
வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்
3. விக்கிரக வணக்கம்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும ஈண்டு. (18)
மழை பொய்யாவிட்டால் இவ்வுலகில் தெய்வங்களுக்குக் கூட திருவிழாவும் பூஜையும் நடக்காது.
குறிப்பிட்ட சில நாட்களில் குதூகலமாகக் கொண்டாடுவது திருவிழா; தினந்தோறும் செய்வது பூஜை. பூஜையை நித்தியம் என்றும், திருவிழாவை நைமித்திகம் என்றும் கூறுவர்.
தெய்வத்தைத் தினந்தோறும் பூஜை செய்யவேண்டுமானால் அதற்கென ஒரு இடம் வேண்டும். அந்தத் தெய்வத்தைக் குறிக்க ஒரு அடையாளம் வேண்டும். இந்த அடையாளம் எந்த வகையில் இருந்தாலும் அது ஒரு உருவமாகி விடுகின்றது. இந்த உருவத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தில் கொண்டாடுவதுதான் திருவிழா.
திருவள்ளுவர் காலத்தில் தமிழ் நாட்டில் உருவ வணக்கம் இருந்தது, திருவள்ளுவரும் அதை ஆதரித்தார் என்று இந்தக் குறளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



