
வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்
முன்னுரை
திருக்குறள் பல நூற்றாண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட நூல். அக்காலத்தில் தமிழர் அடைந்திருந்த நாகரிகத்தையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அந்த நாகரிகத்திலும் பழக்க வழக்கங்களிலும் சீர்திருத்தத்தை உண்டாக்க வேண்டித் திருக்குறள் ஆசிரியர் செய்த முயற்சியே குறள் நூலாக உருவமாயிற்று. பழங்காலத் திலிருந்த ஒரு அறிவாளி அவர் காலத்து மக்களிடம் அவர் கண்ட பழக்க வழக்கங்களை ஆராய்ந்து, அவருக்கு நல்லவை என்று தோன்றியவற்றைச் சிறப்பித்தும், கெட்டவை என்று தோன்றியவைகளைக் கண்டித்தும் குறள் இயற்றினார்.
குறளாசிரியரின் சொல் வன்மையைப் பற்றியும், புத்தி நுட்பத்தைப் பற்றியும், தமது முன்னோர் என்ற முறையில் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளலாம். குறளில் வற்புறுத்தப்பட்ட பல ஒழுக்கங்கள் இன்றும், இந்த இருபதாம் நூற்றாண்டிலும், நல்லொழுக்கங்களாகவே கருதப்பட்டு வருவது தமிழ் மக்களுக்கும், தமிழ் பாஷைக்கும் பெருமை கொடுக்கத் தக்கதே.
இக்காலத்தில், குறளாசிரியர் வாழ்ந்து குறைந்த பட்சம் ஒரு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாவது கழிந்த பிறகு, குறளைப் படிப்பவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் மனித சரித்திரத்தில் இந்தப் பன்னெடுங் காலத்தில் ஏற்பட்டிருக்கும் பல புரட்சிகளையும் மனதில் நிறுத்திப் படிக்கவேண்டும்.
அப்படி ஆராய்ச்சி செய்பவர்களுக்குக் குறளிலும் சில குற்றங்கள் தோன்றத்தான் செய்யும். இது இயற்கை. ஒரு ஆயிரத்து ஐந்நூறு வருஷத்தில் மனித சமூகம் எவ்வளவோ மாறுதல்களை அடைந்துவிட்டது. ஒரு பெண் இறந்த தன் கணவனின் பிணத்தோடு கொளுத்தப்படவேண்டும் என்பது ஒரு நூறு வருஷத்திற்கு முன்பு சிறந்த ஒழுக்கமென வற்புறுத்தப்பட்டது. இன்று அப்படிப்பட்ட செயலுக்கு உடந்தையாக இருப்பவர் குற்றவாளிகள் எனத் தண்டிக்கப் படுவர். உலகத்தில் எல்லாத் தேசத்தினரும் தங்கள் பழக்க வழக்கங்களிலும், அந்தப் பழக்க வழக்கங்களுக்குக் காரணமாக உள்ள ஒழுக்கம், நன்மை, தீமை என்ற எண்ணங்களிலும், கொள்கைகளிலும், தீவிர மாறுதல்கள் செய்து கொண்டிருக்கின்றனர். விஞ்ஞான வளர்ச்சியினாலும், போக்கு வரவு சாதனங்கள் மிகுந்தபடியாலும், பல தேசத்து மக்கள் நெருங்கிப் பழகச் சவுகரியம் ஏற்பட்ட படியாலும், மனிதர்கள் தங்கள் எண்ணங்களிலும், தேவைகளிலும் ஒருவரைப் பார்த்து ஒருவர் அநேக மாறுதல்களைச் செய்து கொண்டனர்.
ஒவ்வொரு தேசத்திலும் காலத்திற்கேற்ப அறிவாளிகளினால் இயற்றப்பட்ட நூல்கள் அந்தந்தக் கால தேச மாறுபாடுகளைக் குறிக்கின்றன. இங்கிலாந்தில் சாசர் காலத்து உண்மை ஒழுக்கம் வேறு, ஷேக்பியர் காலத்து உண்மை ஒழுக்கம் வேறு, பர்னார்ட்ஷா காலத்து உண்மை ஒழுக்கம் வேறு, இந்தக் கால வேறுபாட்டினால் சாசருடைய பெருமையோ, ஷேக்பியருடைய பெருமையோ குறைந்துவிடவில்லை.
அது மாதிரியே குறள் ஆசிரியர் காலத்து உண்மையும் ஒழுக்கமும் வேறு. இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழும் தமிழரின் உண்மை ஒழுக்கம் வேறு. இந்த வேற்றுமையால் குறளாசிரியரின் பெருமை எள்ளளவும் குறைந்த பாடில்லை. குறளில் கண்டது முழுவதும் இன்றைக்கும் உண்மையாயிருக்கு மானால் குறளாசிரியர் மனிதனாயிருந்திருக்க முடியாது. தேவனா யிருந்து தீர்க்க தரிசனம் பெற்றிருக்க வேண்டும். தெய்வீகத் தன்மையிலும் தீர்க்க தரிசனத்திலும் நம்பிக்கையில்லாமல், மனித அறிவையே பிரதானமாகக் கொண்டவர்கள் குறளாசிரியரைத் தெய்வமாக வணங்க மாட்டார்கள். ஷேக்பிரியர் போன்ற ஒரு அறிவாளி யென்றே கொண்டாடுவார்கள். குறளில் உள்ள வாக்கியங்களைப் பண்டைத் தமிழரின் நாகரித்தைப்பற்றிய ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வார்களே ஒழிய இன்றைய காலத்து நவீனத் தமிழரின் ஒழுக்கத்துக்கு வழிகாட்டியாகக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு மனிதனை மனிதனாக பாவித்தால்தான் அந்த மனிதனுடைய பெருமை அவனைச் சாரும் அவனைத் தெய்வமாக வணங்க ஆரம்பித்தால், அவனுடைய பெருமை முழுதும் அவனைச் சாராமல், ரூபமில்லாத உணர்ச்சியில்லாத தெய்வம் எனப்பட்ட ஒரு வஸ்துவைச் சாரும் உலக மக்களுக்கு நன்மை செய்வதில் தங்களுடைய வாழ்க்கையைத் தியாகஞ் செய்த பல அறிவாளிகள் இந்த ஆபத்தில் சிக்கித் தெய்வமாக்கப்பட்டு விட்டார்கள். இவ்வித ஆபத்து திருவள்ளுவர்க்கு ஏற்பட்டிருப்பதைக் கண்டு துயரப்பட்ட காரணத்தாலேயே நண்பர் சிதம்பரனார் திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இச்சிறு நூலை எழுதினார்.
சமகிருத பாஷையில் உள்ள சுருதி, மிருதிகளின் சாராம்சத்தையே குறளில் திரட்டிக் கூறப்பட்டிருக்கிறது. ஜாதிபேதம், நால்வகை ஆரம தர்மம், பெண்ணடிமை, பிறவியால் ஏற்பட்ட குல விசேஷம், சுவர்க்கம், நரகம், கர்மம், மறுபிறப்பு எனப்பட்ட கொள்கைகள் இக்காலத்துக்கு ஒவ்வாதவை. ஆனால் வள்ளுவரால் ஆமோதிக்கப்பட்டவை, இதனால் வள்ளுவரின் பெருமை குன்றாது. ஜாதிபேதம் கூடாது என்பது வள்ளுவருக்குப் பிற்காலத்தில் தோன்றிய கொள்கை கர்மம், மறுபிறப்பு என்னும் கொள்கைகளை விட்டு பகவான் புத்தராலேயே மீற முடியவில்லை. ரயில் வண்டியையும், ஆகாய விமானத்தையும் எப்படிக் குறளாசிரியர் எதிர்பார்க்கவில்லையோ, அப்படியே மேலே சொல்லப்பட்ட பல கொள்கைகளைப் பிற்காலத்து மக்கள் உதறித் தள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
குறளாசிரியர் மாமிச போஜனத்தையும் மதுவருந்துதலையும் கூடாவொழுக்கமெனக் கூறுகிறார். வள்ளுவர் காலத்தில் தமிழரிடம் புகையிலைப் பழக்கம் இல்லை. இருந்திருக்குமானால் சுருட்டு, சிகரெட், பீடி, மூக்குப்பொடி முதலியவைகளைக் கண்டித்து ஒரு அதிகாரமாவது எழுதியிருப்பார். நவீன உலகத்தில் இவற்றைக் கண்டிப்பவரும் உண்டு, போற்றுபவரும் உண்டு. வயிறார உண்பதற்கு ஒருவேளை உணவுக்கும் வழியில்லாத கோடிக்கணக்கான மக்கள் வதியும் இந்நாட்டில் மீன் மாமிசம் போன்ற சத்துள்ள மலிந்து உணவுப் பதார்த்தங்களை நீக்கினால் பஞ்சமும் நோயும் பயங்கரமாகப் பரவுமென்பதில் ஐயமில்லை. மாமிசம் நீக்கப்படாத இக்காலத்திலேயே வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டியிருக் கையில் மாமிச பகிஷ்காரம் செய்வது எங்ஙனம்?
மதுவிலக்கு ஒரு தடவை அமெரிக்காவில் கையாளப் பட்டு, அதனால் கள்ள விற்பனையும் பலாத்காரக் குற்றங்களும் அதிகப்பட்டுப் பொது மக்களின் ஒழுக்கம் கெட்டுவிடுவதாக அனுபோகத்தில் கண்டுபிடித்த பிறகு கைவிடப்பட்டது. அதே மதுவிலக்குக் கொள்கை சுதந்தர இந்தியாவில் பலவிடங்களிலும் கையாளப்படுவதால், அமெரிக்காவில் அனுபோகத்தில் ஏற்பட்ட பலவித தீமைகளும் இங்கும் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் நடந்தது போலவே இந்தியாவிலும் மதுவிலக்குக் கொள்கை கைவிடப்படலாம்.
வேதகாலத்து ஆரியர் யாகம் என்ற பெயரால் மாமிசத்தை நெருப்பிலிட்டு வாட்டி, சோமா என்னும் ஒரு மதுபானத்தை அருந்திக் களிப்புற்றனர். இவ்வித யாகமே ஆரியர்களின் முக்கிய கடமையாக வேதத்தில் பணிக்கப் பட்டிருக்கிறது. பழங்காலத்துத் தமிழ் மக்களும் வேடர்களாய்க் காட்டில் உள்ள பிராணிகளை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தைப் புசித்துக் கள்ளுண்டு களிப்பதே அவர்களின் பெருமை தங்கிய பழக்கமெனப் பழந்தமிழ். நூல்களில் காணப்படுகிறது. குறளாசிரியர் கோரிய இந்த இரண்டு சீர்திருத்தங்களும் மனித இயற்கைக்கு விரோதமா யிருப்பதால், அவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் நிறைவேறவில்லை.
இப்படி அனுபோகத்துக்கு ஒத்துவராததும், அனுபவித்துக் கூடாவொழுக்கமென நீக்கப்பட்டதுமான பல விஷயங்கள் குறளில் காணப்படுவதை இச்சிறிய ஆராய்ச்சி நூலின் விளக்கப் பட்டிருக்கின்றன. இவைகளிலிருந்து குறள் எனப்படுவது தெய்வ வாக்கல்ல, ஒரு உயர்ந்த அறிவுள்ள தமிழ் மகனால் எழுதப் பட்டது என்பது புலப்படுகின்றது. தெய்வ சிருஷ்டியானால் மனிதன் தன் அறிவால் அதை ஆராய்ச்சி செய்ய முடியாது. ஆரியவேதமும், கிறிதுவ பைபிளும், இலாமி குரானும் தெய்வ வாக்கானபடியால் அவை மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவையாகும். அவற்றை வைத்து வணங்கி, அவற்றில் உள்ளவைகளை அப்படியே ஒப்புக்கொள்வதுதான் மனிதன் கடமையாகும். ஆனால் குறளை அம்மாதிரித் தலைவணங்கி அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தமிழன் குறளைக்கண்டு மிரளாமல், தன் சுய சிந்தனையால் அதனை அலசி ஆராய்ந்து பார்த்து, பழங்காலத்துத் தமிழன் என்ன என்ன எண்ணங்களை எண்ணினான், என்னென்ன பழக்கங்களைக் கையாண்டு எவ்வித வாழ்க்கை நடத்தினான், அவன் முன்னேற்றம் அடைய எந்த மாதிரியான சீர்திருத்தங்கள் வேண்டுமென்று ஆசைப்பட்டான், என்ற உண்மைகளைச் சித்திரத்தில் காண்பதைப் போலக் குறளில் கண்டு ஆனந்திப்பான். இம்முறையினாலேயே தமிழன் பண்டைப் பெருமையும், குறளாசிரியரின் உன்னத நிலைமையும் பிரகாசிக்கும்.
S. ராமநாதன்



