கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்

15. இரசிகமணி சிதம்பரநாத முதலியார்

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையைப்பற்றி எழுதும் போது, இரசிகமணி திரு. டி. கே. சிதம்பரநாத முதலியாரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. சிதம்பரநாத முதலியாரை என் வீரத் தோழர் ஸ்ரீ வ.வே.சு.ஐயர், ஒரு முறை “நாத முதலியார் ” என்றார்; அது மிகப் பொருத்தமானதே. சிதம்பரநாத முதலியார், கவிதைக் கலையை ஆழ்ந்து அனுபவிப்பவர். கம்பன் உள்ளம் படைத்த இரசிக சிகாமணி. அவருக்கு, ஒரு கவி உண்மை யென்று பட்டால் போதும்; அந்த நாதமணி எங்கும் அதிர ஒலிக்கும். தேசிகவிநாயகம் பிள்ளையின் கவிதை இன்று தமிழர் உள்ளத்தில் தக்க இடம்பெற்றதன் பெருமை, முதலில் நாத முதலியாரையே சேரும். தேவி, “ஏதோ குழந்தைகளுக்காகப் பாடினேன்” என்று புத் தேரிக் குடிலில் விநாயகப் பெருமான் முன் சும்மா இருந்தார்:

செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்கு
இந்த நூல் உரியதாய் என்றும் வாழ்கவே—

என்பது அவர் தமது அருமைக் காவியத்திற்கு அளித்த செய்தியாகும். சிதம்பரநாத முதலியாரே தேவியின் பாடல்களைத் தமிழகமெங்கும் ஒலித்தார். அவர் எந்தக் கூட்டத்திலும், எந்த மேடையிலும், எந்தச் சம்பாஷணை யிலும் தேவியின் கவியை முதலிற் பாடிக்கொண்டுதான் எழுந்திருப்பார். இரசிகமணி எனக்கு எழுதும் கடிதங்களிலும் தேவியின் பாடல்களைப் போற்றுவதுண்டு. முதிர்ந்த அனுபவம், தற்பெருமை யில்லாக் குழந்தையுள்ளம், வெள்ளை மனம், கவிச் சுவையிலேயே தோய்ந்த மூளை, நல்ல கவிஞர்களை ஓரகமில்லாமல் ஆதரிக்கும் பெருங் குணம் ஏனைய பூண்டவர் முதலியார். அவரால் தமிழ் மணம் பெற்றவர் பலராவார்: சென்னையில் அவர் இருந்த காலமெல்லாம் தமிழ்க் கலைக்குச் சுக்கிரதசைதான். அப்பு சாமி ஐயர் வீட்டிலும், தமது வீட்டிலும் அவர் நடத்திய கம்பன் கலை விருந்துகள் தமிழுக்கே புத்துணர்வளித்தன.

சிதம்பரநாத முதலியாரை, இரசிகரைப் படைத்த இரசிகர் என்னலாம். அவரால், ராஜாஜி, டாக்டர் திரு மூர்த்தி, ஸர் ஷண்முகம் முதலிய பல தமிழர், தமிழ்ச்சுவை யறிந்தார்கள். குறள் பொருட்பாலுக்கு ராஜாஜி செய்துள்ள அழகான மொழிபெயர்ப்பைப் படித்ததும், என் உள்ளம் சிதம்பரநாத முதலியாரின் தமிழ்க்காந்தத்திற் சென்றது. ராஜாஜி, திருக்குறளை இரசிக்கும்படி செய்தவர் இவரே. இத்தகைய சிதம்பரநாத முதலியார், கவிமணியின் கவிதைகளைத் தமிழர் நன்கு அறிந்து போற்ற, நீண்ட காலம் (சுமார் பன்னிரண்டாண்டுகள்) பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார். தேவியை இன்று போற்றும் கலைஞர், சிதம்பரநாத முதலியாரையும் போற்ற வேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !