பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

18. குதிரையின் மகிழ்ச்சி

ஜவகர்லால் நேரு சிறுவராயிருந்தபோது, அவருடைய தந்தையாரிடம் ஒரு கணக்குப்பிள்ளை இருந்தார். முன்ஷி முபாரக் அலி என்பது அவருடைய பெயர். குழந்தைகளிடத்தில் அவர் மிகவும் அன்பாக இருப்பார். நேருவிடத்தில் அவருக்குத் தனி அன்பு உண்டு.

முபாரக் அலியைக் கண்டதும் நேரு ஓடிப்போய் அவரைக் கட்டிப்பிடித்துக் கொள்வார்: கதை சொல்லும்படி கேட்பார். முபாரக் அலி அரபிக் கதைகளையும், மற்றக் கதைகளையும் நேரிலே பார்த்ததுபோல் கூறுவார்; அத்துடன் 1857 ஆம் ஆண்டில் நம் நாட்டில் நடந்த சுதந்தரப் போரைப் பற்றியும் சொல்வார். அந்தப் போரிலே அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பலரை ஆங்கிலேயர்கள் கொன்று விட்டார்களாம். அந்த நிகழ்ச்சியைக் கேட்கக் கேட்க நேருவுக்கு வருத்தமாயிருக்கும். ஆங்கிலேயரின் ஆட்சிமீது அவருக்குக் கோபம் வரும்.

ஏழு, எட்டு வயதுக்குழந்தையாயிருக்கும் போதே நேரு நன்றாகக் குதிரைச் சவாரி செய்வார். அவருக்கு அவருடைய தந்தையார் அழகான குதிரைக் குட்டி ஒன்றை வாங்கிக் கொடுத்தார். நாடோறும் நேரு அதன் மேல் ஏறி, அலகாபாத் நகரை ஆனந்தமாகச் சுற்றி வருவார். அப்போது அலகாபாத்தில் குதிரைப் படையைச் சேர்ந்த குதிரை வீரர் ஒருவர் இருந்தார். நேரு அவருடன் சேர்ந்து நாடோறும் குதிரைச்சவாரி செய்வார்.

ஒருநாள் அரபிக் கதையில் வரும் குதிரைகளைப் பற்றி முபாரக் அலி நேருவிடம் கூறினார்; அந்தக் குதிரைகள் செய்த வீரதீரச் செயல்களைப் பற்றியும், அவை எப்படிப் பறந்து சென்றன என்பதைப் பற்றியும் விளக்கமாகக் கூறினார். அன்று குதிரை ஏறிச் செல்லும்போது, முபாரக் அலி சொன்ன கதைகளையெல்லாம் குதிரைக் குட்டியிடம் நேரு கூறினார்;

கூறிவிட்டு, “நீயும் அந்தக் குதிரைகளைப் போல் பறக்கவேண்டும். உம், ங்கே பார்க்கலாம்” என்றார். அதைத் தட்டி ஓட்டினார். குதிரைக் குட்டி காற்றைப்போல் விரைவாக ஓட ஆரம்பித்துவிட்டது. நேருவுக்கு ஒரே மகிழ்ச்சி. “உம், அப்படித்தான். ஓடு, ஓடு” என்று விரட்டினார். குதிரைக் குட்டிக்கும் ஒரே கொண்டாட்டம், கண்மண் தெரியாமல் தாவித் தாவி ஓடியது.

தாவித் தாவி ஓடும்போது நேரு தவறிக் கீழே விழுந்து விட்டார். அவர் விழுந்ததைக்கூடக் குதிரை கவனிக்கவில்லை. அது வீடு போய் நின்றது. அப்போது ‘டென்னிஸ்’ விளையாடிக் கொண்டிருந்தார் நேருவின் தந்தை.

அவர் குதிரை மட்டும் தனியாக வந்ததைக் கண்டதும், “ஜவகர் எங்கே? அவனுக்கு என்ன ஆயிற்றோ?” என்று திகைப்படைந்தார். உடனே ஜவகருடைய தாய்க்குச் செய்தி எட்டியது. எல்லாரும் அலறிக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்டார்கள், ஜவகரைத் தேடிக்கொண்டு போனார்கள்.

அவர்கள் சென்றது பெரிய ஊர்வலம் போலவே இருந்தது.

அச்சமயத்தில் குதிரையிலிருந்து விழுந்த ஜவகர் மெதுவாக எழுந்தார்; ஆடையில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டார்; பிறகு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அவருடைய பெற்றோரும், மற்றவரும் வழியிலே அவரைப் பார்த்துவிட்டனர், “பெரிய வீரனை வரவேற்பதற்கு வருவதுபோல் அல்லவா இவர்கள் கூட்டமாக வருகிறார்கள்!” என்று நேரு நினைத்தார்.

நேருவைக் கண்டதும் அவருடைய தாய் தந்தையர் ஓடிச்சென்று, “ஏதேனும் காயம் பட்டதா?” என்று பரிவோடு கேட்டார்கள்.

“இல்லையே! எனக்கு எத்தகைய காயமும் இல்லை” என்று சிரித்துக்கொண்டே கூறினார் ஜவகர்.

“நல்ல வேளை” என்று பெருமூச்சு விட்டாள் அவர் அன்னை.

“குதிரைக் குட்டி வீட்டிற்குப் பத்திரமாக வந்துவிட்டதா?” என்று கேட்டார் ஜவகர்.

“அது தனியாக வந்ததால்தானே நாங்கள் பதறிப்போனோம்” என்றார் தந்தை.

எல்லாரும் வீடு திரும்பினர். குதிரைக் குட்டி ஜவகரைப் பார்த்தது. ஜவகரும் குதிரைக் குட்டியைப் பார்த்தார். பார்க்கிறதைப் பார். என்னைக் கீழே தள்ளிவிட்டு நீ மட்டும் வந்துவிட்டாயே! உன்னை என்ன செய்கிறேன் பார்”

என்று நேரு ஆத்திரப்பட்டாரா? இல்லை. எப்போதும் போல் அதனிடம் அவர் அன்பு காட்டினார். அன்று முதல் குதிரை ஏறுவதை விட்டுவிட்டாரா? இல்லை, வழக்கம்போல் நாடோறும் அதன்மீது ஏறி இளவரசரைப் போல் சுற்றி வந்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 4.2 / 5. வாக்கு எண்ணிக்கை: 5

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *