
பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
9. சுவாமியார் சொன்ன அதிசயம்
கும்பகோணத்திற்குப் பக்கத்திலே சூரியமூலை என்று ஒரு கிராமம் உண்டு. அங்கே ஒரு சுவாமியார் இருந்தார். அவர் இறக்கும்போது, “ஆனந்த ஆண்டிலே இங்கு ஓர் அதிசயம் நடக்கப்போகிறது. அதைப் பார்க்காமலே நான் போகிறேனே!” என்று கூறிக்கொண்டே உயிர் துறந்தாராம்.
அந்தச் சுவாமியார் சொன்ன அதிசயம் எதுவாக இருக்கும் என்று மக்கள் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்கள், ஆனந்த ஆண்டு எப்போது பிறக்கும் என்று ஆவலாக எதிர்பார்த்தார்கள், ஆனந்த ஆண்டும் பிறந்தது,
தமிழ் நாட்டில் அப்போதுதான் முதன் முதலாகப் புகைவண்டிப் பாதை போடப்பட்டுப் புகைவண்டி ஓடத் தொடங்கியது. “புகைவண்டி ஓடுவதைத்தான் அதிசயம் என்று சுவாமியார் சொல்லியிருக்கவேண்டும்” என்றார்கள் சிலர்.
அதே ஆண்டில்தான் தந்தி வசதியும் வந்தது. “இதுதான் பெரிய அதிசயம். இதைத்தான் சுவாமியார் சொல்லியிருக்க வேண்டும்” என்றார்கள் வேறு சிலர்.
அதே ஆண்டில் அந்தக் கிராமத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தப் பையன் பிறந்த ஆண்டிலே அவனுடைய பெற்றோருக்குச் சொந்தமாக ஒரு வீடு கிடைத்தது. அதனால், அந்தப் பையன் பிறந்தது தான் அதிசயம் என்று
அவனுடைய தாய் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள். இதைப் பெருமையாக எல்லாரிடமும் அடிக்கடி அவள் கூறி வந்தாள். அந்தச் சிறுவன் தொடக்கத்திலே திண்ணைப் பள்ளிக்கூடத்திலே படித்தான்.
பிறகு பல புலவர்களிடம் தமிழ்கற்றான். இளைஞனானதும் பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை என்பவரிடம் பாடம் கேட்கத்தொடங்கினான். அவன் பெரும் புலவரிடம் சென்றபோது, அவர், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.
“வேங்கடராமன்” என்று பதில் சொன்னான் அந்தச் சிறுவன்.
“வீட்டிலே உன்னை எப்படி அழைப்பார்கள்?”
“எனக்குப் பெரியோர் வைத்த பெயர் வேங்கடராமன். ஆனாலும், அப்பெயர், என் முன்னோரின் பெயராக இருப்பதால், அந்தப் பெயரைச் சொல்லி என் தாய் தந்தையர் அழைக்கமாட்டார்கள். சுவாமிநாதன் என்றே என்னை அழைப்பார்கள், ‘சாமா, சாமா’ என்றே செல்லமாகக் கூப்பிடுவார்கள்!”
“சுவாமிநாதன் என்ற பெயரே நன்றாக இருக்கிறது. உன்னை இனி நான் சுவாமிநாதன் என்றே அழைப்பேன்” என்றார் பெரும் புலவர். அன்று முதல் அப்படியே அழைத்து வந்தார். அதே பெயர்தான் பிற்காலத்தில் ‘மகா மகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதய்யர்’ என்று நீண்டுவிட்டது.
ஆனாலும், அவரைத் ‘தமிழ்த் தாத்தா’ என்று சொல்வதில்தான் நமக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.
தமிழ்த்தாத்தா அன்று சூரியமூலையில் பிறந்திராமற் போனால், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு என்று சொல்லுகிறோமே, அந்த இலக்கியச் செல்வங்களெல்லாம் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கலாம்.
சூரிய மூலையிலே பிறந்த அவர், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்றார். அங்கே கேட்பாரில்லாமல் கிடந்த ஓலைச் சுவடிகளையெல்லாம் தேடிப்பிடித்தார். அவற்றைப் படித்துப் பார்த்தார்.
அவற்றிலே பல நல்ல செய்யுட்கள் இருந்தன.
முன் காலத்தில், அச்சடித்த புத்தகங்கள் இல்லை. ஆகையால், பனை ஓலைகளில் தான் செய்யுட்களை எழுதி ஒன்று சேர்த்துக் கட்டிவைப்பார்கள், ஓலைச்சுவடிதான் அந்தக் காலத்தில் புத்தகமாக இருந்தது.
அப்படி எழுதிவைத்த ஓலைச்சுவடிகளைப் பலர் அலட்சியமாக வீடுகளில் போட்டு வைத்திருந்தார்கள். அவற்றின் அருமை அவர்களுக்குத் தெரியவில்லை. ஆகையால், அவை கறையானுக்கு இரையாகிக்
கொண்டிருந்தன. அவற்றையெல்லாம், நம் தமிழ்த் தாத்தா திரட்டினார், ஆராய்ச்சி செய்தார். ஓலைச் சுவடிகளில் உள்ள எழுத்துக்களைப் படிப்பது மிகவும் தொல்லையாக இருக்கும். ஆனாலும், அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. விடாமுயற்சியுடன் அவற்றிலிருந்த பழைய
செய்யுட்களை யெல்லாம் படித்தார். பின்னர், அவற்றைப் புத்தகங்களாக அச்சிட்டு வெளியிட்டார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இச்செயல் ஒரு பெரிய செயல் அன்றோ? இந்த வியப்பைச் செய்தவர் ஆனந்த ஆண்டிலே பிறந்ததும் ஓர் அதிசயந்தானே! சுவாமியார் வாக்குப்பலித்து விட்டது!



