கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்

14. அறிமுகம்

நான் தமிழ்க்குருகுலத்தில் இருந்தபோதுதான் தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பெயரைக் கேள்விப் பட்டேன். பூதப்பாண்டியிலிருந்தும் சுசீந்திரத்திலிருந்தும் நாகர்கோயிலிலிருந்தும் சில மாணவர் வந்து என்னிடம் படித்தனர். அவர்கள் என் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம், “ஐயா, எங்கள் தேசிகவிநாயகம் பிள்ளை அதைப் பாடினார் ; இதைப் பாடினார்; சிறு குழந்தைகளுக்கு நன்றாகப் பாடுவார் ; நல்ல புலவர்” என்றெல்லாம் புகழ்ந்தார்கள். பிறகு, “குமரன்” ஆசிரியர் சொ. முருகப்பா அவர்கள், கவியை நேரே பார்த்து வந்து மெச்சினார். நான் பிரமசாரிகளுடன் குமரிமுனைக்குச் சென்றேன்; வழியில் நாகர்கோயிலில் தங்கியபோது ஒருநாள் புத்தேரிக்கும் தேரூருக்கும் சென்றுவந்தேன். நாஞ்சை மாணவன் முத்துக்குமாரசாமி, “இதோ, எங்கள் தேசிகவிநாயகம் பிள்ளை வீடு” என்று காட்டினான். ஆனால் புலவர் அப்போது திருவனந்தபுரத்தில் இருந்தார். திருவனந்த புரத்திற்கு நான் சென்றிருந்தபோது அவரைப் பற்றி விசாரித்தேன். “மகிளாமந்திரம்” ஒன்று அங்கே உண்டு. அதைப் பார்க்கச் சென்றிருந்தபோது “இந்த ஊர் பெண் பாடசாலைத் தமிழையா, தேவி மிக்க நல்லவர்” என்று ஒரு பெண்மணி சொல்லக் கேட்டேன். அப்போது விடுமுறைநாளானதால் தேவி கன்னியாகுமரிக்குக் சென்றிருந்தார். நான் அவரைச் சந்திக்க முடியவில்லை. எனினும், தேசிகவிநாயகம் என் அன்பை அப்போதே கொள்ளை கொண்டார்.

அவர் பாடல்களை முதன் முதல் நான் குமரனில் கண்டு மகிழ்ந்தேன். பிறகு, கானவித்யா என்ற பத்திரிகையில் சில மொழிபெயர்ப்புக் கவிகள் வந்தன. பின்னால் கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், லக்ஷ்மி, தமிழ்நேசன் முதலிய பல பத்திரிகைகளில் தேவியின் பாட்டைக் கண்டு களித்தேன். என்னையும் அவரையும் ஒன்றுசேர்த்தது தமிழ்ப்பணிதான். அன்பு நிலயத்தார் எனது அன்பு மலர்களை முதன் முதல் அவருக்கே அனுப்பி வந்தனர்; சுத்தானந்த அடிகளின் உருவத்தைப் படத்தில் கண்டேன் ; உள்ளத்தை நூலில் கண்டேன்!” என்று போற்றி எழுதியிருந்தார் கவிமணி. அவர் அன்புரைகள் என்னை மிக்க மகிழ்வித்தன. எனது “இன்பமாலை”க்கும் “திருக்குறளின்பத்”திற்கும் “யோகசித்தி”க்கும் “உட லுறுதிக்’கும் அவர் எழுதியனுப்பிய புகழ்மாலைகளெல் லாம் தமிழன்னைக்குரிய மாலைகளாகும். அவற்றால் அவரிடம் என் அன்பு பெருகியது. “சிலம்புச் செல்வ” ஆராய்ச்சியின் போது அவரது நுண்ணறிவைக் கண்டு வியந்தேன், இன்னும் பல சந்தர்ப்பங்கள் எங்கள் உள்ளத்தை அன்பினாற் பிணைத்தன. “கவிக்குயில் பாரதியார்” நூல்களைப் பார்வையிடும் பணிகளில் இருவரும் பங்கு கொண்டோம். இவ்வாறு நட்புரிமை பெருகிவரும் நாளில், தேவியின் பாடல்களை அன்பு மலர்களாக அச்சிடவேண்டும் என்று முயற்சிசெய்து கொண்டிருந்தேன். நண்பரும் முன் வந்தனர். நான் சில பாடல்களைச் சேகரித்தேன்.

அப்போது ஒருநாள்எனக்கு ஒருநூல் வந்தது; ஆவலாகப் பிரித்தேன்; அதுவே “மலரும் மாலையும் “-தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடல்கள்! அத்துடன் அறிஞர் மு.அருணா சலம் ஒரு கடிதமும் எழுதியிருந்தார்; என் உள்ளம் கரை கடந்த மகிழ்ச்சி யடைந்தது! என் கண்முன்பே ஒரு தமிழ்க்கவியைத் தமிழர் போற்றிக் காணும் புண்ணியத்தை அடைந்தேன். பிறகு கலைமகளில் இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களின் ஆவேசமான புகழுரை வந்தது. அதுவே தேசிகவிநாயகம் பிள்ளையின் கவிக்குச் சிறந்த சன்மானமாகும். அன்றுமுதல் தேசிக விநாயகம் பாடல்கள் தமிழகத்தில் உலாவிப் பெரும்புகழ் பெற்று விளங்குகின்றன. தேவியின் கவித்திறனைச் செந்தமிழ்ப் புரவலர் உமாமகேசுவரனாரே மெச்சிப் போற்றிக் “கவிமணி” என்ற பட்டமளித்தார் என்றால், வேறு என்ன சொல்ல விருக்கிறது! பச்சையப்பர் கல்லூரியில் நடந்த புலவர் மகாநாட்டில், நமது கவிப் பிள்ளைக்குக் “கவிமணி” யென்ற பட்டம் பொருத்தமாக அளிக்கட் பெற்றது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !