
பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
12. பறந்து காட்டியவன்
விடுமுறை வந்துவிட்டால் போதும்; தாயும் மூன்று குழந்தைகளும் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிடுவார்கள். பகல் உணவைக் கையிலே எடுத்துக் கொள்வார்கள். ஆற்றங்கரைக்கோ அல்லது பக்கத்திலுள்ள காட்டுக்கோ போவார்கள். அங்கே பகல் முழுவதும் தங்கிவிட்டு, இரவுதான் வீடு திரும்புவார்கள்.
அந்த மூன்று குழந்தைகளிலே இருவர் ஆண்கள்; மூன்றாம் குழந்தை ஒரு பெண்.
அவர்களுடைய தந்தையார் ஒரு சமயத்தலைவர். மேயச்சொற்பொழிவு செய்வதற்காக அவர் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அவர் பெரும்பாலும் வீட்டில் தங்கமாட்டார். விடுமுறை நாட்களில், தாய் அவர்களை வெளியிலே அழைத்துச் சென்று இயற்கைக் காட்சிகளை யெல்லாம் காட்டுவாள். ஆற்றங்கரையிலோ, காட்டிலோ தங்கியிருக்கும்போது, அவள் அவர்களுக்கு இனிக்க இனிக்கக்கதைகள் சொல்லுவாள். ஏதேனும் ஒரு பறவையின் குரல் கேட்டால் உடனே, “இஃது எந்தப் பறவையின் குரல்?
“சொல்லுங்கள், பார்க்கலாம்” என்பாள். ஒரு குழந்தை சரியாகச் சொல்லிவிட்டால், உடனே அந்தக் குழந்தையைத் தட்டிக்கொடுப்பாள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பாள்.
யாருக்குமே தெரியாமற்போனால், “அந்தப் பறவை இந்தப்பக்கமாக வரும். வரும்போது காட்டுகிறேன்” என்று தாய் கூறுவாள். அவ்வாறே அந்தப் பறவை அந்தப் பக்கம் வரும்போது காட்டுவாள். இதனால், எல்லாப் பறவைகளையும் அவர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். அவற்றின் குரல்களையும் எளிதில் தெரிந்து கொண்டார்கள். ஒருநாள், ஆண் குழந்தைகள் இருவரும் ஆற்றங்கரையிலே மீன் பிடித்துக்
கொண்டிருதார்கள். அன்னையும் அருகிலே இருந்தாள். நெடுநேரம் வரை வலையில் மீன் விழவில்லை. அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள். அப்போது ஒரு பெரிய பறவை பறந்து வந்தது. அது ‘தொப்’ பென்று தண்ணீருக்குள் பாய்ந்தது. தன் அலகினால், ஒரு மீனைக் கொத்திக்கொண்டு மேலே பறந்து சென்றது.
அதைப் பார்த்தான் மூத்த மைந்தன். உடனே தாயை நோக்கி, “அம்மா, அம்மா, பார்த்தாயா? கண்மூடிக் கண்திறப்பதற்குள் அந்தப் பறவை மீனைத் தூக்கிக்கொண்டு பறந்துவிட்டது! எப்படி அம்மா அந்தப் பறவையால் நினைத்தபடி பறக்க முடிகிறது?” என்று கேட்டான்.
“இறக்கைகளினால் தான் அது பறக்கிறது. அதன் இறக்கைகள் அசைவதைப் பார்த்தாயா?” என்றாள் தாய்.
“அது சரி. ஆனால், கீழே இறங்கும்போது இறக்கைகள் அசையவே இல்லையே!”
தாய் அதற்குப் பதில் சொல்ல முயன்றாள், சிறுவனுக்கு அது மன அமைதி அளிக்கவில்லை.
“அம்மா, நமக்கும் இறக்கை இருந்தால்…? பறவையைப் போல வானத்தில் பறக்கலாம் அன்றோ?”
“பறக்கலாம். ஆனால் ஆண்டவன் நமக்கு இறக்கைகளைப் படைக்கவில்லையே!”
“ஆண்டவன் படைக்காமற்போனால் என்ன? நாமே இறக்கைகள் செய்து கொள்ள முடியாதா?”
“முடியுமோ, என்னவோ, எனக்குத் தெரியாதப்பா. யாரும் இறக்கை கட்டிக்கொண்டு பறந்ததாகத் தெரியவில்லை.”
“அப்படியானால், நான் பறந்து காட்டுகிறேன். என்றாவது ஒருநாள் வானில் பறந்து காட்டுவேன்.”
“அண்ணன் கூடவே நானும் பறப்பேன்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினான் அருகிலே இருந்த தம்பி.”
“சரி, இப்போது பறந்து விடாதீர்கள். இன்னும் வயதாகட்டும்” என்று தாய் சிரித்துக் கொண்டே கூறினாள்.
“நம் பிள்ளைகள் கெட்டிக்காரப்பிள்ளைகள் தாம்” என்று அவள் மனத்திற்குள்ளே நினைத்துக்கொண்டாள். பிற்காலத்தில் அவர்களைக் கெட்டிக்காரர்கள் என்று இந்த உலகமே மனம்விட்டுப் பாராட்டத் தொடங்கிவிட்டது.
சிறு வயதிலே, வானத்தில் பறக்கவேண்டும் என்று ஆசை கொண்ட அச்சிறுவன் பெயர் வில்பர் ரைட்; அவன் தம்பி பெயர் ஆர்வில் ரைட். 1903ஆம் ஆண்டில் பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து வானத்திலே பறக்க விட்டவர்கள் அவர்கள், ரைட் சகோதரர்கள் என்னும் அவர்களது விடாமுயற்சியால்தான் இன்று வானவூர்தி பறப்பதை நாம் பார்க்கின்றோம்.



