
வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்
7. மறுபிறப்பு
பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார்
இறைவன் அடி சேரா தார். (10)
கடவுளின் பாதத்தை அடைந்தவர் பிறப்பு என்னும் பெரிய சமுத்திரத்தைத் தாண்டுவர்; கடவுளின் பாதத்தை அடையாதவர் பிறவிக் கடலைத் தாண்ட மாட்டார்கள். அடிக்கடி பிறப்பார்கள்; இறப்பார்கள்.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து. (126)
ஆமை தனது, கால்கள் தலை ஆகிய ஐந்தையும் தனது உடம்புக்குள் அடக்கிக் கொள்ளுவதுபோல், ஒருவன் ஒரு பிறப்பில் உடம்பு, வாய், கண், மூக்கு, காது என்னும் ஐந்தையும் அடக்குவதற்கு வல்லமை பெறுவானாயின், அவ்வல்லமை அவனுக்கு ஏழு பிறப்பிலும் பாதுகாப்பு அளிக்கும்.
ஒரு பிறப்பில் ஒருவன் செய்த கர்மத்தின் பயன் ஏழுபிறப்பு வரையிலும் அவனைத் தொடரும் என்பது இதன்கருத்து.
உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (339)
ஒருவனுக்குச் சாவு ஏற்படுவது தூக்கம் வருவதைப் போன்றது; செத்த பிறகு மீண்டும் பிறப்பது தூங்கி விழிப்பதைப் போன்றது.
பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு. (351)
பொய்ப்பொருளை மெய்ப்பொருள் என்று நினைக்கின்ற அறியாமையால், துன்பத்தைத் தரும் மறு பிறப்பு உண்டாகின்றது.
கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்,
மற்று ஈண்டு வாரா நெறி. (356)
தத்துவ சாதிரங்களைக் கற்று இவ்வுலகில் உண்மைப் பொருளைக் கண்டறிந்தவர்களே, மீண்டும் இவ்வுலகில் பிறவாத நெறியை அடைவர்.
பிறப்பு என்னும் பேதமை நீங்கச், சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (358)
பிறப்புக்குக் காரணமாகிய அறியாமை நீங்கவேண்டுமானால், சிறந்த உண்மைப் பொருளைக் காண்பதுதான் அறிவுடைமையாகும்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை, மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (362)
பிறவியினால் வருந் துன்பத்தை அறிந்தவன், தனக்கு ஏதேனும் நன்மைவேண்டுமென்று விரும்புவானாயின் மீண்டும் பிறக்காமலிருப்பதையே வேண்டுவான்; ஒன்றிலும் பற்றில்லாமல் இருப்பதை விரும்பினால் பிறவாமை கிடைக்கும்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து. (398)
ஒரு பிறப்பில் ஒருவன் படித்த கல்வி அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவிசெய்யும்.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர் கொண்டனன். (1315)
என் காதலியைப் பார்த்து, இப்பிறப்பில் நாம் பிரிய மாட்டோம் என்றேன். உடனே, மறுபிறப்பில் நாம் பிரிந்து விடுவோம் என்று சொல்லியதாக எண்ணிக்கொண்டாள், அவள் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.
இப்பாடல்கள் எல்லாம் புனர்ஜென்மம் உண்டு என்ற கொள்கையை ஒப்புக்கொள்கின்றன, மறுபிறப்புக் கொள்கையை ஒப்புக்கொள்ளும் மற்றும் பல பாடல்களும் உண்டு.



