பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

11. மோட்டார் மன்னன்

தந்தையும், மைந்தனும் தெருவிலே சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எதிரே ஒரு வண்டி மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அந்த வண்டியை மாடு இழுக்கவில்லை; குதிரையும் இழுக்கவில்லை.

தானாகவே அது நகர்ந்து வந்தது. அதைப் பார்த்தான் அந்தச் சிறுவன். அவனுக்கு வியப்பாக இருந்தது.

உடனே, “அப்பா! அப்பா! இந்த வண்டிதானாக வருகிறதே!” என்றான். தந்தையும் வியப்புடன் அதைப் பார்த்துக்கொண்டு அங்கேயே செதுக்கிவைத்த சிலைபோல் நின்றுவிட்டார்.

ஆனால் அந்தச் சிறுவன், அங்கே நிற்கவில்லை. விரைவாக அந்த வண்டியை நோக்கி ஓடினான்; கையைக் காட்டி அந்த வண்டியை நிறுத்தினான். வண்டி நின்றதும், ஒரே தாவில் அவன் அந்த வண்டியில் ஏறினான். வண்டி ஓட்டியின் அருகிலே போய் நின்றுகொண்டு, “ஐயா, மன்னிக்க வேண்டும். இதற்கு முன் நான் இது போன்ற வண்டியைப் பார்த்ததே இல்லை. இது என்ன வண்டி?

இஃது எப்படித் தானாக ஓடுகிறது?” என்று ஆவலுடன் கேட்டான்.

வண்டி ஓட்டி அந்தச் சிறுவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒருமுறை பார்த்தார். அப்போது சிறுவனுக்குப் பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அவன் அவ்வளவு ஆர்வமாகக் கேள்வி கேட்டது வண்டி ஓட்டிக்கு வியப்பாக இருந்தது. உடனே அவர், “இங்கு ஒரு சாலை போடப்போகிறார்கள்.

அதற்காகத்தான் இதை ஓட்டிச்செல்கிறேன். இதன் பெயர் ‘ரோடு-என்ஜின்’. இது நீராவியால் ஓடுகிறது” என்றார்.

சிறுவன் உடனே வண்டியிலிருந்த பல பகுதிகளையும் கூர்ந்து பார்த்தான். “இஃது எப்படி வேலை செய்கிறது? மணிக்கு எவ்வளவு தூரம் போகும்?” என்று கேள்விமேல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான், வண்டி ஓட்டியும் பொறுமையாகப் பதில் கூறினார். எல்லாவற்றையும் அவன் கவனமாகக் கேட்டுக்கொண்டான்.

அன்றே அச்சிறுவனுக்கு ஓர் ஆசை உண்டாயிற்று. ‘மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய வண்டிகளைச் செய்ய வேண்டும். அவை மிக விரைவாக ஓடும்படி செய்ய வேண்டும்’ என்பது தான் அவனுடைய ஆசை. அடிக்கடி அதைப் பற்றியே அவன் நினைத்தான்.

பதின் மூன்றாம் வயதில் கடிகாரங்களைப் பழுது பார்க்க அவன் கற்றுக்கொண்டான். எந்தக் கடிகாரத்தைக் கொடுத்தாலும், அவன் மிக எளிதாகப் பழுது பார்த்து விடுவான். ஒரே ஆண்டில் முந்நூறு கடிகாரங்களை அவன் பழுது பார்த்திருக்கிறான்!

எல்லாரும் அவனுடைய திறமையைப் பாராட்டினார்கள். ஆனாலும், அவனுடைய தந்தைக்கு அவன் செய்கை பிடிக்கவில்லை. அவர் ஓர் உழவர்.

தம்மைப் போலவே தம் மைந்தனும் ஓர் உழவனாக வேண்டும் என்றே அவர் விரும்பினார். ஆனாலும், என்ன செய்வது? மைந்தனுடைய ஆசை அளவு மீறிப் போய்விட்டதே!

அவன் ஓர் எந்திரத் தொழிற்சாலையில் சேர்ந்தான். பகலிலே தொழிற்சாலையில் வேலை செய்வான்; இரவிலே, விரைவாக ஓடும் வண்டியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆராய்ச்சி செய்வான்; இப்படிப் பல நாள் முயன்றான். முடிவில் அவனது முயற்சி வெற்றி பெற்றது. 1893இல் அவன் மோட்டார் வண்டியைக் கண்டு பிடித்தான், பின்னர்ச் சொந்தமாக ஒரு மோட்டார்க் கம்பெனியைத் தொடங்கினான். ஆயிரக்கணக்கான மோட்டார்களைச் செய்தான். உலகம் எங்கும் அவன் மோட்டார்கள் சென்றன.

அவற்றுக்கு நல்ல தேவை ஏற்பட்டது. இலட்சம் லட்சமாக அவன் சம்பாதித்தான். ஏழை உழவனின் மைந்தனாகப் பிறந்த அவன், உலகிலேயே மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவன் ஆனான். மோட்டார் மன்னன் என்று உலகமே அவனைப் புகழ்ந்தது.

அவன் ஏற்படுத்திய ‘மோட்டார்க் கம்பெனி’யில் இப்போது முந்நூறு அமைப்புக்கள்கின்றன. அந்தக் கம்பெனிக்குச் சொந்தமாகப் பல இரப்பர்த் தோட்டங்கள் உண்டு. இவை மட்டுமா? இரும்புச்சுரங்கங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், பொருள்களை ஏற்றிச் செல்லத் தனிப்புகைவண்டிப் பாதைகள் எல்லாம் இருக்கின்றன.

அவன் ‘கம்பெனி’யில் செய்யப்பட்ட மோட்டார் வண்டிகள் உலகப் புகழ்பெற்றவை. ‘ஃபோர்ட் மோட்டார்’ என்னும் பெயரை நீங்கள் கேள்விப்பட்பட்டிருப்பீர்களே! ஹென்றி ஃபோர்ட் என்ற அமொரிக்கச் சிறுவனின் விடாமுயற்சி வெற்றிபெற்றது என்பதையே அந்த ‘மோட்டார்’ நமக்கு எடுத்துக் காட்டுகிறது!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 4.2 / 5. வாக்கு எண்ணிக்கை: 5

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *