வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்

16. முடிவுரை

மேலே நாம் எடுத்துக் காட்டிய பகுதிகளிலிருந்து திருக்குறள் ஆசிரியரின் கொள்கைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வுலகத்தையும் உயிர்களையும் சிருஷ்டித்த கர்த்தா ஒருவர் உண்டு; அவரை வணங்குதல் மக்கள் கடமை. அவருக்கு உருவம் அமைத்துத் தினப்படி பூஜை செய்தல் வேண்டும். திருவிழாச் செய்தல் வேண்டும்.

பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு. ஒவ்வொருவரும் தமது குலாச்சாரத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும். நால்வகை ஆஸ்ரமதர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும். பிராமணர்கள் தங்களுடைய ஆசாரத்தைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். அவர்கள் வேதம் ஓதுவதற்கும், வேள்விகள் செய்வதற்கும் அரசன் ஆதரவு அளிக்க வேண்டும்.

மறுபிறப்பு உண்டு. பிறவிகள் எண்ணற்றவை. ஒவ்வொரு வரும் தம்முடைய வினைகளுக்குத் தகுந்தபடி பிறந்தது, இறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின்றனர். வினையின் பயனை ஒவ்வொருவரும் கட்டாயம் அனுபவித்தே தீரவேண்டும்; விதிப்பயனை யாரும் மீறமுடியாது.

குடும்பதன் பிதிர்க்களைத் திருப்தி செய்யச் சிரார்த்தம் முதலிய கர்மங்களைச் செய்ய வேண்டும். நல்ல காரியங்களைச் செய்பவன் சுவர்க்கத்தை அடைவான்; அங்குள்ள இன்பங்களை அனுபவிப்பான். கெட்ட காரியங்களைச் செய்பவன் நகரத்தை அடைவான்; அங்குள்ள கஷ்டங்களை அனுபவிப்பான். சுவர்க்கத்தைக் காட்டிலும் மோட்சம் உயர்ந்தது. கடவுளைத் தவிர மற்ற எல்லா ஆசைகளையும் விட்டவனே மோட்சமடைய முடியும். மோட்சத்தை வேண்டுகிறவன் நிஷ்காமிய கருமங்களையே செய்ய வேண்டும்.

பெண்கள் சுயேச்சை யற்றவர்கள். ஆண்களுக்கு அடங்கி நடக்கவேண்டும். இதுவே அவர்களுடைய தர்மம். பெண்களின் சொல்லைக் கேட்பவன் இம்மையினும் மறுமையிலும் கஷ்டப் படுவான்.

புராணங்களில் கூறப்படும் கதைகள், எமன், மூதேவி, சீதேவி, இந்திரன், தேவர்கள், பேய், மோகினிப் பேய் முதலியவைகள் உண்மையானவை.

இவைகள் எல்லாம் திருக்குறளில் காணப்படும் விஷயங்கள். ஆகையால் திருவள்ளுவர் கூறியிருப்பவைகள் எல்லாம் வேத புராணமிருதிகளை அனுசரித்தவை என்பது உண்மை.

திருக்குறளுக்கும் ஸ்மிருதிகளுக்கும் ஒரு வேற்றுமை உண்டு. ஸ்மிருதிகளில் நான்கு வருணத்திற்கும் தனித் தனியாக ஒழுக்கங்கள் கூறப்படுகின்றன. அரச நீதியிலும் கூட ஒவ்வொரு ஜாதியினர்க்கு ஒவ்வொரு நீதி வழங்குமாறு கூறப்படுகின்றது. ஆனால் குறளில் இப் பிரிவு இல்லை. பல ஒழுக்கங்கள் எல்லோர்க்கும் பொதுவாகக் கூறப்படுகின்றன. அரச நீதியைப் பற்றிக் கூறும்போது அங்கும் ஜாதிக்கொரு நீதியாகப் பிரித்துக் கூறப்படவில்லை. எல்லா மக்களுக்கும் ஒத்த நீதி வழங்குமாறு கூறப்படுகின்றது. இது திருவள்ளுவர்க்குரிய ஒரு தனிப்பட்ட சிறப்பாகும். இதைத் தவிர அவரால் கூறப்பட்ட ஒழுக்கங்களோ, நீதிகளோ, முறைகளோ, ஒன்றும் முன்னோர் நூல்களுக்கு முரண்பட்ட தல்ல. ஒரு தனிப்பட்ட நாகரிகத்தையோ, ஒரு தனிப் பட்ட கொள்கையையோ, ஒரு தனிப்பட்ட கலாச்சாரத்தையோ விளக்குகிறது என்று சொல்லுவதற்கும் இடமில்லை.

உண்மை இவ்வாறு இருந்தாலும், ஒவ்வொரு மதத்தினரும், திருவள்ளுவரைத் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றனர். அவர்கள் தங்கள் மதக்கொள்கைகளைத் திருவள்ளுவர் சொல்லி யிருப்பதாகத் திருக்குறளிலிருந்தே ஆதரவும் காட்டுகின்றனர்.

வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் குறிப்பிடும் ஆதிபகவன், எண்குணத்தான், மலர்மிசை ஏகினான் போன்ற பெயர்களெல்லாம் அருகக் கடவுளைக் குறிக்கும் பெயர்கள். சைனர்கள் கொல்லா விரதத்தையே மிகச் சிறந்ததாகப் போற்றுபவர்கள். திருவள்ளுவரும் கொல்லாமையையும், புலால் உண்ணாமையையும் மிகவும் வலியுறுத்திக் கூறுகிறார். குறள், சைனர்களால் பாடப்பட்ட நாலடி யாரோடு ஒத்திருக்கிறது. பிற்காலத்தினர் பல பாடல்களைத் திருத்தி விட்டனர். திருத்தப்படாத பழைய குறள் பாட்டுகளில் சைனமதத் தத்துவங்களே நிறைந்திருக்கின்றன. ஆதலால் திருவள்ளுவர் சைன மதத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லுகின்றனர்.

மலர்மிசை ஏகினான், அறவாழி அந்தணன், தனக் குவமை யில்லாதான் என்ற சொற்கள் புத்தரைக் குறிக்கும் சிறந்த பெயர்கள். இவைகளைத் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார். புத்த மதம் தென்னாட்டில் பரவிய காலத்தில் தான் புலால் உண்ணுதல் ஜீவகாருண்யத் திற்கு விரோதம் என்ற கோட்பாடும் பரவிற்று. அதனையே திருவள்ளுவரும் புலால் உண்ணாமை என்ற அதிகாரத்தில் வலியுறுத்திச் சொல்லியிருக் கிறார். ஆகையால் திருவள்ளுவர் புத்த மதத்தைப் பின்பற்றியவர் தான் என்று புத்தர்கள் சொல்லுகின்றனர்.

கிறிஸ்துவர்கள் திருக்குறளில் ஏசுநாதரின் உபதேசங்கள் பல அடங்கியிருக்கின்றன. திருவள்ளுவர் மயிலாப்பூரில் வசித்தவர். அவர் காலத்தில் செயின்ட் தாமஸ் போன்ற கிறிதுவ மதப்பிரச்சாரகர்கள் மயிலாப்பூரில் வந்து இறங்கினர். மற்றும் பல கிறிஸ்துவர்கள் அவருடன் வந்தனர். அவர்களின் மூலம் திருவள்ளுவர் ஏசுவின் உபதேசங்களை அறிந்தார். அவைகளைத் திருக்குறளில் அமைத்து எழுதினார் என்று கூறுகின்றனர்.

பூவேறு நான்முகன் என்பது திருவாசகம். எரியாய தாமரை மேல் இயங்கினாரும் என்பது தேவாரம். ஆகையால் மலர்மிசை ஏகினான் எனத் திருவள்ளுவர் சிவ பெருமானைத் தான் குறிப்பிடுகிறார் என்று சைவர்கள் கூறுகின்றனர். திருவள்ளுவர்க்குச் சிவனடியார் உருவத்திலேயே சிலை செய்து வைத்துக் கோயில் கட்டியிருக்கின்றனர். அவருக்கு நாயனார் என்ற சிவனடியார்க்குரிய பட்டப் பெயரும் அளித்துவிட்டனர்.

தண்டாமரை சுமக்கும் பாதப் பெருமான் என்பது திருவாய் மொழி. இக்கருத்துடையதே மலர் மிசை ஏகினான் என்பது தாமரைக் கண்ணான் உலகு என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். திருக்குறளுக்கு உரைகண்ட பரிமேலழகர் ஒரு வைணவர்.

மற்றும் வைஷ்ணவ சமய நூல்களில் திருக்குறளை எடுத்தாண்டிருக்கிறார்கள். ஆகையால் திருவள்ளுவர் விஷ்ணு பக்தர் என்று சொல்லுகின்றனர்.

இவ்வாறு ஒவ்வொருவரும் திருவள்ளுவரைத் தங்கள் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லும் போது தங்கள் கொள்கைக்கு மாறாக அவர் சொல்லியிருப்பதை விட்டு விடுகின்றனர். தங்கள் கொள்கைக்கு ஆதரவு அளிக்கும் குறள்களை மாத்திரம் எடுத்துக் காட்டுகின்றனர்.

ஒவ்வொருவரும் இவ்வாறே திருக்குறளில் தங்களுக்கு வேண்டாதவைகளைக் கழித்து விட்டு, அல்லது அவைகள் பிறரால் சேர்க்கப்பட்டன என்று சொல்லிவிட்ட தங்களுக்கு வேண்டியவற்றை மாத்திரம் எடுத்துக் கொள்ளுவார் களானால் இன்றுள்ள குறள் முழு வடிவத்துடன் இருக்க முடியாது. சைனர் குறள், புத்தர் குறள், சைவர் குறள், வைணவர் குறள், கிறிதுவர் குறள், திராவிடர் குறள், ஆரியர் குறள் என்று பல குறள்களாகி விடும். பிறகு திருவள்ளுவர் இயற்றிய குறள் எது என்பதிலேயே தகராறு வந்துவிடும். ஒவ்வொருவரும் தாம் தாம் கூறுவதுதான் திருவள்ளுவர் குறள் என்பார்கள். இதனால் திருவள்ளுவரின் உண்மைக் குறளை அறிய முடியாமல் மக்கள் திகைப்பார்கள். ஆகையால், இம்முறை இத்தகைய ஆராய்ச்சி முறை பாராட்டத் தகுந்ததல்ல. எல்லோர்க்கும் பொதுவான ஒரு நூலை, ஒரு கூட்டத்தார்க்கு மாத்திரம் உரியது என்று காட்ட முயற்சிப்பது, திருவள்ளுவர்க்குச் சிறப்பளிப்பதாகாது. குறளை அப்படியே வைத்து அதன் உண்மைக் கருத்தை அறிந்து கொள்வதுதான் ஆராய்ச்சிக்குச் சிறந்த சாதனமாகும்.

முஸ்லிம்களுக்கு வழிகாட்டும் நூல் கொரான்; கிறிஸ்தவர் களுக்கு பைபிள்; புத்தர்களுக்குத் திரிபிடகம். இந்து மதத்தில் உள்ளவர்களுக்கு, வேதாந்த சூத்திரத்திற்கு ஒவ்வொரு ஆச்சாரியார்கள் செய்த பாஷ்யங்கள் வழிகாட்டிகளாக இருக்கின்றன. இவைகளைப் போலத் திருக்குறளை ஒரு மதநூல் என்று கூறமுடியாது. பழையவேத புராணங்களின் சாரங்களைத் திரட்டிக்கூறும் நூலேயன்றி, ஒரு மதத்தினர்க்கோ, ஒரு வகுப்பினர்க்கோ இது வழிகாட்டும் நூலாக இருக்க முடியாது. உலகத்தார் எல்லோரும் படிக்க வேண்டிய உயர்ந்த நூல். பல உண்மைகளை விளக்கும் சிறந்த நூல். ஆராய்ச்சிக்குரிய ஓர் ஒப்பற்ற அரிய நூல். திருக்குறளை ஒருமுறை ஊன்றிப் படிப்போர் இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளலாம்.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *