
பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
1. குதிரையை அடக்கிய சிறுவன்
கிரேக்க நாட்டிலே ஒரு பகுதியை, பிலிப் என்ற ஓர் அரசர் ஆண்டுவந்தார். ஒருநாள் அவர் முன்னே, ஏவலர் ஒரு குதிரையைக் கொண்டுவந்து நிறுத்தினர். அதன் நிறம் நல்ல கறுப்பு. நெற்றியிலே நட்சத்திரம் போல் வெள்ளைப் புள்ளி இருந்தது. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதனுடைய பார்வை பயங்கரமாக இருந்தது. அந்தக் குதிரை பொல்லாத
முரட்டுக்குதிரை என்பதைப் பார்த்தவுடனேயே அரசர் தெரிந்துகொண்டார்.
“அரசே, இதை இங்கே கொண்டுவருவதற்குள் நாங்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமன்று; ஆனாலும், இதை வசப்படுத்திவிட்டால் இது போர்க்களத்திலே அஞ்சாது எதிரிகளை எதிர்த்து விரட்டப்பயன்படும்” என்றான் பிடித்துவந்த ஆட்களிலே ஒருவன்.
உடனே அரசர், சில குதிரை வீரர்களை வர வழைத்தார். அவர்கள் ஒவ்வொருவராக அந்தக் குதிரையை அடக்கப் பார்த்தார்கள். ஒருவராலும் முடியவில்லை. ஒரு வீரனுக்குத் தலையிலே கடுமையான அடிபட்டது.
மற்றொருவனுக்கு முழங்காலில் இரத்தம் வழிந்தது. இன்னொருவனுக்கு முன் பற்கள் உதிர்ந்துவிட்டன. இப்படி எல்லாரும் தோல்வி அடைந்தனர்.
அப்போது திடீரென்று, அரசரின் பக்கத்திலே உட்கார்ந்திருந்த அவருடைய மகன் எழுந்தான் விரைவாக ஓடினான்; குதிரையின் அருகிலே போய் நின்றான். அவனைப் பார்த்ததும், எல்லாரும் திடுக்கிட்டனர். “என்ன, என்
மகனா! பெரிய பெரிய வீரர்களாலேயே இந்தக் குதிரையை அடக்க முடியவில்லையே! சிறுவனாகிய இவனுக்கு ஏன் இந்த வம்பு?” என்று அரசர் முணுமுணுத்தார்.
அதற்குள் அரசகுமாரன் குதிரையின் கடிவாளத்தைக் கையிலே பிடித்தான். அப்போது குதிரை சும்மா இருக்கவில்லை. தன் குணத்தைக் காட்டத் தொடங்கியது. அவன் சிறிதும் அஞ்சவில்லை. குதிரையை எதிர்ப் பக்கமாகத் திருப்பி நிறுத்தினான். மெதுவாகத் தட்டிக் கொடுத்தான். அது சும்மா நின்றது. ‘சட்’டென்று தாவி அதன் முதுகில் அமர்ந்தான். கடிவாளத்தை வெடுக்கென்று இழுத்தான். குதிரை மிக விரைவாகப் பாய்ந்து ஓடியது.
சிறிதுநேரம் ஆனது. குதிரை திரும்பிப் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தது. அப்போது அதன் முதுகிலே அரசகுமாரன் புன்சிரிப்புடன் உட்கார்ந்திருந்தான். குதிரை அவனுக்குப் பணிந்துவிட்டது என்பதை அரசரும் மற்றவர்களும் அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அரசரின் அருகிலே வந்ததும், குதிரையிலிருந்து அவன் இறங்கினான். அவனை அரசர் தட்டிக் கொடுத்தார்; “மகனே, இந்த முரட்டுக் குதிரையை எப்படி அடக்கினாய்? நீ செய்தது என்ன? மாயமா? மந்திரமா?” என்று கேட்டார்.
“தந்தையே, இதில் மாயமும் இல்லை; மந்திரமும் இல்லை. குதிரை ஏன் மருளுகிறது என்று உற்றுக் கவனித்தேன். அது தன் நிழலைப் பார்த்தே படப்படுத்தது என்பதை அறிந்தேன். அதனால் தான், அதைச் சூரியன் இருக்கும் திசையிலே திருப்பி நிறுத்தினேன். நிழல் பின்புறமாக விழுந்ததால், அது நிழலைப் பார்க்கவும் இல்லை; பயப்படவும் இல்லை; அமைதியாக நின்றது. அப்போது, நான் அதன் முதுகிலே ஏறி உட்கார்ந்து
கொண்டேன். அன்பாக அதனுடன் பேசினேன். தட்டிக்கொடுத்தேன். இனி, அக்குதிரை என் தோழன். தந்தையே, தாங்கள் இசைவளித்தால் அந்தக்
குதிரையை நானே வைத்துக் கொள்ளுகிறேன்” என்றான் மகன். அரசரும், சரி” என்றார்.
அந்த அரசகுமாரன் இருபதாம் வயதில் பட்டத்துக்கு வந்தான்; பதின்மூன்று ஆண்டுகளுக்குள் எகிப்து, பாரசீகம் முதலிய நாடுகளை வென்றான்; இந்தியாவுக்கும் வந்தான். ஆனால், அதிக நாள் இங்கே தங்கவில்லை. விரைவிலே திரும்பிப்போய்விட்டான்.
வரும்போது அவனை ஏற்றி வந்த அந்தக் கறுப்புக் குதிரை, போகும்போது அவனுடன் திரும்பிப்போகவில்லை. இந்தியாவிலேயே இறந்துவிட்டது. அப்போது அவன் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. சொந்த நாடு திரும்பியதும், அந்தக் குதிரையின் பெயரால் ஒரு நகரத்தை
அவன் அமைத்தான். அவன் பெயரிலும் இன்று எகிப்து நாட்டில் ஒரு பெரிய நகரம் இருக்கிறது. அலெக்ஸாந்திரியா என்பது அந்த நகரத்தின் பெயர்.
அப்படியானால் அவன் பெயர்…? ஆம், மகா அலெக்ஸாந்தர்!



