பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

15. அஞ்சா நெஞ்சன்

பள்ளி மாணவர்கள் சுற்றிலும் வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். நடுவிலே ஒரு கையில் பளபளக்கும் வாளுடனும் மற்றொரு கையில் ஆப்பிள் பழத்துடனும் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் மாணவர்களைப் பார்த்து, “தம்பிகளே! நான் இப்போது ஒரு வித்தை காட்டப்போகிறேன். இதோ இந்த ஆப்பிள்பழத்தை நான் ஒரு சிறுவன் தலையில் வைப்பேன். வைத்துவிட்டு இந்த வாளை வீசுவேன். இவ்வாள் ஆப்பிளை இரு துண்டுகளாக வெட்டும். மேல் பகுதி சிதறிப்போய்த் தூரத்தில் விழும். ஆனாலும், பையனுக்கு எந்த விதமான துன்பமும் ஏற்படாது” என்றார்.

உடனே அங்கு உட்கார்ந்திருந்த மாணவர்களின் கண்கள் அங்குமிங்குமாகத் தேடின.

“பழத்தை யார் தலையில் வைக்கப்போகிறார்? இவருடன் எந்தப் பையனும் வரவில்லையோ!” என்று ஐயப்பட்டனர்.

அப்போது அவர், “தம்பிகளே, இதோ என் வலக்கையில் வாள் இருக்கிறது. இடக்கையில் ஆப்பிள் இருக்கிறது. பழத்தை வைத்து வெட்டுவதற்குத் தலைதான் வேண்டும். இங்கு எத்தனையோ வீராதி வீரர்கள் இருக்கிறீர்கள். ஒரு வீரன் முன் வந்தால் போதும்” என்றார்.

எந்த மாணவனும் முன் வரவில்லை. அவர் ஒவ்வொரு மாணவனாகக் கையைக் காட்டி அழைத்தார் பயனில்லை. அந்தப் பள்ளியில் கால் பந்தாட்டக் குழுவின் தலைவனாக இருந்தான் ஒரு சிறுவன். அவனுடைய நண்பர்கள் அவனைப் பிடித்து முன்னால் தள்ளினார்கள். ஆனால், அவனோ பயந்து பின்வாங்கினான். “இங்கு ஒரு தைரியசாலியும் இல்லையா?” என்று கேட்டார் வித்தைக்காரர்.

“இதோ நான் இருக்கிறேன்” என்று கூறிக் கொண்டே ஒரு தாவுத்தாவி அவர் முன்னே வந்து மண்டியிட்டு உட்கார்ந்தான் ஒரு சிறுவன். ஆப்பிள் பழத்தை அவனது தலையிலே வித்தைக்காரர் வைத்தார். வைத்துவிட்டு வாளை ஓங்கினார். சிறுவன் சிறிதுகூட அஞ்சவில்லை. ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.

வித்தைக்காரர் சொன்னபடி செய்து காட்டினார். பழம் இரண்டாயிற்று. சிறுவனுக்கு எவ்விதத் துன்பமுமில்லை. பெரியவரின் வித்தையையும், சிறுவனின் வீரத்தையும் மாணவர்கள் கைதட்டிப் பாராட்டினார்கள். அவனுடைய பள்ளியிலே நீச்சல் குளம் ஒன்று இருந்தது. அது மிகப்பெரிய குளம். அதன் குறுக்கே இரண்டு பாலங்கள் இருந்தன. அந்தக் குளத்திலே அவன் நாடோறும் நீச்சலடிப்பான். கரையோரமாக ஒரு மாணவன் நின்றால் அச்சிறுவன் அவனுக்குப் பின்புறமாகப் பூனைபோல் செல்வான்.

திடீரென்று அவனைப் பிடித்துக் குளத்தில் தள்ளிவிடுவான்.

அவன் அந்தப் பள்ளிக்கு வந்த புதிதில், ஒரு நாள் இப்படித்தான் ஒரு மாணவனைப் பிடித்து வேடிக்கையாகத் தள்ளிவிட்டான். எப்போதுமே தன் வயதுப் பிள்ளைகளை அல்லது தன்னைவிடச் சிறியவர்களைத்தான் அவன் தள்ளுவது வழக்கம். அந்தச் சிறுவனும் பார்ப்பதற்கு மிகச் சிறியவன் போல்தான் இருந்தான். ஆனால் உண்மையிலே அவன் வயதில் பெரியவன்; மேல் வகுப்பில் படிப்பவன்; பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் முதற் பரிசு பெறுபவன். அவன் சும்மா இருப்பானா? சண்டைக்கு வந்துவிட்டான். நான் யார் தெரியுமா? நீ என்னைக் குளத்தில் தள்ளலாமா? என்று கேட்டான்.

“உங்கள் உருவம் சிறியதாக இருந்தது. உங்களைக் கீழ் வகுப்பு மாணவன் என்று நினைத்து விட்டேன்… என் தந்தையாரும் மிகப்பெரிய மனிதர். ஆனால், உருவத்தில் அவரும் சிறியவரே” என்றான் அச்சிறுவன்.

இதைக் கேட்டதும் சினம் கொண்ட மாணவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“சரி, போ… இனி இப்படிப்பட்ட வம்புக்குப் போகாதே” என்று சொல்லி அனுப்பிவிட்டான்.

சாமர்த்தியமாகத் தன் தந்தையைப் பற்றிச் சொல்லி அவன் தப்பித்துக்கொண்டான்; ஆயினும் அவன் சொன்னதில் பொய்யே இல்லை. அவனுடைய தந்தை மிகப்பெரிய மனிதர்தான்; ஆனால் உருவத்திலே சிறியவர் தான். இங்கிலாந்தின் நிதி அமைச்சராக இருந்த ராண்டல்ப் சர்ச்சில் அவனுடைய தந்தைதான். ஆனால், அவனோ பிற்காலத்தில் இங்கிலாந்தின் முதல்அமைச்சராகவே ஆகிவிட்டான்!

பெரிய பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், உயர்ந்த அரச தந்திரி என்றெல்லாம் உலகம் போற்றிய வின்ஸ்டன் சர்ச்சில், ராண்டல்ப் சர்ச்சிலின் மகன்தான்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 4.2 / 5. வாக்கு எண்ணிக்கை: 5

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *