
பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
7. தந்தையும் பாட்டியும்
இரஷ்யாவில் மாஸ்கோ நகரத்திலே ஒரு தெரு அந்தத் தெருவிலே ஒரு வீடு.
அந்த வீட்டின் வாயிலில் எட்டு வயதுச்சிறுவன் உட்கார்ந்து இருபுறமும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தான். திடீரென்று, “அதோ வருகிறார் தந்தை! அதோ வருகிறார் தந்தை!” என்று கூவிக்கொண்டே குதித்து எழுந்தான்.
அவன் குரலைக் கேட்டு உள்ளேயிருந்த அத்தை ஓடி வந்தாள். “பாவம், எத்தனை தடவை சொன்னாலும் என்னை நீ நம்பமாட்டேன் என்கிறாயே! உன் தந்தையை இனி நாம் பார்க்கவே முடியாது. செத்துப்போனவர் எப்படித் திரும்பி வருவார்?” என்றாள்.
சிறுவன், அத்தை சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தெருவில் சிறிது தொலைவில் வந்து கொண்டிருந்த ஒருவரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே நின்றான். “அப்பா! அப்பா!” என்று ஆசையோடு அவன் கூவினான். அவர் அருகிலே வந்தார். அவர் முகத்தைப் பார்த்ததும், அவன் முகத்திலே ஏமாற்றக் குறி தெரிந்தது. “இவரா என் தந்தை? இல்லை; இல்லவே இல்லை. இவர் யாரோ!” என்று கூறிவிட்டுத் ‘தொப்’பென்று தரையில் உட்கார்ந்துவிட்டான்.
இப்படி ஒரு நாளா, இரண்டு நாளா? ஏழெட்டுத்திங்களாகத் தந்தையை எதிர்பார்த்து எதிர்பார்த்து அவன் ஏமாந்து கொண்டிருந்தான். இறந்தவர் எப்படி உயிர்பெற்று வருவார்?
இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தபோதே அவனுடைய தாய் இறந்துவிட்டாள். தாய் இறந்த பிறகு அவனைக் கிராமத்திலிருந்து நகரத்திற்கு அவனுடைய அத்தை அழைத்துவந்தாள். செல்லமாக வளர்த்துவந்தாள். தந்தை கிராமத்திலே வாழ்ந்தார். அவர் அடிக்கடி நகரத்திற்கு வருவார்; மகனைப் பார்த்துவிட்டுப் போவார்.
ஒருநாள், அவர் கிராமத்திலே நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றார், தெருவில் நடந்துபோய்க் கொண்டிருக்கும்போது திடீரென்று அவருக்கு வலிப்பு வந்துவிட்டது. நடுத்தெருவிலே அவர் விழுந்தார். சில விநாடிகளில் அவர் இறந்துவிட்டார்.
அங்கிருந்தவர்கள் நகரத்திலே இருந்த சிறுவனின் அத்தைக்குச் செய்தி அனுப்பினார்கள். அவள், சிறுவனிடம் தந்தை இறந்த செய்தியை மிகுந்த வருத்தத்தோடு கூறினாள். ஆனால், அவன் அவள் பேச்சை நம்பவில்லை. “நீ பொய் சொல்கிறாய். என் தந்தை என்னைப் பார்க்க வருவார்; நிச்சயம்
வருவார்” என்று கூறினான். கூறியதோடு நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் வாயிற்படியில் உட்கார்ந்து கொண்டு தந்தையின் வரவை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பான்; நன்றாக இருட்டிய பிறகே வீட்டிற்குள் வருவான்.
தந்தை இறந்த ஒன்பதாம் திங்கள் அவனுடைய பாட்டி இறந்துவிட்டாள். அவள் அருகிலே சென்று அவன் உற்றுப் பார்த்தான். அவள் வாய் திறக்கவில்லை; கண் விழிக்கவில்லை; அசையாமல் கிடப்பதைக் கண்டான். அவளை அடக்கம் செய்வதையும் அவன் நேரிலே பார்த்தான். அப்போதுதான் சாவு என்றால் என்ன என்பது அவனுக்குத் தெரிந்தது. அவன், “பாட்டியை இனிப் பார்க்க முடியாது. நம் தந்தையும் இப்படித்தான் இறந்திருக்கவேண்டும். இனி, அவரையும் பார்க்க முடியாது” என்ற முடிவுக்கு வந்தான். இப்படிப் பத்து வயதுவரை ஒன்றும் அறியாத குழந்தையாக இருந்த அவன், உலகம் போற்றும் ஒரு பெரிய ஞானியாகிவிட்டான்! இரஷ்ய ஞானி டால்ஸ்டாய் என்றால் “ஓ, அவரா! காந்தி மகானே அவரைத் தம்முடைய குரு எனக் கொண்டாடினாரே!” என்று கூறத் தொடங்கிவிடுவீர்கள்.
ஆம், பெரும் பணக்காரக் குடும்பத்திலே, நாற்பத்திரண்டு அறைகள் கொண்ட மாளிகையிலே அவர் பிறந்தார்; தம்முடைய நிலங்களையெல்லாம் ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு, ஏழையோடு ஏழையாக வாழ்ந்தார்; நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதி மக்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
அந்தப் புத்தகங்களின் மூலம் நிறைய வருவாய் வந்திருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை. அவர் வருவாய்க்காக எழுதவில்லை. தாம் எழுதிய புத்தகங்களை யார் வேண்டுமானாலும் எந்த மொழியில் வேண்டுமானாலும் இலவசமாக வெளியிட்டுக் கொள்ளலாம் என்று அவர் கூறிவிட்டார். அவரைப் பற்றி இதுவரை வெளி வந்துள்ள புத்தகங்கள் ஏறக்குறைய 25,000 இருக்கலாம். அப்படியென்றால், அவர் எவ்வளவு பெரிய மகான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?



