
பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
17. பொம்மைக்குக் கண் வைத்தவள்
அவளுக்கோ கண் குருடு. காது செவிடு. ஒன்பது வயதுவரை வாயும் ஊமையாகவே இருந்தது. பாவம், பிறந்த பத்தொன்பதாவது மாதத்தில் திடீரென்று அவளுக்குக் கடுமையான காய்ச்சல் கண்டது. தாயும் தந்தையும் மருத்துவர்களை அழைத்துவந்து காட்டினர்.
“குழந்தை பிழைக்காது” என்று மருத்துவர்கள் கைவிட்டுவிட்டனர்.
ஆனாலும், எமன் ஏமாந்து போனான்! குழந்தை பிழைத்துக் கொண்டது! பெற்றோர் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காரணம், அந்தப் பொல்லாத நோய் போகும்போது, குழந்தையின் பார்க்கும் ஆற்றல், கேட்கும் ஆற்றல், பேசும் ஆற்றல் ஆகியவற்றையும் கூடவே கொண்டு போய்விட்டது.
ஆயினும், அவள் சிறிய வயதிலே மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். தோட்டத்திலுள்ள பூக்களையும் செடிகளையும் தொட்டுப்பார்த்தே அவற்றின் பெயர்களைத் தெரிந்துகொள்வாள்.
எவருடைய உதவியும் இல்லாமல் அவளாகவே மாடிப்படிகளில் ஏறி அறைக்குச் செல்வாள்; பெட்டியைத் திறந்து உடைகளை எடுத்து அணிந்து கொள்வாள்; தலைவாரிக் கொள்வாள். முகத்துக்கு மாவு பூசிக் கொள்வாள்.
பூட்டு, சாவி இரண்டையும் அவள் தடவித்தடவிப் பார்த்தே அவற்றின் பயன்களைத் தெரிந்துகொண்டாள்; அறையை எப்படிப் பூட்டுவது என்பதையும் கற்றுக்கொண்டாள்.
ஒருநாள், அவளுடைய தாயாரை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டாள். பூட்டிவிட்டுக்கதவிலே சாய்ந்துகொண்டு வயிறு குலுங்கச் சிரித்தாள். நெடுநேரம் சென்ற பிறகே தாயாருக்கு விடுதலை கிடைத்தது.
அவளுக்கு ஆறு வயது இருக்கும். அப்போது ஒருநாள் அவளுடைய அத்தை அவளிடம் ஒரு துணிப் பொம்மையைக் கொடுத்தாள். அந்தப் பொம்மையைக் கண் தெரியாத அச்சிறுமி மார்போடு அணைத்துக் கொண்டாள். மெதுவாக அதைத் தொட்டுத்தடவிப் பார்த்தாள். அதன் முகத்தில் கண், காது, மூக்கு, வாய் எதுவும் இல்லை. திரும்பத் திரும்பத் தடவிப்பார்த்தாள். “என்ன இது! இதற்கும் கண்கள் இல்லையா?” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
“இதற்கு எப்படிக் கண் வைப்பது?” என்று சிறிதுநேரம் சிந்தித்துப் பார்த்தாள்.
திடீரென்று அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அத்தையின் அருகிலே சென்றாள். அவளுடைய சட்டையில் கையை வைத்துத் தடவிப் பார்த்தாள்.
அந்தச் சட்டையின் ஓரத்தில் கண்ணாடி மணிகள் இருந்தன. உருண்டையாக இருந்த அந்த மணிகளில் இரண்டை ‘வெடுக்’ கென்று அவள் பறித்தாள். அத்தையின் கையிலே கொடுத்துப் பொம்மையின் முகத்தைக் காட்டினாள்.
அத்தைக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பொம்மையின் முகத்தில் கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் சிறுமி விரலால் குத்திக் காட்டினாள்,
அவள் குறிப்பிடும் செய்தி அப்போதுதான் அத்தைக்குப் புரிந்தது. உடனே அவள் அந்தக் கண்ணாடி மணிகளைப் பொம்மையின் முகத்திலே கண்கள் இருக்கவேண்டிய இடத்திலே வைத்துத்தைத்தாள். பிறகு சிறுமியிடம் கொடுத்தாள். பொம்மையின் முகத்தைத் தடவித்தடவிப் பார்த்து அச்சிறுமி ஆனந்தம் அடைந்தாள்.
ஒன்பது வயது வரைதான் அவள் ஊமையாக இருந்தாள். அப்புறம் பேசும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள். ஆயினும், பார்க்கும் ஆற்றலோ, கேட்கும் ஆற்றலோ இறுதிவரை அவள் பெறவில்லை. அதனால் என்ன? கண்ணும் காதும் நன்றாக இருப்பவர்களையெல்லாம் அவள் பல வழிகளில் தனது இடைவிடா முயற்சியினால் விஞ்சிவிட்டாள்!
அவள் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறாள், நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்து அறிவைப் பெருக்கிக் கொண்டிருக்கிறாள். ஏழு புத்தகங்களை அவளே எழுதியிருக்கிறாள். திரைப்படத்திலும் நடித்திருக்கிறாள்.
ஆம், அவளுடைய அதிசய வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தார்கள். அதில்தான் அவள் நடித்திருக்கிறாள். ஒன்பது ஆண்டுகள் ஊமையாக இருந்த அவள், உலகின் பல பாகங்களுக்கும் சென்று சொற்பொழிவு செய்திருக்கிறாள். சில ஆண்டுகளுக்கு முன்னர்ச் சென்னைக்குக்கூட வந்தாள்.
அப்போது அவள் சிறுமியல்லள்; எண்பத்தேழு வயதுவரை வாழ்ந்த பாட்டி!
ஹெலன் கெல்லர் என்ற அமெரிக்கப் பெண்மணிதான் அந்தப் பாட்டி!



