
பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
19. பனிமலைப் புலி
‘பனிமலைப் புலி’ என்றால் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும், 29,028 அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திலே முதல் முதலாக ஏறி, இந்தியக்கொடியை நாட்டிய டென்சிங்கைத்தான் ‘பனிமலைப் புலி’ என்று உலகம் அழைக்கிறது.
டென்சிங்கின் முழுப்பெயர் டென்சிங் நோர்கே என்பது. ஆனால், அந்தப் பெயர் அவருடைய பெற்றோர் வைத்த பெயரன்று; அது லாமா என்னும் அவர்களுடைய சமய குருவைத்த பெயர், பெற்றோர் வைத்த பெயர் என்ன தெரியுமா? நாம்கியால் வாங்டி என்பதே.
பெயர் சூட்டிய சில நாட்களில் அவரைச் சமயகுருவிடம் தூக்கிச் சென்றார்கள்.
குழந்தையை வாழ்த்தி அருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். உடனே அவர் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தார். “இந்தப் பிள்ளை முற்பிறப்பில் மிகப் பெரிய பணக்காரனாக இருந்திருக்கிறான்” என்றார்.
“ஆ! அப்படியா!” என்று பெற்றோர்கள் வியப்போடு கேட்டார்கள். “ஆமாம் அதனால், இப்போது நீங்கள் வைத்திருக்கும் பெயர் பொருத்தமாக இல்லை.
வேறு பெயர் வைக்கவேண்டும்” என்றார் லாமா.
“என்ன பெயர் வைப்பது? நீங்களே சொல்லுங்கள்” என்றார்கள். “டென்சிங் நோர்கே என்பதே பொருத்தமான பெயர். டென்சிங் என்றால் சமயத்தைக் காப்பவன் என்றும், நோர்கே என்றால் செல்வன் என்றும் பொருள். நமது புத்த சமயத்தைக் காக்கும் செல்வனாக இவன் விளங்குவான்” என்று கூறி வாழ்த்தினார் அவர்.
டென்சிங்கின் கூடப் பிறந்தவர்கள் பதின்மூன்று பேர். ஏழு ஆண்கள்; ஆறு பெண்கள். பதினோராவது பிள்ளையாக டென்சிங் பிறந்தார். டென்சிங், ‘ஷெர்பா’ என்ற இனத்தைச் சேர்ந்தவர். ‘ஷெர்பா’ என்றால் கிழக்கே இருந்து வந்தவன் என்று பொருள். நெடுங்காலத்துக்கு முன்னர் திபெத் நாட்டிலிருந்து அவருடைய முன்னோர்கள் இந்தியாவிற்கு வந்தார்களாம்.
அவர்களுடைய பஞ்சாங்கத்தின்படி ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு பிராணியின் பெயர் உண்டு.
மாடு, குதிரை, முயல், புலி, பாம்பு இப்படித்தான் அந்தப் பெயர்கள் இருக்குமாம். முயல் ஆண்டில் தான் டென்சிங் பிறந்தாராம். அதாவது 1914ஆம் ஆண்டு மே திங்கள். ஆனால், நாள் தெரியாதாம்.
சிறு குழந்தையாக இருந்தபோது டென்சிங் அடிக்கடி எவரெஸ்ட் சிகரத்தை அண்ணாந்து பார்ப்பார். “தம்பி, அதோ பார்த்தாயா, அதுதான் பறவையும் எட்டிப் பறக்க முடியாத அளவு உயரமான மலை” என்று அவருடைய தாய்
அடிக்கடி சொல்வாள். அப்போதே டென்சிங்கிற்கு அந்த மலை உச்சியில் எப்படியாவது ஏறிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது. டென்சிங் சிறுபையனாக இருந்தபோது அவரை ஒரு லாமா ஆக்கிவிட வேண்டும் என்று அவருடைய தந்தையார் தீர்மானித்தார். அவர்களுடைய சமய குருவுக்கு லாமா என்று பெயர். ஒரு மடத்திலே அவரைக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார். அங்கே போய்ச் சேர்ந்ததும், முதலில் அவருடைய தலையை மழுங்க மொட்டையடித்தார்கள்; காவி உடை கொடுத்துக் கட்டிக்கொள்ளச் சொன்னார்கள். டென்சிங், அவர்கள் சொன்னபடியெல்லாம் செய்தார்.
ஆனாலும், அதிக நாட்கள் அங்கே அவர் தங்கியிருக்கவில்லை.
ஒரு நாள் அந்த மடத்தில் இருந்த ஒரு லாமாவுக்கும், டென்சிங்கிற்கும் பிணக்கு ஏற்பட்டது. கோபத்தில் அந்த லாமா ஒரு கட்டையைத் தூக்கி ‘பட்’ என்று டென்சிங்கின் மொட்டைத் தலையில் அடித்து விட்டார். அடி விழுந்த உடனே டென்சிங் அந்த இடத்தைவிட்டு விரைவாக வீட்டுக்கு ஓடினார். தந்தையாரிடம் நடந்ததைக் கூறினார். “இனி அந்த மடத்துப்பக்கம் தலைகாட்டவே மாட்டேன்” என்று கூறிவிட்டார்.
சில நாட்கள் சென்றன. ஒருநாள் வீட்டில் யாரிடத்திலும் சொல்லாமல் டென்சிங் ஊரைவிட்டுப் புறப்பட்டுவிட்டார். இமயமலையில் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்தார். பிறகு, மலை ஏறும் குழுவினருக்கு மூட்டை தூக்கும் கூலியாளாக இருந்தார். முடிவில் ஹில்லரி என்ற வெள்ளைக்காரருடன் சேர்ந்து எவரெஸ்ட் சிகரத்தையே எட்டிப் பிடித்துவிட்டார்!
அன்று, டென்சிங்கின் மொட்டைத்தலையில் கட்டையால் அடித்தாரே ஒரு லாமா, அவருக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். இல்லையேல், டென்சிங் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியிருப்பாரா? அங்கே இந்தியக் கொடியை நாட்டியிருப்பாரா? அவரும் ஒரு லாமாவாகத்தானே இருந்திருப்பார்?



