
வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்
12. மோட்சலோகம்
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார். (3)
தன்னை நினைப்பவர்களின் உள்ளக் கமலத்தில் சென்று வாழும் கடவுளின் சிறந்த பாதங்களை அடைந்தவர், மோட்ச உலகத்தில் நிலைத்து வாழ்வார்.
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். (346)
நான் என்னும் அகப்பற்றையும் எனது என்னும் புறப்பற்றையும் ஒழிப்பவன், தேவர்களாலும் அடைய முடியாத உயர்ந்த மோட்சலோகத்தை அடைவான்.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து. (353)
சந்தேகம் இல்லாமல் உண்மைப் பொருளை அறிந்தவர்க்கு இவ்வுலகத்தைவிட மோட்ச லோகம் சமீபத்திலிருப்பதாகும்.
அவாவென்ப எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து. (361)
எல்லாவுயிர்களுக்கும் எப்பொழுதும் நீங்காத பிறப்பைத் தருவதற்கு விதை இகபர ஆசையென்பார்கள்.
இகபர ஆசையற்றவர்களே மோட்சலோகத்தை அடைய முடியும்.
அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம், அஃதுஉண்டேல்
தவாஅது மேல்மேல் வரும். (368)
ஆசையற்றவர்க்குப் பிறவித்துன்பம் இல்லை; மோட்ச லோகம் உண்டு. ஆசையிருந்தால் மேலும் மேலும் தவறாமல் பிறப்பு வந்து கொண்டேயிருக்கும்.
ஆராஇயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். (370)
முடிவில்லாத தன்மையையுடைய ஆசையை ஒழிக்கின்ற அந்த நிலையில்தான் ஒருவனுக்கு மீண்டும் பிறக்காத தன்மையுள்ள மோட்சலோகம் கிடைக்கும்.
மேலே காட்டிய பாடல்களில் மோட்ச லோகம் சுவர்க்க லோகத்தைக் காட்டிலும் உயர்ந்தது; நிலையானது; அழியாதது என்று கூறப்படுகின்றது.
காமியகர்மம் செய்பவர்கள் சுவர்க்கத்தை யடைவார்கள்; நிஷ்காம்யகர்மம் செய்பவர்களே மோட்சத்தை அடைவார்கள் என்பது தத்துவம். இதனையே திருவள்ளுவரும் விளக்கி யிருக்கிறார். இதனால் மோட்சலோகத்தைத் திருவள்ளுவர் ஒப்புக்கொள்ளுகிறார்.
மனிதன் அடையவேண்டிய பயன் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும் நான்காகும். இவற்றைத் தமிழில் அறம், பொருள், இன்பம் வீடு என்பர். இந்நால்வகைப் பொருளையும், திருவள்ளுவர் மூன்று பால்களில் அடக்கிக் கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.



