
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
2.பிள்ளைக் கவி
தேவி, சென்ற தாது வருடம் ஆடி மாதம் 14-ஆம் தேதி பிறந்தார்-(1876). அக்காலமே வேதநாயகம் பிள்ளை, மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வில்லியப்பக் கவிராயர், சிலேடைப்புலி பிச்சுவையர், கவிகுஞ்சரி பாரதி, கோபால கிருஷ்ண பாரதி முதலியோர் அரிய கவிபாடித் தமிழும் தமிழிசையும் வளர்த்தனர். அக்காலமே தமிழில் எளிய இயற்கை நடையும், உரை நடையில் இனிமையும் தளிர்த்தன; செய்யுளும் வசனமும் மறுமலர்ச்சிச் சோலையிற் காதல்கொண்டு உலாவின. அக்காலம் தாது வருடப் பஞ்சம் கொடுமையா யிருந்தாலும், வயிற்றுணவு குறைந் தும் செவிக்குணவு மிகுதியாக யிருந்தது. அக்காலத்திலே தான் நமது தேவி, தேரூரிற் பிறந்தார். அவரது வாழ்க்கைத் தேரும். மறுமலர்ச்சிப் பவனியை அணி செய்தது.
தேவியின் தந்தை சிவதாணுப் பிள்ளை, காலத்திற்கேற்ற ஆங்கிலம் பயின்ற சைவத் தமிழர். அவர் அழகிய பாண்டி புரம் உப்புப் பண்டகசாலையில் வேலை பார்த்தார். தமிழன்பும் சிவநேசமும் கொண்ட அன்னார் மனைவி ஆதிலட்சுமி யம்மாள், நாகபட்டணம் வேளாளர் மரபில் உதித்த பூங்கொடி; பரம்பரையாகத் தமிழைக் கொண்டே வாழ்ந்த வீட்டிற் பிறந்தவர். அவரது தந்தை மாணிக்க வாசகம் பிள்ளை, நிரம்பிய தமிழ்ப் புலமை யுடையவர்; அவர், ‘காரியந்தாதி” என்று ஒரு நூலும் பாடியதுண்டு.
தேசிய விநாயகம் பிள்ளை வீட்டில் செல்வமாக வளர்ந்தார்; உள்ளூர்ப் பள்ளிக்கூடத்திலேயே படிக்கத் தொடங்கினார். அப்போதே அவருக்குத் தமிழிலும் கவிதையிலும் ஆர்வம் பெருகியது. நல்ல பாட்டு, கவி யென் றால் கருத்தூன்றிக் கேட்பது பிள்ளையின் வழக்கமா விருந்தது. அக்காலம் தமிழர், கவிஞர்களை மிக்க மதித்துத் துதித்துச் சன்மானம் வழங்கி ஆதரித்தனர். பாண்டி நாட்டுக் கவி யொருவர் நாஞ்சில் நாட்டு நல்லார் மீது கவிபாடியும் கவிப்பிரசங்கம் செய்தும் பிழைத்து வந்தார். தமிழைப் போற்றும் சிவதாணு பிள்ளை, அக்கவியை வரவேற்று உபசரித்தார். கவி, பிள்ளையவர்களுக்குப் பாமாலை சூட்டினார். அதைப் பள்ளிக்கூடத்திலிருந்து மாலை வேளையில் வந்த தேசிகவிநாயகம் பார்த்தார். தந்தை படித்துக் காட்டினார். உடனே தேசிகத்திற்கும் அப்படிப் வேண்டும் என்று எழுச்சி பிறந்தது. தன் மனதில் உதித்ததைத் தந்தை செவிகுளிரக் கொட்டினான் மகன்! அக் கவியில், “நவகோடி நாராயணன் உப்புப் பண்டக சாலைக்கு, சிவதாணுப் பிள்ளைக்கனுகூலன், வீரபர நங்கை தேவி தானே …”.என்ற சில வார்த்தைகளே தேவி யின் நினைவில் இருக்கின்றன.
தேவிக்குத் தாமரைக் குளம் என்ற ஊரில் ஒரு பாட்டனார் உண்டு ; அருமையான பாட்டனார்; நிரம்பத் தமிழ் கற்ற கவிஞர்; அவர் இச் சிறுவனை அன்புடன் நேசித்துத் தம்முடன் பிரியமாக வைத்துக் கொண்டிருந்தார். அவர் பக்கத்திலேதான் தேவி படுத்துக்கொள்வது வழக்கம். கவிராயர் ஏதாவது கவி முணுமுணுப்பார். ஒருநாள் தேவி அவர் பக்கத்தில் படுத்தார். கவிராயருக்குத் தூக்கம் வரவில்லை; ஒலையில் எழுத்தாணி ஓடத் தொடங்கியது; கவியும் ‘மொணமொண’வென்று கேட்டது. ‘” ஏன் பாட்டையா, என்னை உறங்கவிடாமல் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறீர் ?” என்று கேட்டான் பையன். “சும்மா கெடலே” என்று பாட்டையா கவி யெழுதிக் கொண்டிருந்தார். பேரப்பிள்ளைக்கு அப்போதே அவரைப் போலத்தானும் பாடவேண்டும் என்று ஆர்வம் உண்டாயிற்று. அன்று கவிராயர் பாடி முடித்த “காரியந்தாதி” தேவிக்கு ஓர் எழுச்சி தந்ததென்னலாம். அவர் அன்றிரவு முணுமுணுத்த அடிகளில் “வஞ்சகப் பெட்டிக்குள் அஞ்சனத்துப் பொருள் வைத்து வளர்” என்ற அடிதான் தேவிக்கு நினைப்பிருக்கிறதாம்.



