
வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்
4. ஜாதி
ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (133)
தன் குலாச்சாரத்தை அனுசரிப்பதே நல்ல குடியில் பிறந்ததற்கு அடையாளம். அவ்வாசாரத்தைக் கைவிடுதல் அவனை, அவன் பிறந்த குலத்தைக் காட்டிலும்இழிந்த குலத்தில் பிறந்தவனாக, ஆக்கிவிடும்.
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும், பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். (134)
பிராமண குலத்திலே பிறந்தவன் தன் வேதத்தை மறந்து விட்டாலும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும், ஆனால் தன் குலாச்சாரத்திலிருந்து தவறி விடுவானாயின் அவன் உயர்வு கெட்டுப்போகும்.
பிராமணன் வேதத்தை மறந்தாலும் குலாச்சாரத்தை மறக்கக் கூடாது.
இந்த இரண்டு பாடல்களிலும் ஒவ்வொருவனும் தன் தன் குல தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும், குல தர்மத்தைக் காப்பாற்றுவது தான் பெருமை, குல தர்மத்தைக் காப்பாற்றாதவன் இழிந்தவனாவான், என்ற கருத்து அமைந்திருப்பதைக் காணலாம்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543)
பிராமணர்களின் வேதத்திற்கும், வேத தர்மங்களுக்கும் பாதுகாவலாய் நின்றது மன்னவன் செங்கோல் ஆட்சி.
ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல்மறப்பர்,
காவலன் காவான் எனின். (560)
அரசன் சரியானபடி தேசத்தைக் காப்பாற்றா விட்டால் பசுக்களினால் வரும் பலன் குறையும்; ஆறுவகைத் தொழில்களையுடைய பிராமணர்கள் தங்கள் வேதத்தையும், தர்மத்தையும் மறந்து விடுவார்கள்.
பிராமணர்களுக்குரிய ஆறுவகைத் தொழில்; வேதம் ஓதுதல்; வேதத்தைச் சொல்லிக் கொடுத்தல்; யாகம் செய்தல்; யாகம் செய்து வைத்தல்; பிறருக்குப் பொருள் கொடுத்தல்; பிறர் கொடுக்கும் பொருளை வாங்கிக் கொள்ளுதல்.
பிராம்மணர்களையும், வேதங்களையும், வேத ஆச்சாரங் களையும் காப்பாற்ற வேண்டியது ஒரு நல்ல அரசாட்சியின் கடமை.
கொடுங்கோல் ஆட்சியில் பசுக்கள் வளர்வதில்லை; பிராமணர்கள் வேதம் ஓத மாட்டார்கள்; தங்கள் தர்மங்களையும் மறந்து விடுவார்கள். இதனால் நாட்டுக்குத் தீமையுண்டாகும்.
மேலே காட்டிய இரண்டு பாடல்களின் மூலம் இக்கருத்துக்களைக் காணுகின்றோம்.
இந்த இரு குறள்களிலும் பிராமண வருணம் ஒன்று உண்டு என்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால், அடுத்த வருணங்களாகிய க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணங்களையும் திருவள்ளுவர் ஒப்புக் கொள்ளுகிறார். ஆனால் வெளிப்படையாக மற்ற வருணங்களைப் பற்றிச் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் குல ஒழுக்கத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்று கூறுவதன் மூலம் மற்ற வருணங்களையும் ஒப்புக்கொள்ளுகிறார்.
வருண தர்மத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்று சொல்லுவதற்கும், குல ஒழுக்கத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதற்கும் பொருளில் வித்தியாசம் இல்லை; சொல்லில்தான் வித்தியாசம்.
இல் பிறந்தார்கண் அல்லது இல்லை, இயல்பாகச்
செப்பமும் நாணமும் ஒருங்கு. (951)
நல்ல நடத்தையும், ஒழுக்கந் தவறி நடப்பதற்கு வெட்கப் படுதலும் பூரணமாக உயர்ந்த குடியில் பிறந்தவர்களிடந்தான் காணப்படும்; மற்றவர்களிடம் இக்குணம் தானாகக் காணப்படாது.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார். (952)
உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் ஒழுக்கம், உண்மை, நாணம் இம்மூன்றிலிருந்தும் தவறமாட்டார்கள்.
நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மைக் குடிக்கு. (953)
உண்மையான உயர்ந்த குடியில் பிறந்தவர்க்குத் தன்னிடம் வரும் ஏழைகளைப் புன்சிரிப்புடன் வரவேற்றல், அவர்க்கு வேண்டியதைக், கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், தன்னிலும் கீழ்ப்பட்டவரைக் கேவலமாகப் பேசாமை இந்த நான்கு குணங்களும் உரிமையானவைகள் என்று கூறுவர்.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். (954)
அளவற்ற கோடிக்கணக்கான செல்வம் கிடைப்பதா யிருந்தாலும் உயர்ந்த குடியில் பிறந்தவர் தம் ஒழுக்கம் கெடும் படியான காரியங்களைச் செய்யமாட்டார்கள்.
வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப் பிரிதல் இன்று. (955)
கொடுப்பதற்குரிய செல்வம் குறைந்துபோன காலத்திலும் பழமையான உயர்ந்த குடியில் பிறந்தவர்களின் குணம் கெட்டுப் போகாது.
சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற
குலம்பற்றி வாழ்தும் என்பார். (956)
குற்றமற்ற குலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்கின்றோம் என்று சொல்லுபவர்கள், தரித்திரம் காரணமாகவும் தகாத காரியங்களைச் செய்யமாட்டார்கள்.
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. (957)
உயர்ந்த குடியில் பிறந்தவர்களிடம் உள்ள குற்றம், வானத்தில் உள்ள சந்திரனிடம் காணப்படும் கருமையைப் போல் எல்லோர்க்குந் தெரியும். ஆதலால் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் ஒழுக்கந் தவறக்கூடாது.
நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். (958)
ஒருவனுடைய நல்ல குணங்களுக்கிடையே, அன்பில்லாமை காரணமாக உண்டாகின்ற கொடுஞ் செயல்கள் காணப்பட்டால் அவனைப்பற்றிச் சிந்திக்கத் தோன்றாது; அவன் பிறந்த குலத்தைப் பற்றியே சந்தேகம் தோன்றும்.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும், காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல். (959)
நிலத்தின் தன்மையை அதில் முளைத்த பயிர் காட்டி விடும். உயர்ந்த குலத்தில் பிறந்தவரின் குணத்தை அவர் பேசும் சொற்கள் காட்டிவிடும்.
மேலே காட்டப்பட்ட பாடல்கள் குடிமை என்னும் அதிகாரத்தில் உள்ளவை. உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் தாம் நல்லொழுக்க முடையவர்களாயிருப்பார்கள்; ஒழுக்கந் தவறி நடக்கமாட்டார்கள்; கெட்ட காரியங்களைச் செய்ய மாட்டார்கள்; கெட்ட சொற்களைப் பேசமாட்டார்கள்; கீழான குலத்தில் பிறந்தவர்கள் தாம் கெட்ட காரியங்களைச் செய்வார்கள்; இக் கருத்துக்கள் மேற்காட்டிய குறள்களிலே காணப்படுகின்றன. இதனால் பிறப்பினால்தான் மக்களுக்குள் உயர்வு தாழ்வுகள் உண்டாகின்றன; நல்லொழுக்கம் தீயொழுக்கம் தோன்றுகின்றன; என்பது திருவள்ளுவர் கருத்தென்று உணரலாம்.
இங்கே திருவள்ளுவர் குறிப்பிட்டிருக்கும் குடிமையென்பது ஜாதியல்ல. அதாவது பிராமண க்ஷத்திரிய, வைசிய, சூத்திர ஜாதிகளைக் குறிப்பிடவில்லை. தனிப்பட்ட ஒரு பரம்பரையைக் குடியென்றும், குலம் என்றும் குறிப்பிடுகிறார்.
இவர் கருத்துப்படி பிராமணர்களுக்குள் உயர்ந்த குடி, தாழ்ந்த குடி உண்டு; க்ஷத்திரியர்களுக்குள் உயர்ந்த குடிதாழ்ந்த குடி உண்டு; வைசியர்களுக்குள் உயர்ந்த குடி தாழ்ந்த குடி உண்டு; இதைப் போலவே சூத்திரர்களிலும் உயர்ந்த குடி தாழ்ந்த குடி உண்டு. இந்த உயர்ந்த குடி தாழ்ந்த குடி வேற்றுமை கூட பிறவியினால் தான் ஏற்படுகிறது என்பது அவர் கருத்து. ஆகவே பிறப்பினால் உயர்வு தாழ்வுடைய பல ஜாதிகள் உண்டு என்னும் கொள்கையைத் திருக்குறள் வலியுறுத்துவதைக் காணலாம்.
பிறப்பு ஒக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யால். (972)
எல்லா வுயிர்களுக்கும் பிறப்பில் வேற்றுமையில்லை. ஆனால் அவரவர்கள் செய்கின்ற தொழில் வித்தியாசத்தால் உயர்வு தாழ்வு உண்டு.
இக்குறள் பெருமையென்னும் அதிகாரத்திலே கூறப் பட்டள்ளது. பிறப்பிலே மக்களுக்குள் வேறுபாடில்லை என்று இதில் சொல்லப்படவில்லை. உயிர்ப் பிராணிகள் எல்லா வற்றிற்கும் பிறக்கும் இயல்பு ஒன்று; பிறப்பில்லாமல் எந்த உயிரும் வாழ்வதில்லை என்றுதான் கூறப்படுகின்றது. மக்களுக்குள் பிறப்பினால் வித்தியாசம் இல்லை; பிறப்பினால் ஜாதி உண்டாகவில்லை; என்று இக்குறளுக்குப் பொருள் கூற இடமில்லை.
இக்குறளின் கருத்தைச் சிலர் சரியாகப் புரிந்துகொள்வ தில்லை. திருவள்ளுவர் மக்களுக்குள் பிறப்பினால் வித்தியாசம் இல்லை என்று கூறிவிட்டார்; அவர் ஜாதி வித்தியாசத்தை ஒப்புக் கொள்ளவில்லை; வருணாசிரம தருமத்தை ஆதரிக்க வில்லை; பிறப்பினால் வேற்றுமை யில்லையென்பதே தமிழர் நாகரிகத்தின் சின்னம்; இதுவே தமிழருடைய தனிக் கலாச்சாரம். திருவள்ளுவர் தமிழருடைய தனிப்பட்ட கலாச்சாரத்தை இக்குறளின் மூலம் எடுத்துக் காட்டி விட்டார்; என்று சிலர் கூறுகின்றனர். திருக்குறளில் பெரும் பாகத்தில் ஒப்புக்கொள்ளப் பட்ட கொள்கையை இந்த ஒரு குறளில் மறுக்கப்பட்டதாகக் கூறுவது பொருத்தமற்றது.
மக்களுக்குள் பிறப்பினால் வேற்றுமையில்லை என்று அர்த்தம் பண்ணுவதா இருந்தால் இது திருவள்ளுவரால் சொல்லப்பட்டதாகக் கருத முடியாது; இக்கருத்துடைய வேறு யாரோ ஒருவர் இக்குறளைத் திருக்குறளிலே நுழைத்ததாகத்தான் எண்ண வேண்டும். இக்குறள் திருவள்ளுவரின் வாய்மொழிதான் என்று தீர்மானித்தால் வருணபேதத்தை ஆதரிக்கும் திருவள்ளுவருடைய கருத்திற்கு விரோதமில்லாமல்தான் பொருள் கூறவேண்டும். ஆதலால் இதற்குப் பரிமேலழகர் கூறியிருக்கும் உரைதான் பொருந்தும், `பிறப்பொக்கும் என்பதற்கு அவர் சொல்லியிருக்கும் பொருளைப் பாருங்கள்.
வினைவயத்தால் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று, அதன் பயன் அனுபவித்தல், எல்லா வருணத் தார்க்கும் ஒத்தலின் பிறப்பு ஒக்கும். இது பரிமேலழகர் உரை.
எந்த வருணத்தாரும் பூர்வவினைகாரணமாகவே பிறந்தனர். அந்த வினைப்பயனை அனுபவிக்கவே பிறந்தனர். ஆதலால் எல்லாவுயிர்களும் பிறப்பதற்குக் காரணமா யிருந்தது. முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை என்ற ஒன்றுதான். அதில் வேற்றுமை யில்லை. இதுவே பரிமேலழர் கருத்து. வருணபேதம் உண்டு என்பவர்கள் இக்கருத்திலேயே பிறப்பு ஒன்று என்று கூறுகின்றனர்.
பிறப்பிலேயே உயர்வு தாழ்வு உண்டு; பிறவியினால்தான் நல்லகுணம் கெட்டகுணம், உண்டாகின்றன; பிறந்த குலத்திற் குரிய தொழிலைச் செய்வதுதான் மக்கள் கடமை; என்ற விஷயங்களை, ஒழுக்கம், குடிமை, முதலிய அதிகாரங்களிலே திருவள்ளுவர் கூறியிருக்கிறார். இவற்றை முன்பே காட்டியிருக்கிறோம். இத்தகைய கொள்கையை யுடையவர் பிறப்பொக்கும் என்பதைப் பரிமேலழகர் கூறிய அர்த்தத்தில் தான் சொல்லியிருக்க வேண்டும். இல்லா விட்டால் திருவள்ளுவர் மொழி முன்னுக்குப் பின் முரணானது என்ற குற்றத்திற்கு இடமாகும்.
பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் மூன்று வருணத்திலும் பிறந்தவர்கள் பூணூல் அணிவதற்குமுன் சூத்திரர்களாகவே, எண்ணப்படுகின்றனர். பூணூல் அணிந்து, வேதம் ஓதித் தங்கள் கர்மானுஷ்டானங்களைப் பின்பற்றத் தொடங்கியபிறகுதான் பிராமணப் பெற்றோருக்குப் பிறந்தவன் பிராமணன் ஆகிறான். க்ஷத்திரியப் பெற்றோருக்குப் பிறந்தவன் க்ஷத்திரியனாகிறான், வைசியப் பெற்றோருக்குப் பிறந்தவன் வைசியன் ஆகிறான். அதுவரையிலும் இவர்களுக்கும் சூத்திரர்களுக்கும் பிறப்பில் வித்தியாசம் இல்லை.
இந்தக் காரணத்தாலேயே இந்த மூன்று வருணத்தாருக்கும் ‘துவிசர்’ என்று பெயர். துவிசர் என்றால் இருபிறப்பாளர் என்று அர்த்தம். பரிமேலழகர் கூறியபடி இவர்கள் வினைவசத்தால் வினைப்பயனை அனுபவிக்கப் பிறந்தவர்கள்.
மேலே காட்டியவைகளைக் கொண்டு, திருவள்ளுவர் எந்த வகையிலும் வருணபேதத்தைக் கண்டிக்கவில்லை; வருண பேதத்தை, ஜாதி முறையை, குலாச்சாரத்தை ஒத்துக்கொள்கிறார் என்பதை அறியலாம்.
பிறப்பிலே உயர்வு தாழ்வு உண்டு; உயர்ந்த ஜாதியில் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களால்தான் சிறந்த காரியங்களைச் செய்யமுடியும்; என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் திருவள்ளுவரின் பிறப்புக்கதை கூட எழுதப் பட்டிருக்கிறது என்று கூறலாம்.
திருவள்ளுவர் ஆதி என்ற புலைச்சிக்கும் பகவன் என்ற பிராமணருக்கும் பிறந்தவர். பகவன் என்பவர் வேதமோதிய சிறந்த ஒழுக்கமுடையவர்; வினைவசத்தால் புலைச்சியின் மீது மோகங் கொண்டார். அவருக்குப் பிறந்தவர்கள் இடைக்காடர், அதிகமான், ஔவை, உப்பை, உறுவை, வள்ளி, திருவள்ளுவர் முதலியவர்கள். திருவள்ளுவர் வளர்ந்தது வள்ளுவர் வீட்டில்; ஆனால் அவருடைய பிறப்பு உயர்ந்ததாக இருந்ததால் அவர் பல நூல்களையும் கற்றார்; அறிவு ஒழுக்கங்களில் உயர்ந்து விளங்கினார்; திருக்குறள் என்னும் சிறந்த நூலை எழுதினார்.
இது ஒரு கற்பனைக்கதை யென்பதே பலர்கருத்து. ஆனால் ‘உயர்ந்த பிறப்புடையவர்களின் வாயிலிருந்துதான் சிறந்த சொற்கள் தோன்றும்’ என்னும் திருவள்ளுவருடைய கொள்கையை ஒட்டி எழுந்ததுதான் இக்கதை.



