி வருவது; கர்மபலன் உண்டு, என்ற கொள்கையை ஒப்புக்கொள்ளும் எல்லா மதங்களுக்கும் உடன்பாடானது. இக்கருத்தையே பிற்காலத்தினரும் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம் என்று கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கதாகும்.
பிறவியும் நல்வினை தீவினைகளும் ஒன்றையொன்று பின்னிக் கொண்டிருக்கின்றன. கர்மமே பிறப்பை யுண்டாக்குகின்றது. நல்ல கர்மத்தைச் செய்து பிறந்தவர்கள் சுகமாக வாழ்கின்றனர்; கெட்ட கர்மத்தைச் செய்து பிறந்தவர்கள் கஷ்டப்படுகின்றனர். இந்தக் கருத்தை மேலே காட்டிய பாடல்கள் காட்டுகின்றன.



