
பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
3. சிறுவன் தீட்டிய திட்டம்
இத்தாலி நாட்டிலே ஜினோவா என்ற ஒரு துறைமுகப் பட்டினம் இருக்கிறது. அந்தப் பட்டினத்தில் 500 ஆண்டுகளுக்கு முன், ஆட்டு உரோமம் கத்தரிக்கும் வேலையை ஒருவர் செய்து வந்தார். அவருடைய வீடு கடற்கரை ஓரமாக இருந்தது.
அவருக்கு ஒரு மைந்தன் இருந்தான். அவன் மிகவும் சுறுசுறுப்பானவன். வலிமை மிக்கவனாகவும் இருந்தான்.
அந்தக் கடற்கரையிலிருந்து பாய்மரக்கப்பல்களில் பலர் போவார்கள். சிலர் அங்கு வந்து இறங்குவார்கள். அவர்கள் வருவதையும் போவதையும் கரையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பான் அந்தச் சிறுவன்.
சில மாலுமிகள், தாங்கள் போய்ப் பார்த்து வந்த இடங்களைப் பற்றிக் கதை கதையாகக் கூறுவார்கள். சிலர் நடுக்கடலிலே புயற்காற்று வந்ததையும், அதைத் தாங்கிக் கொண்டதையும் விரிவாக எடுத்துச் சொல்வார்கள். வேறு சிலர், சுறா மீன், திமிங்கிலம் முதலியவற்றுடன் சண்டையிட்டுத் தப்பிய
வகையை அழகாகக் கூறுவார்கள். இவற்றையெல்லாம் வாயைத் திறந்தபடியே வியப்போடு அவன் கேட்டுக் கொண்டிருப்பான்.
சில நாட்கள் சென்றன. ‘நாமும் கப்பல் ஏறிக் கடலில் போக வேண்டும்’ என்ற ஆசை அவனுக்குத் தோன்றியது, நாள் ஆக ஆக அந்த ஆசை அவனுடனே வளரத் தொடங்கியது.
ஒரு நாள், அவன் பள்ளிக்கூடத்தில் ஒரு புத்தகத்தைப்
படித்துக்கொண்டிருந்தான். அதில், “உலகம் தட்டையாக இருப்பதாகவே எல்லாரும் நினைக்கிறார்கள். அது தவறு. உலகம் உருண்டையாகத்தான் இருக்கிறது” என்று ஓர் அறிஞர் எழுதியிருந்தார். அதைப் பற்றி ஆசிரியர்களிடம் அவன் கேட்டான். அவர்கள், “எவனோ ஒருவன் உளறியிருக்கிறான். அதை நம்பாதே! உலகம் தட்டையாகத்தான் இருக்கிறது” என்றார்கள். சிறுவனுக்கு யார் கூறுவது சரி என்று தெரியவில்லை.
ஒரு நாள் அவன் உணவு உண்பதற்காக ஓர் ஆரஞ்சுப்பழத்தை எடுத்தான். அதைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும்போது பின்புறத்திலிருந்து ஒரு வண்ணத்துப் பூச்சி பழத்தின் மேல் ஏறி வருவதைப் பார்த்தான். முதலில், அதன் இறகின் மேற்பகுதி மட்டுமே தெரிந்தது. பிறகு சிறிது சிறிதாக
இறகின் முழுப் பகுதியும் தெரிந்தது. வண்ணத்துப் பூச்சி பழத்தின்மேல் ஏறி மேலே வந்ததும் அதன் முழு உருவமும் நன்றாகத் தெரிந்தது.
உடனே அச்சிறுவன், “ஐயமில்லை. பூமி உருண்டைதான். பூமி
உருண்டையாக இருப்பதால்தான், கப்பல் மிக்க தொலைவில் வரும்போது முதலில் தலைப்பாகம் மட்டுமே தெரிகிறது. வர வரத்தான் நடுப்பாகமும், அடிப்பாகமும் தெரிகின்றன” என்ற முடிவுக்கு வந்தான். இதைத் தன் தோழர்களிடத்திலே கூறினான். எல்லாரும் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள்.
சிலர் ‘பைத்தியம்’ என்று பட்டம் சூட்டினார்கள். ஒருவன், “அப்படியானால் இந்தியாவிலும் சீனாவிலும் இருப்பவர்கள் பூமியில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு தான் நடக்கிறார்கள் போல் இருக்கிறது!” என்று கேலி செய்தான்.
“என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். பூமி உருண்டைதான்” என்று அச்சிறுவன் பிடிவாதமாகக் கூறினான். கூறியதோடு நிற்கவில்லை. “பூமி உருண்டையாக இருப்பதால், நான் இந்தியாவுக்குக் குறுக்கு வழி
கண்டுபிடித்து அங்கே போகவும் திட்டமிட்டிருக்கிறேன்” என்றான்.
தான் போட்ட திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அவன் பதினான்காம் வயதில் ஒரு கப்பலிலே வேலைக்காரனாகச் சேர்ந்தான். எல்லாவற்றையும் கற்றுக்கொண்டான். விரைவிலே அவனும் ஒரு மாலுமி ஆனான். மூன்று
பெரிய கப்பல்களுடனும், எண்பத்தெட்டு ஆட்களுடனும் இந்தியாவுக்குக் குறுக்கு வழி கண்டுபிடிக்கப்புறப்பட்டான். கரையைக் கண்டதும், இந்தியாவிற்கே வந்துவிட்டோம்” என்று அவனும் அவனுடைய ஆட்களும் ஆரவாரம் செய்தார்கள்; துள்ளிக் குதித்தார்கள்.
ஆனால், அவர்கள் கண்டது இந்தியா அன்று; ஒரு புதிய உலகத்தையே கண்டு பிடித்து விட்டார்கள். ஆம், ‘அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ்’ என்று
எத்தனை மாணவர்கள் நெஞ்சிலே கையை வைத்துக்கொண்டு இன்றும் நெட்டுருப் போடுகிறார்கள்!



