பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

8. அன்னை கொடுத்த அறை!

“பிள்ளைப் பருவமா! அப்படி ஒன்று அவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லையே! விவரம் தெரிந்த நாளிலிருந்து அவன் பெரிய மனிதன் போலவே எல்லாம் செய்து வருகிறான்” என்று அவனுடைய தந்தை ஒருமுறை கூறினார்.

தந்தை கூறியது உண்மைதான். அவன் மற்றப்பிள்ளைகளைப் போல் விளையாடமாட்டான் தெருவில் அலையமாட்டான்; குறும்பு செய்யமாட்டான்,

எப்போதும், ஏதாவது ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பான். சில சமயங்களில், ‘இது என்ன? அது என்ன? இதனை ஏன் இப்படிச் செய்யவேண்டும்? அதனை ஏன் அப்படிச் செய்யக்கூடாது?’ என்று பெரியவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பான்.

‘என்ன, இப்படிப்பட்ட பொருளற்ற கேள்விகளையெல்லாம் கேட்கிறானே! ஒரு வேளை… இவனுக்கு மூளைக்கோளாறாக இருக்குமோ?” என்று சிலர் ஐயம் கொண்டனர். இவன் தலை பெரிதாக இருக்கிறது. அதனால், மூளையில்தான் ஏதோ கோளாறு இருக்கவேண்டும்” என்று ஒரு டாக்டர்கூடக் கூறினார்.

மூளைக் கோளாறு உள்ள பையனை எப்படிப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது? எட்டு வயது வரை தாய் அவனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவே இல்லை.

அப்புறந்தான் அவனைப் பள்ளியிலே சேர்த்தார்கள்.

பள்ளியில் மூன்று திங்களே படித்தான். பிறகு அவன் வீட்டிலேதான் படித்தான். அவன் தாய் ஒரு காலத்தில் பள்ளி ஆசிரியையாக இருந்தவள். அவள் அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தாள்.

பத்தாம் வயதில் அவன் தன் வீட்டிலேயே எழு ஒரு சோதனைச் சாலையை ஏற்படுத்தினான். அப்போது அவன் கூடையை எடுத்துக்கொண்டு தெருத்

தெருவாகச் செல்வான் கூடை நிறையப் புட்டிகளைச் சேர்த்துக்கொண்டு வருவான்; இரசாயனப் பொருள்களை அவற்றிலே போட்டு வைப்பான் யாரேனும் அந்தப் புட்டிகளை எடுத்துவிட்டால், என்ன செய்வது? அதற்காக, ‘நஞ்சு’ என்று துண்டுத்தாளில் எழுதி ஒவ்வொரு புட்டியின் மீதும் அதை ஒட்டி வைப்பான்! இப்படி அவனுடைய சோதனைச் சாலையில் இருநூற்றுக்கு மேற்பட்ட புட்டிகள் இருந்தன.

புதிது புதிதாகப் பல விஞ்ஞான உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும், பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்ற ஆசை அந்த வயதிலே அவனுக்கு இருந்தது வானத்திலே பறவை பறக்கிறதே, அதே போல் ஏன் மனிதனால் பறக்க முடியாது?” என்று அடிக்கடி அவன் தன்னைத்தானே கேட்டுக் கொள்வான்.

ஒரு நாள் அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. உடனே இரசாயனப் பொருள்கள் சிலவற்றைக் கலந்தான்; நன்றாக அரைத்துத்தூள் ஆக்கினான். அந்தத்தூளை, அவனது வீட்டு வேலைக்காரப் பையனான மைக்கேல் ஓட்ஸ் என்பவனிடம் கொடுத்து, “மைக்கேல், இதோ இந்தத்தூளை நீ உன்

வாய்க்குள் போட்டு விழுங்கவேண்டும். சிறிது நேரத்தில் ஓர் அதிசயம் நடக்கும், நீ இருந்த இடத்தை விட்டு மெல்ல மெல்ல மேலே எழும்புவாய்.

அப்புறம், சிறிது நேரத்தில் ‘விர்’ ரென்று வானத்தில் பறக்க ஆரம்பித்து விடுவாய்!… உம்… வாயைத் திற” என்றான்.

மைக்கேலுக்குப் பயமாயிருந்தது. “பயப்படாதே! முதல் முதலாக வானத்தில் பறந்தவன் யார் என்று கேட்டால், மைக்கேல் ஓட்ஸ் என்று எல்லாரும் சொல்லுவார்கள். ஆம், அந்தப் பெருமை யாருக்குக் கிடைக்கும்? உம், விழுங்கு” என்று கட்டாயப்படுத்தினான்.

மைக்கேல் அரைமனதாக அந்தத்தூளை வாய்க்குள்ளே போட்டு விழுங்கினான். சிறிதுநேரம் சென்றது. மைக்கேல் மேலே எழும்பவும் இல்லை; வானத்தில் பறக்கவும் இல்லை. திடுமெனக் கீழே சாய்ந்தான். தரையோடு தரையாய்ப் படுத்துவிட்டான். ஆம், மயங்கி விழுந்துவிட்டான்!

அப்போது தூளைக் கொடுத்த சிறுவனின் தாய் அங்கே வந்தாள், நடந்ததை அறிந்தாள். அவள் தன் மைந்தன் மீது மிக்க சினம் கொண்டாள், அவன் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்தாள்; காதைப் பிடித்துத்திருகினாள். நல்லவேளை; மைக்கேலின் உயிருக்கு ஒன்றும் துன்பம் ஏற்படவில்லை.

சிறு வயதிலே இப்படியெல்லாம் சோதனை செய்து பார்த்துவந்த அவன், வளர்ந்து பெரியவனானதும், எத்தனை எத்தனையோ விஞ்ஞான அற்புதங்களைச் செய்து காட்டினான்.

மின்சார விளக்கில் படிக்கும்போதும், திரைப்படத்தைப் பார்க்கும் போதும், தொலைபேசியில் பேசும்போதும், ஒலித்தட்டைக் கேட்கும்போதும் நாம் அவனுக்கு மறவாமல் நன்றி செலுத்தவேண்டும். யாருக்கு?

தாமஸ் ஆல்வா எடிசனுக்குத்தான்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 4.2 / 5. வாக்கு எண்ணிக்கை: 5

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *