
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
16. பொன்னாடை
தமிழர் உள்ளத்தில் (சிதம்பரநாத முதலியார் செயலால்) தேவியின் கவிதைகள் ஆழ்ந்து பதிந்தன. அவரைப் பழைய முறையில் ஊர்வலஞ் செய்து, பொன்னாடை போர்த்திச் சன்மானம் வழங்கக் காரைக்குடிச் செல்வர் முயன்றனர். அந்த முயற்சி ஒருநாள் நிறைவேறியது. அதற்கும் தூண்டுகோலா யிருந்தவர் சிதம்பரநாத முதலியார் அவர்களே. தமிழர், தேவியின் கவிவாணியைச் சிறப்பிக்கத் துடித்தனர். முடிவில் ராஜா ஸர். அண்ணாமலை செட்டியார் அவர்களால் ஆத்தங்குடியில் தேசிகவிநாயகம் பிள் ளைக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டது. அப்போதும் தேவி மிகவும் பணிவுடனே, “ஆனைக்குட்டிக்குப் போர்த்தும் ஆடையை ஆட்டுக்குட்டிக்குப் போர்த்தினீர்களே!” என்றார். தற்புகழ்ச்சி சிறிதும் இல்லாத அவர் உள்ளம் அப்படிப் பேசியதும் இயல்பே. தேசிகவிநாயகம் பிள்ளை காரைக்குடிக்கு வந்து, குமரன் ஆசிரியர் சொ. முருகப்பா அவர்களின் மகளிர் இல்லத்தில் அரசு நட்டு, காரைக்குடி நகர மாளிகையில் அரிய சொற்பொழி வாற்றினார். செட்டிநாட்டரசர் தமது அரண்மனையில் கவியை ஏற்று உபசரித்துக் காணிக்கை யளித்தார்; பின்பு வெள்ளிப் பாத்திரங்களும் பரிசளித்தார். தமிழர் உயிருடன் ஒரு கவியை ஆதரித்த பெருமையும் மிக்க அருமையே!
இன்று தேவியின் பெயரும் புகழும் தமிழ்நாட்டு மூலை முடுக்குகளிலெல்லாம் பரவியிருக்கிறது. எந்தப் பத்திரிகையும் எந்தப் புலவரும் அவரைப் போற்றுகின்றனர். ‘தமிழகத்தின் உயிர்க்கவிகளில் தேசிக விநாயகம் ஒருவர்’ என்பதை மறுக்க முடியாது.
1931-ல், தேவி பள்ளிக்கூட ஆசிரியர் வேலையினின்றும் ஓய்வு பெற்றார். அதுமுதல் அவர் உடம்பும், நோயால் வருந்தியது. எனினும், நோயைப் பாராட்டாமல் அவர் தமிழ்ப்பணி செய்தே வருகிறார். ஒருதடவை நீரழிவு நோயால் மிக்க வருந்தி உடல் விழுந்துவிடுமோ என்னுந் தறுவாயில் அவர் திருச்செந்தூர் முருகனை வேண்டிப் பாடினார். உடம்பு குணமானது; அதன்பிறகே பொன்னாடையும் வெள்ளிப் பரிசுகளும் வந்தன. இன்று தேவிக்கு எழுபதாண்டுகள் ஆகின்றன. அவர் முருகன் அருளால் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து, தமிழ்ப்பயிரை வளம் பெற வளர்க்க வேண்டும்.



