
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
1. அன்புக் கவிமணி
அன்புக் கவிமணி, தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களுடன் என் உள்ளம் பல்லாண்டுகள் பழகியுள்ளது. அவருக்குக் கவிமணிப் பட்டம் கிடைத்திருக்கிறது. ஆனால் தேவியை (தேசிகவிநாயகம் பிள்ளையை) நினைக்கும்போது கொஞ்சுங் குழந்தையின் அன்பே என்முன் நிற்கிறது! ஆதலால் நான் அவரை, “அன்புப் புலவர், அன்புக் கவி மணி” என்கின்றேன். அவர் உள்ளம் அன்பு; அவர் சொற் கள் அன்பிற் குழைத்த அமுதம் ; அவர் கவிதைகள் கருணையிற் பூத்த அன்பிசை. அவரைக் கவிமணி என்பதை விட அன்புமணி என்பதே பொருந்தும்! அவர் உள்ளத்தில் ஓர் அன்புக் குழந்தை,
“பூமகளின் புன்னகை போல் பூத்திடுவோமே–கம்பன் பாமணக்கும் தமிழினைப் போல் பரிமளிப்போமே !”
என்று பாடுகிறது! தேவி இன்று எழுபது வயதுத் தாத்தா; ஆனால் உள்ளே ஏழு வயதுக் குழந்தையாகவே யிருக்கிறார் : வஞ்சமற்ற உள்ளம், கரவற்ற மனம். தமிழ்ப்பணி யென்றால் அவருக்கு வாலிபம் திரும்பிவிடும். நான் ‘சிலம்புச் செல்வம்’ என்ற நூலை எழுதியபோது, அவர் படுக்கையில் இருந்தார். அதை நான் அவர் பார்வைக்கு அனுப்பத் தயங்கினேன்.
“தயங்காமல் அனுப்புங்கள்; தாங்கள் செய்யும் தமிழ்ப் பணியில் எனக்கும் பங்கு உண்டல்லவா ?” என்று தாயகம் பேசி, என் கையெழுத்துப் பிரதிகளை முற்றும் பார்வையிட்டு அனுப்பினார். அந்த உதவியை நான் எக்காலமும் மறக்க முடியாது. இப்படி என் தமிழ்ப் பணிக்கு அவர் சிற்சில சமயம் அரிய துணை செய்ததுண்டு. அவரது ஆராய்ச்சித்திறமை வியக்கத் தக்கது.தேவி குழந்தைக் கவியாக யிருக்கலாம்; ஆனால் அவர் மூளை, பெரிய புலவர் மூளை. “தமிழர் வரலாறு” ஒன்று நான் தொகுத்த போது, தேவிக்கு ஒரு கடிதம் எழுதினேன். மறுவாரமே, வரலாற்றிற்கு வேண்டிய அரிய பல ஆதார நூல்களையும், சில அரிய யோசனைகளையும் எனக்கு எழுதினார். அக் கடிதத்தால் அவருடைய சரித்திர மூளையை அறிந்து வியந்தேன். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையைப் போன்றே, தேவியும் சரித்திர ஆராய்ச்சியிலும், கல்வெட்டு ஆராய்ச் சியிலும் சிறந்தவர். அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள “காந்தளூர்ச்சாலை” ஆராய்ச்சி, சிறந்த நூலாகும்.
உலகப் பெரியார் வரலாறுகளை யெல்லாம் எழுதி வைத்த நான், தேவியின் வரலாற்றையும் எழுத விரும்பி மன்றாடினேன். “தாங்கள், என் வரலாற்றை எப்படி எழுதுவது தகும்?” என்று தேவி என்னை அடக்கிவிட்டார். என் முயற்சியை நான் கைவிடவில்லை. தேவியின் அடக்கு முறையை மீறி, நாஞ்சில் நாட்டு நண்பர் சிலர் உதவியால் அவர் வாழ்க்கைப் பண்பை நன்கறிந்து கொண்டேன்; முதன்மையாகக் கவிஞர் உமைதாணுப் பிள்ளை அவர்களைத் தூண்டிவிட்டு, தேவியிடமே மெல்ல மெல்ல வரலாற்றுக் குறிப்புக்களைக் கேட்டு எழுதியனுப்பச் சொன்னேன். பல மாதங்கள் முயன்று ஒருவகையாகச் சில நல்ல குறிப்புகள் கிடைத்தன. அவற்றைக் கொண்டே இந்த வரலாற்றுச் சுருக்கத்தை எழுதி, அன்புப் புலவருக்கு நன்றிக் காணிக்கையாகச் செலுத்துகிறேன்.



