
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
9. “பேஷையா!”
அக்காலம் சுசீந்திரம் ஆறுமுகம் பிள்ளை, சதாவதானியாகப் புகழ்பெற்று விளங்கினார். ஒரு நாள் அவர் சேஷையர் தலைமையில் தசாவதானம் நடத்திக் காட்டினார். சபை வியந்து போற்றியது. தலைவர் சேஷையர், “சபாஷ், பேஷ்” என்று மெச்சித் தேசிகவிநாயகம் பிள்ளையின் அபிப்பிராயத்தைக் கேட்டார். உடனே ஓர் அரிய கவி புறப்பட்டது. அன்புப் புலவர் அக்கணமே எழுந்து, நின்று,
“ஆறுமுகம் பிள்ளை அவதானங் கண்டெளியேன்
வேறுமுக மன்கூற வேண்டுமோ?- தேறுமதிச்
சேஷையா மெச்சித் திருவாய் மலர்ந்து “ஸபாஷ்
பேஷையா“ என்ற பிறகு—“
என்று பாடினார். சபை இந்த அவதானத்தைக் கண்டு திகைத்து வியந்தது! என்ன பொருத்தமான பாட்டு! இப்படி அவர் பாடிய பாடல்கள் கணக்கற்றவை யாகும்.



