
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
18. தேவியின் கவிமலர்கள்
1. ஏழையுளந் திருக்கோயி லெனக்கொண்டு நீயும்
எழுந்தருளி யிருக்குமுறை யறிந்தடிமை யங்கே
சூழவரு வஞ்சனையைத் துரத்திநிறை யன்பாம்
சுந்தரநாண் மலர்மாலை சூட்டிநிதம் தொழுவேன்!
-அஞ்சலி
2. மனமே நீயும் வருந்துவதேன்?
மகிழ்ந்து தேவி திருநாமம்
தினமும் மறவா தன்போடு
தியானஞ் செய்து வாழ்வாயே;
கனமா மணிசே கண்டியெலாம்
கணக ணென்று முழக்காது,
நினைவை ஒடுக்கி நிகழ்த்திடுமந்
நிஷ்டைக் கேதும் நிகருண்டோ?
-சக்திப் பாட்டு (அஞ்சலி)
3. உண்மை யன்பை உடையவரே
உலகை யளந்த பெருமானை
அண்மை யாகக் கண்டிடுவர்,
அல்லார் காணார் காணாரே!
-மீராபாய் (அன்பின் வெற்றி)
4. காசியிலே இறப்பதனால் பயனொன் றில்லை;
காஷாயம் தரிப்பதொரு வேஷமேயாம்;
ஆசையினை வேருடனே அறுக்க வேண்டும்;
அழியுமுடல் அபிமானம் அகற்ற வேண்டும்;
பேசுலகில் அழியாத பொருளொன் றில்லை ;
பெரியவர்க்கும் சிறியவர்க்கும் மரண மொன்றே ;
பாசமுறு சம்சாரம் அந்தியோடு
பறந்தகலும் பறவைவிளை யாட்டே யாமால்!
-மீராபாய் (அன்பின் வெற்றி)
5. வாழு முயிரினை வாங்கிவிடல் – இந்த
மண்ணி லெவர்க்கும் எளிதாகும்
வீழு முடலை எழுப்புதலோ – ஒரு
வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா!
-கருணைக் கடல்
6. நாடியசீர் நாடடைய ராட்டுருட்டும் கையே
நல்லகதர் நெய்யமிகு வல்லமைகொள் கையே
பாடியவாய் தேனூறும் பாரதியார் பாடல்
பண்ணமையப் பாடுதற்குப் பாணிகொட்டுங் கையே!
-கைத்திறன் (இயற்கை இன்பம்)
7. புல்லே யாயினும் புல்லிய குணமிலை ;
அற்பர் இகழினும் அறிவால் பொறுப்பேன்;
தலையில் மிதிப்பினும் தயவால் சகிப்பேன்;
முயற்சி கைவிடேன் ; முயற்சி கைவிடாத்
திறமுடை யோரைத் திருமகள்
பெரிது முவந்து பேணமுன் னிற்குமே!..
-புல் (உள்ளமும் உணர்வும்)
8. யாவரே பெரியர்? யாவரே சிறியர் ?
ஒன்றிற் பெரியர் ஒன்றிற் சிறியராம்;
ஒன்றிற் சிறியர் ஒன்றிற் பெரியராம்;
ஆதலின், அற்பர் ஆகா தவரென ஓதுதல்
மடமையின் சாதனை யாமே!
– மலையும் அணிலும் (உள்ளமும் உணர்வும்)
9. ஓய்ந்து சோம்பி உறங்கா தேயடா,
ஊக்கம் பெருக உழைத்துமுன் னேறடா.
வாய்ந்த தொழிலில் மலையா தேயடா
மனமதில் ஒன்றி மகிழ்ச்சி கொள்ளடா!
உயிரிலா மேற்கோள் உரைப்ப தேனடா?
உற்றவாழ் வின்பயன் உணர்ந்திங் கெய்தடா.
வியனுல கத்தில் நலந்தரும் அனுபவ
வேதாந்தத்தின் மெய்ப்பொருள் ஈதடா!
-சுவாமி இராமதீர்த்தர் (வையமும் வாழ்வும்)
10. நாமே நமக்குத் துணையானால்
நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடிவரும்
சற்று மிதற்கோ ரையமுண்டோ?
கால நதியின் கதியதனில்
கடவு ளாணை காண்பீரேல்
ஞால மீது சுக மெல்லாம்
நாளு மடைந்து வாழ்வீரே!
-பர : 33, வையமும் வாழ்வும்
11. வீடும் பழவீ டாகுதடா
விட்டம் கூரை சுவரெல்லாம்
ஆடி யலைந்து விழு நாளும்
அண்டி அண்டி வருகுதடா!
நாடி யிதனை யின்னும் நீ
நம்பி மோசம் போகாமல்
பாடிப் பாடி எம்பெருமான்
பாதம் போற்றி வாழ்வாயே!
பலநூல் கற்ற பண்டிதர்கள்
பலரும் சபைகள் பலகூடிக்
கலகம் வாதம் செய்திடுக ;
கண்டங் கிழிய முழங்கிடுக.
மலரும் மலர்கள் வாடலுமிவ்
வாழ்வு நிலையா தோடலுமே
உலகம் கண்ட உண்மைகளாம்;
உண்டோ மற்றொன் றுரைத்திடவே?
– பாரசீகக் கவியமுதம்
12. கூடி விருந்துண்ண வேண்டவில்லை – பெண்ணைக் கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை ;
நாடி எவரொடும் நட்பினராய்த் – தேச
நன்மைக் குழைப்பதில் நஷ்டமுண்டோ?
கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு – சாதி
கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு
பாரதத் தாய்பெற்ற மக்களென்று – நிதம்
பல்லவி பாடிப் பயனெதுவோ?
-சமூகப் பாடல்-51
13. சீலைஉடை கதருடையாய்த் திகழவேண் டும்
தேசபக்தி செழித்தோங்கி வளரவேண்டும்;
வேலையிலாத் திண்டாட்டம் ஒழியவேண்டும்;
வெற்றியின்மேல் வெற்றியெமக் கெய் தவேண்டும்!
-தேசக்கொடி (தேசீயம்)!
வாசங் கமழும் தேவியின் கவிதை மலர்களை, அன்பர் நுகர்ந்து இன்புறு வார்களாக!
உணர்ச்சி ததும்புவது கவிதை-உள்ளே
ஊற்றெடுத்துப் பொங்குவது கவிதை;
மணக்க மலருவது கவிதை – புது
வாழ்வை வழங்குவது கவிதை !
சேயின் இளநகையைப் போலே-இளஞ்
செங்கதிரின் தங்கநகை போலே,
தாயின் முலைப் பாலைப் போலே – பொங்கித்
தானாய் வருவதுவே கவிதை!
முற்றிற்று.
★ ★ ★



