
பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
16. ஆணியும் ஆல்பர்ட்டும்
தந்தையின் மேசைமேல் ஒரு கிண்ணம் இருந்தது. நான்கு வயதுச் சிறுவனாகிய ஆல்பர்ட் அதன் அருகில் சென்றான். கிண்ணத்தை உற்றுப் பார்த்தான், அதன் நடுவிலே ஒரு கம்பி செங்குத்தாக இருந்தது. அதன் மேல் கடிகார முள்போல் ஓர் ஊசி பொருத்தப்பட்டிருந்தது. அவன் அதைக் கையில் எடுத்தான். அப்போது அந்த ஊசி மெதுவாக ஆடியது; கிண்ணத்தை இப்படியும் அப்படியுமாக அவன் திருப்பினான். எந்தப்பக்கமாகத் திருப்பினாலும் அந்த ஊசி தெற்கு வடக்காகவே நின்றது. அவன் அதை மேற்குப் பக்கமாகத் திருப்பினான். ஊசி தெற்குவடக்காகவே நின்றது.
கிழக்குப்பக்கமாகத் திருப்பினான். அப்போதும் அது தெற்குவடக்காகவே நின்றது. அவனுக்கு அது வியப்பாக இருந்தது.
“அப்பா, அப்பா” என்று அழைத்தான். தந்தை அருகிலே வந்தார்.
“இஃது என்ன அப்பா?” என்று கேட்டான்.
“இதுதான் காந்த ஊசி, கப்பலில் செல்லும்போது திசை அறிவதற்கு உதவியாக இருக்கும்” என்று தந்தை பதில் சொன்னார்.
மின்சாரக்கருவிகளை விற்பனை செய்வதுதான் அவருடைய தொழில். அன்றுமுதல் அவர் கொண்டுவரும் மின்சாரக் கருவிகளை எல்லாம் ஆல்பர்ட் ஆர்வத்துடன் ஆசி பார்ப்பான். ‘இது என்ன? அது என்ன?’ என்று கேள்விகள் கேட்பான். அவன் கேட்கும் கேள்விகளைக் கேட்டுத் தந்தையார் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார். “நம் மைந்தன் நுண்ணறிவுடன் கேள்வி கேட்கிறானே” என்று ஒரு பக்கம் மகிழ்ச்சி. “முன்பெல்லாம் திக்கிப் திக்கிப் பேசுவான்,
இப்போது தெளிவாகப் பேசுகிறானே!” என்று மற்றொரு பக்கம் மகிழ்ச்சி. ஆல்பர்ட் பிறந்து பல திங்கள் வரை பேசவே இல்லை. பேச ஆரம்பித்த பிறகும், புரியும்படி பேசமாட்டான், வாய் குளறும். “பாவம், ஒரே பிள்ளை. அவனும் இப்படி உளறுவாயனாக இருக்கிருனே!” என்று அக்கம் பக்கத்திலிருந்தவர்களெல்லாம் இரக்கப்படுவார்களாம்.
சின்னஞ்சிறு குழந்தையாயிருந்தபோது ஆல்பர்ட்டைப் பார்த்துப் பலர் இரக்கப்பட்டார்கள். பள்ளியில் சேர்ந்த பிறகு பல மாணவர்கள் அவனைப் பார்த்து முகம் சுளித்தார்கள்.
ஒருநாள் ஓர் ஆசிரியர் துருப்பிடித்த ஆணி ஒன்றை வகுப்புக்குக்கொண்டு வந்தார். “மாணவர்களே! நம் ஏசுநாதரைச் சிலுவையில் அறைந்து கொன்றவர்கள் யார்?” என்று கேட்டார்.
“யூதர்கள்” என்றார்கள் மாணவர்கள்.
“ஏசுநாதரைக் கொல்ல உதவிய ஆணி எது தெரியுமா? இதோ இருக்கிறது” என்று அந்த ரக ஆணியை மேலே தூக்கிப்பிடித்துக் காட்டினார் ஆசிரியர். மாணவர்கள் அந்த ஆணியைப் பார்க்கவில்லை. ஆல்பர்ட்டையே உற்றுப் பார்த்தனர்.
ஆல்பர்ட்டுக்கு இச்செயல் அவமானமாக இருந்தது. வேதனையாகவும் இருந்தது. காரணம் அவன் யூதர் குடும்பத்திலே பிறந்தவன் என்பதே. இப்படி இரக்கத்துக்கும் வெறுப்புக்கும் ஒரு காலத்தில் ஆளாகியிருந்த ஆல்பர்ட், பிற்காலத்தில் உலகமே போற்றும் ஒரு பெரிய விஞ்ஞானியானான்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்றால், கேட்பவர், “அடேயப்பா! அவர் பெளதிகத்துக்குப் புத்துயிர் அளித்த மேதை! மிகப்பெரிய கணித நிபுணர்! நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி” என்றெல்லாம் பாராட்டத் தொடங்கி விடுவார்கள்.
ஆனால், ஐன்ஸ்டினுக்குப் பாராட்டு என்றாலே பிடிக்காது. அவர் எப்போதும் அடக்கமாகவும், அமைதியாகவும், எளிமையாகவும் இருப்பார்.
ஒருநாள் பெர்லின் நகரில் ‘டிராம் வண்டி’யில் ஐன்ஸ்டின் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, டிராம் கட்டணம் செலுத்த அவரிடம் சில்லறை இல்லை. ஆகையால், நோட்டு ஒன்றைப் பயணச்சீட்டு விற்பவரிடம் நீட்டினார். கோட்டைப் பெற்றுக்கொண்ட அவர், கட்டணம் போக மீதிச் சில்லறையை ஐன்ஸ்டினிடம் கொடுத்தார், சில்லறை சரியாகத்தான் இருந்தது. ஆனாலும் எங்கோ கவனமாக இருந்த ஐன்ஸ்டின் சில்லறையை எண்ணிப் பார்த்துவிட்டு, “ஏனப்பா, சில்லறை சரியாக இல்லையே!” என்றார்.
சீட்டு விற்பவருக்குக் கோபம் வந்துவிட்டது. “எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. உமக்கு சாதாரணக் கூட்டல் கழித்தல்கூடத் தெரியவில்லையே!” என்று அவர் சீறினார்.
அவர் ஒரு பெரிய கணிதமேதை என்பது பாவம், அப்போது அந்தப் பயணச்சீட்டு விற்பவருக்குத் தெரியாது!



