வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்

11. சுவர்க்கம் நரகம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும். (50)

இவ்வுலகத்தில் வாழவேண்டிய முறைப்படி இல்லறத்தில் வாழ்பவன், தேவலோகத்தில் வாழ்கின்ற தேவர்களில் ஒருவனாக எண்ணப்படுவான்.

செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருப்பான்,
நல்விருந்து வானத் தவர்க்கு. (86)

வந்த விருந்தினர்களை உபசரித்து, இன்னும் வரும் விருந்தினர் களையும் உபசரிக்க எதிர்பார்த்திருப்பவன், இறந்தபின் தேவ லோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல விருந்தினனாக இருப்பான்.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. (101)

முன்பு எந்த உதவியும் செய்யாமலிருக்கும் போது ஒருவன் முன் வந்து செய்த உதவிக்குப் பதிலாக, இவ்வுலகத்தையும், தேவலோகத்தையும் கொடுத்தாலும் அவ்வுதவிக்கு ஈடாகாது.

அடக்கம் அமரர்உள் உய்க்கும், அடங்காமை
ஆர்இருள் உய்த்து விடும். (121)

மனம், வாக்கு, காயங்கள் கெட்ட வழியில் போகாமல் அடக்கிக் கொள்ளும் குணம். அக்குணமுடையவனைத் தேவலோகத்திற்கு அனுப்பி இன்பம் அனுபவிக்கச் செய்யும். அவைகள் அடங்காமல் கெட்டவழியில் செல்லும் குணம் அக்குணம் உடையவனை நிறைந்த இருட்டுலகமாகிய நரகத்திற்குச் செலுத்திவிடும்.

நல்ஆறு எனினும் கொளல்தீது, மேல் உலகம்

இல் எனினும் ஈதலே நன்று. (222)

நன்மையடைவதற்கு வழியாகும் என்றாலும் பிறரிடம் யாசித்தல் தீமையாகும். சுவர்க்கம் அடைதல் இல்லை என்றாலும் வறியோர்க்குக் கொடுப்பதே நல்லது.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை, இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். (243)

கருணை பொருந்திய மனமுடையவர்க்கு இருட்டு நிறைந்த துன்பத்தைத் தருகின்ற நரகலோகத்திற்குள் போகும் நிலைமை இல்லை.

ஒருமைச் செயலாற்றும் பேதை, எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு. (835)

அறிவில்லாதவன், இனிவரும் பிறவிகளிலும் தான் நரகத்தில் புகுந்து அனுபவிப்பதற்கு வேண்டிய பாவங்களை ஒரு பிறப்பிலேயே செய்து முடிப்பான்.

மேலே காட்டிய பாடல்களில் சுவர்க்கலோகம், நரகலோகம் காணப்படுகின்றன. மேல் உலகம், வானுலகம், அமரர் வாழ்கின்ற உலகம், வானகம் என்பன சுவர்க்க லோகத்தைக் குறிப்பிடுவன. இருட்டு உலகம், துன்பந்தரும் உலகம், அளறு என்பன நரகலோகத்தைக் குறிப்பின.

சாதிரங்களில் சொல்லுகின்ற தானதர்மங்களைச் செய்பவன் சுவர்க்கத்தை அடைவான். அங்குள்ள இன்பங்களை அனுபவிப்பான். சாதிரங்களுக்கு விரோதமாக நடப்பவன் நரகத்தையடைவான்; துன்பங்களை அனுபவிப்பான். இது புராணீகர் கொள்கை. இதை விளக்கப் பல புராணக்கதைகள் உள்ளன. இத்தகைய புராணக் கொள்கைகளையும் திருவள்ளுவர் ஒப்புக் கொள்ளுகிறார் என்பதற்கு, சுவர்க்க, நரகங்களைப் பற்றி அவர் கூறியிருப்பதே போதுமானதாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *