
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
5. கல்விப் பயிற்சி
தேவி, திருவாவடுதுறை ஆதீனம் கட்டளைத் தம்பிரா னாகிய சாந்தலிங்கனாரிடம் முறையாகத் தமிழ் பயின்று புலமை பெற்றார் ; திருநெல்வேலி உமையொருபாகக் குருக்களிடம் தீக்ஷை பெற்றார். சமாயாசாரியாரைப் புகழ்ந்து தேவி அப்போதே ஒரு வெண்பாப் பாடினார்:
“வேறு மொருதுணையான் வேண்டுவனோ வேணுவனந் தேறுமுமை யோர்பாகத் தேசிகனே – கூறுமெனக்
கெய்யாப் பிறவி யிருளகல நீயளித்த
பொய்யா விளக்கிருக்கும் போது.”
இக்காலம் இவர் பாடிய அழகம்மை ஆசிரிய விருத்தங்களும்,” சுசிந்தை மாலை”யும் இவரது புலமையைக் காட்டும்.
இவை சாந்தலிங்கத் தம்பிரான் விரும்பப் பாடியவை :
“ஆற்றுப் பெருக்கையொத் தழிகின்ற செல்வத்தை
அடைவதில் விருப்பும் இல்லேன்;
ஆண்டியாய் வேண்டிப் புசித்துண்டு நாடோறும்
அலைவதில் வெறுப்பு மில்லேன்;
காற்றுப் பெயர்ந்திடிற் காயமோ சூத்திரக்
கயிரற்ற பாவை; அதனால்,
காரியம் சிறிதேனும் உளதோ? உன் இருபதக்
கஞ்சமே தஞ்சமென்று
போற்றிப் பெரும்பேறு பெறுதற்கெ னுள்ளமெப்
போதுந் தவிக்குதம்மா!
பொங்கிடுங் குரவையிட் டெங்குமோ ரொலிசெய்து,
பொலிவாக மள்ளரெல்லாம்
சேற்றுப் பெருக்கூடு நாற்றைப் புதைக்கின்ற
செய்யகஞ் சூழும் ஊராம்,
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே,
தேவியழ கம்மை உமையே!”
இது தாயுமானவரின் “வளர்காதலிப் பெணுமையே” என்ற அரிய விருத்தம் போல் அமைந்திருக்கிறது. தேவியின் பழுத்த அனுபவமும், வேளாண்மையில் அவருக்கு உள்ள விருப்பமும், இயற்கைக் காட்சியின்பமும் இப்பாட் டில் தோய்ந்து கிடக்கின்றன.
“திங்களுன் கருணை காட்டும்; தீக்கணுன் வெகுளி காட்டும்;
கங்கையுன் பெருமை காட்டும்; கடுவுமுன் ஆண்மை காட்டும்;
சிங்கம் நுண் இடையைக் காட்டச் சிறையனம் நடையைக் காட்டும்;
மங்கையோர் பாகா, தாணு மாலயா, சுசிந்தை வாழ்வே!”
என்ற
விருத்தம் அப்பரின் தேவாரப் பண்பு கொண் டொலிக்கிறது!



