
வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்
2. கடவுள்
அகரம் முதல எழுத்தெல்லாம், ஆதி
பகவன் முதற்றே உலகு. (1)
எழுத்துக்கள் எல்லாம் அ என்ற எழுத்தைத் தலைமையாகக் கொண்டிருக் கின்றன. அதுபோல உலகம் ஆதி பகவனாகிய கடவுளைத் தலைமையாகக் கொண்டிருக் கின்றது.
கற்றதனால் ஆயபயன் என்கொல்? வால்அறிவன்
நற்றாள் தொழஅர் எனின். (2)
மாசற்ற அறிவுடைய கடவுளின் பாதங்களை வணங்கா ராயின், படித்தவர்களுக்கு அப் படிப்பினால் என்ன பயன்? படிப்பின் பயன் கடவுளை வணங்குதல்.
வேண்டுதல் வேண்டாமை யிலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)
ஆசையும் வெறுப்பும் அற்றவனாகிய கடவுளின் பாதங்களை அடைந்தவர்க்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.
பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்கம்
நெறிநின்றார் நீடுவாழ்வார். (6)
மெய், வாய், கண், மூக்கு, காது என்னும் ஐந்து பொறிகளின் மூலம் உண்டாகின்ற ஐந்து வகையான ஆசைகளையும் ஒழித்தவனாகிய கடவுளின் உண்மையான ஒழுக்கம் நெறியைப் பின்பற்றி நடப்பவர்கள் நிலைத்து வாழ்வார்கள்.
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (7)
ஒப்பற்ற கடவுளின் பாதத்தை அடைந்தவர்கள் தாம் மனக்கவலை யில்லாமல் வாழ்வார்கள்; மற்றவர்களால் மனக்கவலை யில்லாமல் வாழ முடியாது.
கோள் இல் பொறியில் குணம்இலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (9)
கடவுளின் பாதத்தை வணங்காத தலை, தம்முடைய தொழிலைச் செய்யாத ஐம்பொறிகளைப் போல பயனற்றது.
பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (350)
ஆசையற்றவனாகிய கடவுளின்மேல் அன்பு செலுத்துவதை மாத்திரம் மனதில் வைத்துக்கொள். அந்த அன்பையும் தன் சரீரத்தின்மேல் உள்ள ஆசை நீங்குவதற்காகவே மனதில் கொள்ளுக.
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டில் பரந்து
கெடுக உலகு இயற்றியான். (1062)
இவ்வுலகத்தைப் படைத்த கடவுள், மக்கள் பிச்சையெடுத்தாவது உயிர்வாழ வேண்டுமென்று விரும்பு வானாயின், அவனும் பிச்சை யெடுப்பாரைப்போல அலைந்து ஒழிக.
திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. முதல் பாட்டு அகரமுதல எழுத்தெல்லாம் என்று தொடங்குவது. கடவுள் இல்லாமல் உலகம் இல்லை என்று கூறுகிறது.
உலகைப் படைத்தவர் கடவுள், அவரை வணங்குவது மக்கள் கடமை, கடவுளை வணங்குகிறவர்கள் தாம் சுகமடைவார்கள், மனக் கவலையின்றி வாழ்வார்கள், வணங்காதவர்கள் துன்பம் அடைவார்கள். என்ற விஷயங்களை மேலே எடுத்துக் காட்டிய பாடல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.



