
வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்
10. சிரார்த்தம்
தென்புலத்தார், தெய்வம்,விருந்து, ஒக்கல், தான் என்று ஆக்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை. (43)
பிதிர்க்கள், தேவர்கள், அதிதிகள், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்திலும் செய்யவேண்டிய காரியங்களைத் தவறாமல் செய்வது இல்லறத்தில் இருப்பவனது கடமை.
பிதிர்க்கள் தென்றிசையில் வாழ்கின்றவர்கள், தெய்வத் தன்மையுடையவர்கள்; இல்லறத்தில் உள்ளவன் செய்யும் சிரார்த்தங்களின் மூலமே அவர்கள் திருப்தியடைவார்கள். இன்றேல் அவர்கள் வருந்துவார்கள்.
துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. (42)
சந்நியாசிகளுக்கும், ஏழைகளுக்கும், இறந்தவர்களுக்கும் இல்லறத்தில் வாழ்பவன்தான் துணையாவான்.
சந்நியாசிகளுக்கும் ஏழைகளுக்கும் உணவளித்துக் காக்க வேண்டும்; இறந்தவர்களுக்கு சிரார்த்தம் செய்வதன் மூலம் அவர்கள் ஆன்மாவைத்திருப்தி செய்யவேண்டும்.
மேலே காட்டிய இரண்டு பாடல்களிலும் சிரார்த்தம் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றது.



