கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்

4. பலிமறுத்தல்

தேரூரில் நல்லமாடன் கோயில் உண்டு. அதற்குத் திருவிழாக் காலங்களில் ஆடு கோழிகளைப் பலியிடுவார் கள். ஒருதரம் தேவி தம் இளமையில் பள்ளித் தோழருடன் திருவிழாவில் பேய்க்கொடை (சிறு தெய்வங்களுக்கு ஆடு கோழி பலியிடுதல்) காணச் சென்றார். இரவில் அங்கே ஆடுகள் கதறின; கோழிகள் ‘ ஐயோ’ வென் றலறின : பலி பீடமெல்லாம் இரத்தம் ஓடியது. பூசாரியின் கல்மனம் மாடன் பெயரை வைத்துப் பல உயிர்களைக் கொன்றது. இளகிய மனங்கொண்ட தேவி, இதைக் காணச் சகிக்காமல் உளங்குழைந்தார். நண்பர்கள் பலியைக் கண்டித்துப் பாடச் சொன்னார்கள். இளம் புலவர் உடனே,

நாடியறம் தேடியிடும் நற்றேரூர் தன்னிலமர்
நல்லமாடனென்றும், மறவ னென்றும்,
கோடி பழி செய்த பெருங் கொலைஞர், வேதம்
கூறியதெனவே தெளிந்துகொண்டு
ஆடினார், ஆடறுத்தார், அள்ளியுண்டார், ஐயையோ
இக்கொடுமை அறிகி லேனே….”

என்று பாடினார். பாட்டு முழுதும் அவருக்கு நினைப் பில்லை. ஆசியசோதி (The Light of Asia) மொழிபெயர்ப்பில் இளம் உள்ளத்தில் தளிர்த்த கருணை, தமிழ்வாக்காக வருகிறது :

காட்டுப் புலியின் கொடுமைக் கஞ்சி உங்கள்
கால்நிழல் தங்கிய ஆடுகளை
நாட்டுப் புலியெனக் கொல்லுவதோ?–அந்த
நான்மறை போற்றிய நீதி ஐயா!”

மண்ணில் வளர்ந்திடும் புல்லை யுண்ணும் வான
மாரிபொழிந்திடு நீரை யுண்ணும்,
எண்ணி நீர் செய்யும் உதவியென்னாம் இதை
ஏனோ உணர்ந்திலீர் மானிடரே?”

நாகர்கோயில், முன்னே சமணபுரியாக யிருந்தது. இன்னும் அவ்வூர் நாகரம்மன் கோயில் தூண்களில் சமண பௌத்த சம்பந்தமான உருக்களைக் காணலாம். சில புத்த வுருக்களும் உண்டு.

புத்தேரி என்பதையும் சிலர் ‘புத்தபுரி’ என்பர்; அது சரியன்று. யோகீஸ்வரர் என்ற பெரியார் ஒருவர் சமாதியடைந்த ஊர் இது. இச்சமாதியிடத்தில் முப்பதடி உயரம் புற்று ஒன்று வளர்ந்திருப்பதால் இவ்வூர் புற்றேரி புற்றுச்சேரி, புத்தேரி என்றானது. ஆயினும் தேவிக்குப் புத்தர் கருணையில் பற்று உண்டு. ஆசிய சோதியே அதற்குச் சான்று. அக்காவியமே தேவியின் உள்ள மென்னலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !