பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

14. பறவைக்கு விடுதலை

அண்ணன் பெயர் விளாதிமிர்.

தங்கை பெயர் ஒல்யா.

இருவரும் எப்போதும் ஒன்றாகவே விளையாடுவார்கள். தோட்டத்தில் அண்ணன் ஓடுவான்; தங்கை அவனைத் துரத்துவாள். மரத்தின் மீது அவன் ‘மட மட’ என்று ஏறுவான். அவளும் தட்டுத்தடுமாறி எப்படியோ ஏற முயலுவாள். அவன் கிளை வழியாக நடந்து சென்று, ‘தொப்’ பென்று கீழே குதிப்பான். அவள் மரத்தை விட்டு இறங்கி மீண்டும் துரத்துவாள். இப்படியே இருவரும் ஓடிப் பிடிக்கும் விளையாட்டில் மும்முரமாக ஈடுபடுவார்கள்.

தோட்டத்தில் மட்டுமன்று; வீட்டுக்குள்ளேயும் அவர்கள் இப்படி விளையாடுவார்கள். அப்பொழுது அவர்கள் உரக்கக் கூச்சல் போடுவார்கள்.

“ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்?” என்று சில சமயங்களில் தாய் சினந்து கொள்வாள். தாய்க்கு எவ்வளவுதான் சினம் வந்தாலும், குழந்தைகளை அடிக்கவேமாட்டாள். சினம் அதிகமாக வந்து விட்டால், அவள் என்ன செய்வாள், தெரியுமா?

தந்தையின் அறையிலே கைப்பிடியுடன் கூடிய ஒரு கறுப்பு நாற்காலி இருக்கும். எந்தக் குழந்தையாவது தவறு செய்தால், அந்தக் குழந்தையை அந்தக் கறுப்பு நாற்காலியில் அவள் உட்கார வைத்துவிடுவாள். “எங்கும்

போகக்கூடாது. இங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டும். நான் போகச் சொன்னால்தான் போகலாம்” என்று கண்டிப்பாக உத்தரவு இடுவாள். குழந்தைகளை நாற்காலியுடன் சேர்த்துக் கயிற்றால் கட்டிவைக்கமாட்டாள். ஆயினும், கட்டி வைத்தது போல் அவர்கள் ஆடாமல் அசையாமல் நாற்காலியில் உட்கார்ந்திருப்பார்கள்.

சிறிதுநேரம் சென்றதும், அன்னை நாற்காலியின் அருகிலே வருவாள். “என் கண்மணியே, நீ தப்பு செய்யலாமா? இனிச் செய்யக்கூடாது. போய் விளையாடு” என்பாள்.

ஒருநாள் விளாதிமிர் ஏதோ ஒரு சிறு தவறு செய்துவிட்டான். அதனால், அன்னை அவனைக் கறுப்பு நாற்காலியில் உட்காரவைத்தாள். வழக்கம் போல் சிறிது நேரத்தில் தனக்கு விடுதலை கிடைத்துவிடும் என்றே அவன் நினைத்தான். ஆனால், இரண்டு மூன்று மணி நேரமாகியும் அன்னை வரவில்லை. அவன் அப்படியே நாற்காலியில் சாய்ந்து தூங்கிவிட்டான். வேலை மும்மூரத்தில் அவன் நாற்காலியில் இருப்பதை அம்மா மறந்துவிட்டாள்.

அவள், நெடுநேரம் சென்ற பிறகே, “அடடா ! பிள்ளையை எவ்வளவு நேரம் உட்கார வைத்துவிட்டோம்” என்று நினைத்தாள். உடனே கறுப்பு நாற்காலியை நோக்கி ஓடினாள், விளாதிமிர் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவனைக் கீழே இறக்கிக் கட்டிலில் படுக்கவைத்தாள்.

ஒரு சமயம், விளாதிமிர் ஒரு மைனாவைப் பிடித்துவந்து கூட்டிலே அடைத்து வளர்த்து வந்தான். ஆனால், அந்த மைனா அதிக நாள் உயிரோடு இருக்கவில்லை. உடல்மெலிந்து, சிறகு உதிர்ந்து விரைவிலே இறந்துவிட்டது. இறந்துபோன மைனாவைக் கண்டதும், அவன் கண்கள் கலங்கின. ‘சுதந்தரமாகப் பறந்து திரிந்த பறவையைக் கூட்டிலே அடைத்துக் கொடுமைப்படுத்தினேன். அது கூட்டை விட்டுப் போகமுடியவில்லை.

அதனால் இந்த உலகத்தை விட்டே போய்விட்டதே’ என்று உள்ளம் கலங்கினான். அதேசமயம் அவன், “இனி நான் எந்தப் பறவையையும் கூட்டில் அடைக்கமாட்டேன்” என்று உறுதி செய்து கொண்டான்.

அந்த நாளில் வசந்த காலம் வந்தால், கூட்டுப் பறவைகளுக்கெல்லாம் விடுதலை கிடைக்கும். பறவை வளர்ப்பவர்கள் கூடுகளைத் திறந்து பறவைகளைப் பறக்கவிடுவார்கள்.

விளாதிமிர்தான் பறவைகளைக் கூட்டில் அடைப்பதில்லையே! அதனால் அவன் அன்னையிடம் காசு வாங்கி அந்தக் காசில் பறவை வியாபாரியிடமிருந்து ஒரு பறவையை வாங்குவான். வாங்கியவுடனே, அதைத் தூக்கி மேலே எறிவான். அது சிறகடித்துப் பறந்து செல்லும். அதைப் பார்த்துப் பார்த்து அவன் இன்பக்கூத்தாடுவான்.

அன்று பறவைக்கு விடுதலை வாங்கிக்கொடுத்த விளாதிமிர், பிற்காலத்தில் மக்களுக்கு விடுதலை வாங்கிக்கொடுக்க நினைத்தான். அதற்காக அரும்பாடுபட்டான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்ப்பெரும் புரட்சியை முன்னின்று நடத்தினான்.

புதிய இரஷ்யாவை இன்றுள்ள சோவியத் நாட்டை நிறுவிய லெனின் அவர்களின் இளமைப் பெயர்தான் விளாதிமிர் என்பது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 4.2 / 5. வாக்கு எண்ணிக்கை: 5

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *