என்னுரை
சாவி

என்னுரை
சாவி

என்னுடைய கெழுதகை நண்பரும் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பவருமான திரு.சாவி அவர்கள், ”குங்குமம்’ இதழில் கிழைமைதோறும் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளையும், மேலும் சில கட்டுரைகளையும் தொகுத்து ஒரு நூலாகத் தந்துள்ளார். அவர் குங்குமத்தில் எழுதத் தொடங்கும்போதே, அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று என்னைக் கேட்டபோது, நான்தான் அவரிடம் “என்னுரை” என்ற தலைப்பிலேயே கிழமைதோறும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என்று கூறியிருந்தேன். அந்தத் தலைப்பிலேயே “என்னுரை” என்ற பெயரிலே இந்த நூல் வெளியிடப்படுகின்றது. இந்த நூலினையும் நான்தான் வெளியிடவிருக்கின்றேன். அந்த அளவிற்கு திரு. சாவி அவர்களுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

இந்த நூலிலே எஸ்.எஸ்.வாசன், ராஜாஜி, ஜி.டி.நாயுடு,பெரியார், மகாத்மா காந்தி, காமராஜ், சதாசிவம் ஆகியோரைப் பற்றி ஒவ்வொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த வரிசையிலே என்னைப் பற்றியும் ஒரு இதழிலே சாவி எழுதத் தவறவில்லை. என்னை எந்த அளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு அதிலே அவர் எழுதியிருக்கின்ற ஒரு பகுதியைப் படித்தால் தெரிந்து கொள்ள முடியும். திரு.சாவியைப் பார்த்து பல பேர் “எப்படி இந்த வயதிலே உங்களால் அயராமல் உழைக்க முடிகிறது” என்று கேட்டதற்கு அவர் கூறுகிறார் – “சிரமமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஏற்றுக்கொண்ட பொறுப்பைச் செய்து முடிக்க வேண்டும், எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வோடு செய்து வருகிறேன்” என்று கூறியதோடு நிறுத்தாமல், “இது கலைஞர் அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்” என்று முடித்து எனக்குப் பெருமையைச் சேர்த்திருக்கிறார்.

கர்நாடக இசையிலேயும் திரு.சாவி அவர்களுக்கு தனித்த ஆர்வமும் ஈடுபாடும் உண்டு என்பதை வெளிப்படுத்த, அந்தத் தலைப்பிலும் ஓர் அருமையான கட்டுரை தீட்டி பழங்காலத்து சங்கீத வித்வான்களை நினைவூட்டியிருக்கின்றார்.

ராஜாஜி பற்றி எழுதும்போது, விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான நில மானியம் கோரி தான் எழுதிய கடிதத்திற்கு முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்களே பதில் எழுதியிருப்பதைக் கண்டு, நிலம் வழங்கியிருப்பார் என்ற ஆவலோடு கடிதத்தைப் பிரித்துப் படித்ததாகவும், அதில் ராஜாஜி, “நிலம் கேட்டு உங்கள் தியாகத்தை விலை கூற வேண்டியது அவசியம் தானா?” என்று எழுதியிருப்பது, நம் நெஞ்சத்தைத் தொடுகின்றது. நவகாளியில் காந்தியடிகள் பாத யாத்திரை தொடங்கிய நேரத்தில் “கல்கி” இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சாவி அவர்கள் அங்கே சென்றது பற்றியும், உத்தமர் காந்தியைச் சந்தித்தது பற்றியும் உருக்கமாக எழுதியிருப்பதும் இந்நூலுக்குத் தனிச் சிறப்பாகும்.

திரு.சாவி அவர்கள் தொடராக “குங்குமம்” இதழிலே எழுதியபோதே ஒவ்வொரு கிழமையும் நான் படித்து ரசித்தவைதான் என்றாலும், ஒட்டுமொத்தமாக நூல் வடிவிலே காணும்போது படிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் உரிய பல செய்திகளை அவர் தொகுத்துத் தந்திருப்பது போற்றுதற்குரியது.

சாவி அவர்களின் எழுத்துக்கள் பல நூல்களாக வெளிவந்திருக்கின்றன. நவகாளி யாத்திரை, சிவகாமியின் செல்வன், வாஷிங்டனில் திருமணம் என்ற அரிய நூல்களின் வரிசையிலே இந்த ‘என்னுரை’ என்ற நூலும் ஒன்றாக விளங்கிடும் என்பதில் சந்தேகமில்லை; அயராது தொடர வேண்டும் அவருடைய எழுத்துப்பணி என்று வாழ்த்துகிறேன்.

மு. கருணாநிதி

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *