
பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
4. விளக்கும் கணக்கும்
இத்தாலி நாட்டிலே பைசா என்று ஒரு நகரம் உண்டு. அந்த நகரத்திலே ஒரு மாதா கோயில் உண்டு. அக்கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் அன்றைக்குக் கூடியிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் கண்களை மூடிக்கடவுளைத் தொழுது கொண்டிருந்தார்கள். ஆனால், அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு மாணவன் மட்டும் கண்களை மூடவுமில்லை; கடவுளைத் தொழவும் இல்லை. கண்களை அகல விரித்து அண்ணாந்து
பார்த்துக் கொண்டே நின்றான்.
அப்படி அவன் கவனத்தைக் கவர்ந்தது எது? வேறொன்றும் அன்று; ஒரு கண்ணாடி விளக்குத்தான். மேல் கூரையிலிருந்து சங்கிலியால் கட்டித் தொங்கவிடப்பட்ட விளக்கு காற்றிலே அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டிருந்தது. அதைத்தான் அவன் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
காற்று வேகமாக அடிக்கும்போது அந்த கண்விளக்கு அதிக தூரம் போய்வரும்; மெதுவாகக் காற்று அடிக்கும்போது, குறைந்த தூரமே போய்வரும். அந்த விளக்கு ஒருமுறை இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்குப் போவதற்கு எவ்வளவு நேரமாகிறது என்று அந்த மாணவன் தான் கணக்கிட்டான்.
எப்படிக் கணக்கிட்டான், தெரியுமா? மருத்துவர்களில் நாடி பார்ப்பது போல், தன் இடக்கையில் வலக்கைவிரலை வைத்து நாடித் துடிப்பின் மூலம் கணக்கிட்டான். அதிக தூரம் போய் வர எவ்வளவு நேரம் ஆகிறது, குறைந்த தூரம் போய்வர எவ்வளவு நேரம் ஆகிறது என்று கணக்கெடுத்தான்.
இரண்டுக்கும் ஒரே நேரந்தான் ஆனது!
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர்க் காலத்தை அறியக் கடிகாரங்கள் இல்லை; மாதா கோயில் விளக்கு அசைந்ததைப் போலத்தானே கடிகாரத்தி ‘பெண்டுலமும்’ அசைகிறது? அந்த மாணவன் கண்ட உண்மையை வைத்துத்தான் கடிகாரங்கள் அமைக்கப்பட்டன.
அந்த மாணவன் மிக்க ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவன்.
ஏழையாயிருந்தாலும், அவன் நுண்ணறிவு உடையவனாக இருந்தான். சிறு வயதிலே அவன் சிறுசிறு கருவிகளை வைத்துக்கொண்டு வித்தைகள் செய்து காட்டுவான். அவற்றைக்கண்டு அவன் பள்ளித் தோழர்கள் வியப்பும் மகிழ்ச்சியும் அடைவார்கள். அவன் நன்றாகப் பாடுவான்; அழகாக ஓவியம் வரைவான்.
அவன், யார் எதைச் சொன்னாலும் உடனே நம்பி விடமாட்டான். தானே செய்து பார்த்துத்தான் ஒரு முடிவுக்கு வருவான். இதனால் அவனுக்கும் அவனுடைய மாணவத் தோழர்களுக்கும் அடிக்கடி பிணக்கு ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் ஆசிரியர்களுடனும் அவன் விவாதம்
செய்வான். இதனால், அவனை எல்லாரும் ‘வம்பன்’ என்றே அழைக்கத் தொடங்கினர்.
அந்த வம்பன்தான் வானத்தைப் பார்க்கும் தொலை நோக்கியைக் கண்டுபிடித்தான். காண முடியாத வானக்காட்சிகளை எல்லாம் பிறருக்குக் காட்டினான். அதற்கு முன்பே ஹாலந்து நாட்டில் ஒரு தொலைநோக்கி (டெலஸ் கோப்) கண்டுபிடித்திருந்தார்கள். ஆனால், அதனால் வானக்காட்சிகளைக் காண முடியாது. தரையில் உள்ள தூரக்காட்சிகளைத்தான் காண முடியும்.
தொலை நோக்கியைக் கண்டுபிடித்த அதே மாணவன் வெப்பமானியையும் முதல் முதலாகக் கண்டுபிடித்தான். இவை மட்டுமா?
சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்றே பெரும்பாலோர் அக்காலத்தில் நம்பியிருந்தார்கள். “அது தவறு. பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது” என்பதைப் பல ஆதாரங்களுடன் அவன் எடுத்துச் சொன்னான். புத்தகங்கள் எழுதி விளக்கினான் அரசினர், “சமயக் கொள்கைகளுக்கு எதிராக இவன்
பேசுகிறான்; எழுதுகிறான்” என்று குற்றஞ்சாட்டி அவனைப் பிடித்துச் சிறையிலே அடைத்து வைத்தனர். சிறையிலே அவன் இருபத்திரண்டு நாட்கள் இருந்தான்; பின்னர் விடுதலையானான்.
அவன் விடுதலையாகி வெளிவந்தது முதல் மும்முரமாகப் பல நூல்களை எழுதினான். தான் கண்டுபிடித்த விஞ்ஞான உண்மைகளை விளக்கிக்கூறினான்.
காண முடியாத வானக் காட்சிகளையெல்லாம் காண்பதற்கு வழி காட்டிய அவன், எழுபத்து மூன்றாம் வயதில், எதிரில் இருப்பவர்களைக்கூடக் காண முடியாமல் தவித்தான். ஆம், அந்த வயதில், குருடாகி விட்டான்! அவன் கண்பார்வையை இழந்த ஐந்து ஆண்டுகளில், அவனை இந்த உலகம் இழந்துவிட்டது.
விஞ்ஞானிகளுக்கெல்லாம் விஞ்ஞானியாக விளங்கிய அவன் பெயர்தான் கலீலியோ கலிலி.



