
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
17. “மலரும் மாலையும்”
தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடல்களை “மலரும் மாலை யும்” என்ற பெரிய நூலாகப் புதுமைப் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். அந்நூல் மூன்று பதிப்புகள் ஆகி ஏராளமான தமிழர் உள்ளத்திற்கு இன்பமளித்து வருகிறது. அதைப்பற்றிய ஆராய்ச்சி பல பத்திரிகைகளில் வந்து விட்டன. ஸ்ரீ பி .ஸ்ரீ அவர்கள் அதை ஆனந்தக் களிப்புடன் கொண்டாடித் தினமணியில் எழுதிய கட்டுரைகளை நேயர்கள் படிந்திருக்கலாம்; இங்கே நான் ஆராய்ச்சியிற் புகவில்லை. ஒரு கவியை ரசாயனப் பாகுபாடு செய்து கொண்டிருப்பதை விட, அறிந்து சுவைத்தலே பலனைத் தரும். ஆதலால் தேவியின் கவிகளை அப்படியே படித்துப் படித்து இன்புறவேண்டும் என்று வாசகர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். அவரது இனிய முதிய பழுத்த வாக்குகளில் சிலவற்றை மட்டும் கீழே குறித்து, இந்த வரலாற்றை முடிக்கிறேன்.
“நாடிப் புலங்கள் உழுவார் கரமும் நயவுரைகள் தேடிக் கொழிக்குங் கவிவாணர் நாவுஞ் செங்கருணை ஓடிப்
பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்து நடம்
ஆடிக் களிக்கும் மயிலே உன்பாதம் அடைக்கலமே!”
இது குமரகுருபரர் வாக்கைப் போல் உள்ளது. தமிழிலேயே பல்லாண்டு ஊறிய நாவே இப்படி அழகாகப் பாட முடியும். இந்த ஒரு பாட்டே தேவியின் புகழைத் தமிழ் உள்ளமட்டும் காக்கும். இப்படி எத்தனையோ அரிய கவி மலர்கள் தேவியின் வாக்கிற் பூத்து, மலரும் மாலையு மாகக் குலுங்குகின்றன!



