
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
6. தமிழாசிரியர்
பிள்ளையவர்கள் ஆங்கிலப் பள்ளிக்கூடத்திற் பயின்று மெட்றிகுலேஷன் தேறியதும், F.A., வகுப்பிற் சேர்ந் தார். ஆனால் கல்லூரிப் படிப்பு முற்றுப்பெறவில்லை. அதற்குள் திருமணமும் ஆனது; குடும்பச்சுமையும் வந்தது. ஆதலால் தேவி போதனாமுறைப் பள்ளிக்கூடத்தில் பயின்று, செகண்டரி கிரேட் (Secondary Grade) உபாத்தியாயராகத் தேர்ச்சி பெற்று, கோட்டாறில் வேலைக்கமர்ந்தார்; பிறகு நாகர்கோயிலில் ஆசிரியரா யிருந்தார். அக்காலம் குழந்தைகளுக்காக இவர் பாடிய பாடல்கள் மிகப்பலவாம்.
‘பாலுக்குச் சீனியைப்போல்–பசுந்தமிழ்ப்
பாடலுக் கின்னிசைபோல்,
சோலைக்குப் பைங்கிளியே – உனது
துணையும் பெரிதேயம்மா!”-
என்று கிளியைப் பாடுவார். ஒருநாள்,
“பூமகளின் புன்னகைபோல் பூத்திடுவோமே–கம்பன்
பாமணக்கும் தமிழினைப்போல் பரிமளிப்போமே!”
“கரும்பினிலும் இனியரசம் கருதிவைப்போமே-
அதை விரும்பிவரும் பாணருக்கு விருந்தளிப்போமே!”-
என்று மலர்களைப் பேசவைப்பார். இப்பாட்டு தேவி பாடலின் சிகரம் என்னலாம். தேசிகவிநாயகம் பிள்ளை பாடல் என்றால், சிறுவருக்குத் தேனும் பாலுமாகத்தான் இனிக்கும்! மாணவ மாணவிகளிடம் இப்புலவர் மிக்க அன்புடன் இருந்தார்.இவர் பாடம் சொல்லும் முறையை அனைவரும் விரும்பினர். இவரது தமிழ்ப் புலமையை வியந்து, திருவிதாங்கூர் அரசாங்கம் இவரை மகாராசா பெண்கள் கலாசாலைத் தமிழாசிரியராக நிய மித்தது. இதுவே இவர் பார்த்த உயர்ந்த உத்தியோகம்.



