
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
10. மருமக்கள் வழி மான்மியம்
திருவிதாங்கூரில் மருமக்கள் தாயமுறை உண்டு. அதனால் பெற்ற மக்கள் திண்டாட, மற்ற மக்கள் உறவாடிப் பொருளைக் கொள்ள நேர்ந்தது. இம்முறையால் பல கேடுகள் விளைந்தன. பலதார மணமும் வலுத்தது. சொத்தை, மருமக்களுக்குப் பாக்கியில்லாமல் தாமே உள்ளளவும் அனுபவித்துத் தீர்க்கவே செல்வர் ஐந்தாறு மனைவிகளைக் கட்டிக்கொண்டனர். இந்த மருமக்கள் தாயமுறையை ஒழிக்கத் தேவி தைரியமாகப் பாடுபட்டார். அக்காலம் அவர் செய்த “நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்” என்ற அகவற்பாட்டு, நகைச்சுவையும் உணர்ச்சியும் மிக்க இலக்கியமாகும். அரசாங்கத்திற்கு இன்னார் எழுதியது என்றே தெரியாமல், அவர் இந்நூலைப் புனைபெயரால் எழுதினார். இந்நூல் இப்போதே வெளி வந்திருக்கிறது. இது பலருக்கு உணர்ச்சி தந்து, சமுதாயத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிவிட்டது. இதில் வரும் பஞ்சகல்யாணிப் பிள்ளையின் வாழ்க்கையைப் படித்து நகைக்காதவர் உண்டா? விமர்சனம் மிகை! படித் துப் பாருங்கள்.



