
பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
10. வீட்டிலே நடந்த நாடகம்
தாகூர் சிறுவராயிருந்தபோது, கல்கத்தாவில் ஒரு பெரிய மற்போர் வீரர் இருந்தார். ‘கானாபயில்வான்’ என்பது அவருடைய பெயர். அவரிடம் பலர் குத்துச்சண்டை கற்றுக் கொண்டார்கள்.
தாகூர் நாடோறும் பொழுது விடிவதற்கு முன்பே எழுந்துவிடுவார்; குத்துச்சண்டை போடுவதற்கான ‘லங்கோடு’ ஒன்றை அணிந்து கொள்வார், கானா பயில்வானுடைய மற்போர்ப் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பிவிடுவார்.
அங்கே தரையில் ஓர் அடி ஆழம் மண்ணைக் கிளறி மாவைப்போல் வைத்திருப்பார்கள். அந்த மண்ணின்மீது கடுகு எண்ணெயை ஊற்றி இருப்பார்கள். அதுதான் மற்போர் செய்யும் இடம், அந்த இடத்தில்தான் கானா பயில்வான் குத்துச்சண்டை கற்றுக்கொடுப்பார். அவருடன் தாகூர் சண்டை செய்வார். இருவரும் கட்டிப் புரளுவார்கள். உடம்பெல்லாம் மண் ஒட்டிக்கொள்ளும். பயிற்சி முடிந்ததும், தாகூர் உடம்பைத் தட்டிக்கொண்டு, வீடு திரும்புவார். ஆயினும் தலையிலும், முதுகிலும் மண் ஒட்டிக் கொண்டிருக்கும்.
“இஃது என்ன விளையாட்டு? உடம்பெல்லாம் ஒரே மண்! இப்படி நாடோறும் மண்ணைப் பூசிக்கொண்டு வந்தால், உன் சிவப்பு நிறம் மங்கிவிடாதா!” என்று தாகூரின் தாய் கடிந்து பேசுவாள்.
விடுமுறை நாட்களில் அவருடைய அன்னை தான் குளிப்பாட்டிவிடுவாள்.
அப்போது அவள் நறுமணம் கமழும் ஒரு பொருளை அவரது உடம்பில் தேய்ப்பாள். அரைத்த வாதுமைப்பருப்பு, பால், ஆரஞ்சுப்பழத்தோல் இன்னும் என்னென்னவெல்லாமோ சேர்த்துச் செய்ததுதான் அந்த நறுமணப்பொருள்.
இப்பொருள் எதற்காகத் தெரியுமா? தாகூரின் நிறம் மங்கிப்போகாமல் இருப்பதற்காகத்தான் இது பயன்பட்டது.
தாகூரிடம் அன்னை மிக்க அன்பு கொண்டிருந்தார். ஆனாலும், சின்ன வயதிலே நாடகம் பார்க்க அன்னை அவரை விடமாட்டாள். “சிறு பிள்ளைகள் நாடகம் பார்த்தால் கெட்டுப்போய்விடுவார்கள்” என்று அவள் நினைத்தாள்.
அவள் மட்டுமா? அந்தக் காலத்திலிருந்த பெரியவர்கள் எல்லாருமே அப்படித்தான் நினைத்தார்கள்.
தாகூருக்குச் சிறிய தந்தையார் ஒருவர் இருந்தார். அவர் நாடகம் எழுதுவார்; நாடகப் பயிற்சியும் அளிப்பார். நடிகர்களில் சிறுவர்களும் இருப்பார்கள். “சிறுவர்கள் நாடகத்தைப் பார்க்கக் கூடாதாம். ஆனால், நடிக்கலாமாம்” என்று தாகூர் குறைப்பட்டுக்கொள்வார்.
தாகூர் வீட்டில் அடிக்கடி நாடகம் நடக்கும். ஒருநாள், அவர் வீட்டில் ‘நளன்-தமயந்தி’ நாடகம் நடைபெற இருந்தது. அந்த நாடகத்தைச் சிறுவர்களும் பார்க்கலாம் என்று பெரியவர்கள் இசைவு அளித்துவிட்டார்கள்.
சிறுவர் தாகூர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
“நாடகம் தொடங்க நெடுநேரம் ஆகும். நீ படுக்கையில் படுத்துத்தூங்கு. நாடகம் தொடங்கியதும் உன்னை எழுப்புகிறேன்” என்றாள் தாய். தாகூர் முதலில் அன்னையின் பேச்சை நம்பவில்லை. ஆனாலும், அன்னை
உறுதியாகச் சொன்னதால், ‘சரி’ என்று போய்ப்படுத்து விட்டார். மணி அடித்தது. அப்போதுதான் நாடகம் தொடங்கியது. உடனே, ஒருவர் வந்து தாகூரை எழுப்பினார். தாகூர் கண்களைக் கசக்கிக்கொண்டு நாடகம்
நடந்த இடத்திற்கு வந்தார். அப்போது எங்குப் பார்த்தாலும் வண்ண விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அவருக்குக்கண்கள் கூசின. சுற்றிலும் பார்த்தார். பெரியவர்களும், சிறியவர்களுமாக அங்கே
ஏராளமானவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
முன் வரிசையில் தாகூர் தம் அண்ணன்களுடன் போய் உட்கார்ந்தார்.
அவர்கள் அவர் கையிலே ஒரு முடிச்சைக் கொடுத்தார்கள். அதில் ரூபாய்கள் இருந்தன. அவர்கள், “நாடகத்தில் நடிகர்கள் திறமையாக நடிக்கிறார்கள் என மக்கள் கைதட்டும் போதெல்லாம் ஒவ்வொரு ரூபாயாக மேடையில் வீசவேண்டும்” என்றார்கள். அப்படியே தாகூர் வீசினார். அந்தக் காலத்தில் பணக்காரர்கள் அப்படித்தான் மேடையிலே ரூபாய்களை வீசுவார்கள்.
நடிகர்கள் அந்த ரூபாய்களை எடுத்துக் கொள்வார்கள். இது நடிகர்களுக்கு மேல் வருவாயாகும்.
சிறிய வயதிலே தம் சிறிய தந்தையார் எழுதிய நாடகத்தைப் பார்த்த தாகூர், பிறகு தாமே பல நாடகங்களை எழுதினார். நாடகங்கள் மட்டுமா? கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதினார். அவற்றின் சிறப்பால் அவர் உலகப்புகழ் பெற்றார் அவரது ‘கீதாஞ்சலி’ என்ற கவிதை நூல் ‘நோபல் பரிசு’ பெற்றதுதான் உங்களுக்குத் தெரியுமே! அவர் எழுதிய ‘ஜனகண மன’ என்னும் நாட்டுப்பண்ணை நாம் பாடாத நாள் உண்டா?



