
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
3. சா. போற்றிக்கண்ணு
தேவிக்குத் தந்தையும் பாட்டனாரும் கருத்துடன் தமிழ் கற்பித்தனர். ஆங்கிலமும் படித்துவந்தார் நமது கவிமணி அப்போது தேரூரைச் சார்ந்த வாணத்திட்டு மடத்திலிருந்த திருவாவடுதுறை மடத்தில், அரிய புலவர்கள் கூடியிருந்தனர். தேரூருக்கும் அந்த மடத்தில் கட்டளை யுண்டு. தேவி அடிக்கடி கட்டளைத் தம்பிரானைத் தரிசித்து வருவதுண்டு. அப்போதிருந்த சங்கரலிங்கத் தம்பிரான் நிரம்பத் தமிழ்ப்புலமையும் சைவ ஒழுக்கமும் வாய்ந்தவர். இவர் மதுரையில் சா. போற்றிக்கண்ணு என்பவனிடம் பணங்கொடுத்து, நல்ல உருத்திராட்சம் வாங்கியனுப்பச் சொன்னார். கண்ணு, பிறர் கண்ணில் மண்ணைத் தூவி வாயிலும் ஒருபிடி அள்ளிப் போட்டுக் கையிலிருப்பதைப் பறித்துச் செல்லும் பேர்வழி! அவன் பட்டப் பகலில் பலரை ஏமாற்றினான்; சாமியாரை ஏமாற்றுவதா அவனுக்குக் கடினம்? தம்பிரானுக்குத் தேவியின் கவித் திறமை தெரியும். “தம்பி, அந்தச் சா. போற்றிக் கண்ணு நம்மை ஏமாற்றினான்; அவனுக்கு ஒரு கவி பாடு” என் றார் தம்பிரான், தேவி உடனே ஒரு பாடலைச் செய்தார்:
“நெஞ்செரிய வயிறேங்க நினைக்கும்போது, நித்திரை கண் விட்டொழிய சாபோற்றிக்கண்ணு நீயே….. என்பதே நினைவிலிருக்கிறது. காக்கை யமர்ந்ததும் பனங் காய் விழுந்ததும் சரியாக யிருந்தது. தம்பிரான் இந்தப் பாட்டை எழுதித் தபாலில் போட்டார்; அது மதுரை சேருமுன்பே சா. போற்றிக்கண்ணு, கண்ணை மூடி எமலோகம் போய் விட்டான்! தேவி கவியைத் தம்பிரான் வியந்து கொண்டிருக்கும் போதே, சா. கண்ணு இறந்த செய்தி வந்தது. தம்பிரான் தேவியின் வாக்கைப் போற்றினார். இக்காலம் தேவியின் தந்தை காலமானார்.



