
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
8. பாரதியார் பாடினார்
இந்தச் சமயந்தான் கவிக்குயில் சுப்பிரமணிய பாரதியார் திருவனந்தபுரத்திற்கு வந்தார். பாரதியார் உறவினர் மகளுக்குக் கலியாணம் நடந்தது. உறவினர், சர்க்கார் உத்தியோகஸ்தர்; “பாரதி” என்றால் “புரட்சிக்காரன் ” என்று பயந்து அவர்கள், கவியை அலட்சியமாக நடத்தி னர்; உள்ளே வரவேற்கக் கூசினர், பாரதியார் மளமள வென்று உள்ளே சென்று, அவர் மனைவியிடம் யோக க்ஷேமங்கள் விசாரித்து, பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஆசீர்வதித்தார்; பிறகு ஊரைச் சுற்றக் கிளம்பினார்.அன்று மாலை வையாபுரிப் பிள்ளை சேஷையர் முதலியோர் தமிழாராய்ச்சி செய்துகொண் டிருக்கையில் தடதடவென்று, ஒரு கிர்க்கிக் கட்டுப் பேர்வழி உள்ளே நுழைந்தார்! அவரை யாரும் அறியவில்லை.
அவரே, “நான் யார் தெரியுமா?” என்ற கேள்வியைப் போட்டார். எல்லாரும் ‘யார்’ என்னுமுன்பே, “நான்தான் சுப்பிரமணிய பாரதி” என்றார். உடனே வையாபுரிப் பிள்ளையும் புலவர்களும் அவரை ஏற்று அமர்த்தி, “ஒரு பாட்டு” என்னு முன்பே “வெடிபடும் அண்டம்” என்று கட்டிடம் நடுநடுங்க எட்டுத் திசையும் அதிர, “ஊழிக் கூத்தை”ப் பாடினார். புலவர்மணிகள், தமிழ்ப் பாட்டின் விறு விறுப்பையும் பாரதியாரின் வாக்கினிமையையும் உணர்ச்சிக் கனலையும் வியந்தனர்! ஆனால் அக் கூட்டத்தில் தேவி யில்லை; விடு முறை நாளானதால் தேரூருக்கு வந்துவிட்டார். பிறகு விபரம் அறிந்து, பாரதியைக் காணும் பாக்கியம் பெறாமைக்கு வருந்தினார்.
“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா! – அவன்
பாட்டைப் பண்ணோ டொருவன் பாடினானடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா!”
என்று தேவி பாரதியாரைச் சிறப்பித்துப் பாடியதில் வியப்பில்லை.
மறுநாள் உறவினர், தமது சம்பந்திகளை வண்டியில் அழைத்துச் சென்று, காட்சிசாலையைக் காட்டினார் ; பாரதியார் தமது மனைவி மக்களுடன் நடந்தே சென்று காட்சி சாலையைக் கண்டு, மிருகங்களை யெல்லாம் அண்ணன் தம்பி என்று கொண்டாடிச் சிங்கத்திடம் வந்தார்!
“தம்பீ, நீ மிருகராஜ் ; நாம் கவிராஜ் ! வா, நேசங் கொண்டாடுவோம்” என்று தடவிக் கொடுத்தார். மிருகராஜனும் ‘ஹஹாகாரத்துடன்’ தனது நட்பைக் கர்ஜித்தது. எல்லாரும் பயங்கர வியப்புடன் இக் காட்சியைப் பார்த்தனர்! பாரதியார், காட்சி சாலையிலிருந்து நடந்தே திரும்பினார். வழியில் சேஷையர் கண்டு தமது கோச்சில் கவியை அழைத்து வந்து, “இந்த ஊரில் இருக்குமட்டும் என் வண்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார். உறவினருக்கு அப்போதே கவியின் பெருமை தெரிந் இரவில் சித்திரையின் நாதஸ்வரம் ஊர்வலத்துடன் நடந்தது. பாரதியார் அவன் ஊதிய பைரவியை மிகவும் இரசித்துத் தலையாட்டிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றிப் பெரிய கூட்டம் கூடிவிட்டது. உறவினர், பாரதிக்கு மாலை சூட்டித் தாம் முதலில் அலட்சியமாக யிருந்ததற்காக வருந்தி, உபசரித்தனர்.
தேவி, பெண்கள் கலாசாலை ஆசிரியராக யிருந்த போது, நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல ; எல்லாம் தமிழ் இலக்கிய சம்பந்தமானவை. ஒரு நிகழ்ச்சியை மட்டும் இங்கே குறிப்போம்.



