
பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
13. வயிற்றிலே ஆடு!
திருடன்,
பிசாசு,
பாம்பு.
இந்தப் பெயர்களில் எதைச் சொன்னாலும் போதும்; மோகன்
நடுநடுங்குவான். இரவில் வீட்டைவிட்டு வெளியில் வரவேமாட்டான். அவனது அறையில் இரவு முழுவதும் விளக்கு எரிந்துகொண்டே இருக்கவேண்டும்; அப்போதுதான் அவனுக்குத் தூக்கம் வரும். மோகனுடைய அண்ணனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் சில நாட்களில் மோகனுக்கும் நண்பன் ஆகிவிட்டான்; அவன் மிகவும் வலிமை வாய்ந்தவன்; தைரியமுள்ளவன்.
ஒருநாள் அந்த நண்பன், மோகனைப் பார்த்து, “மோகன், உன்னைப் பார்க்கவே பரிதாபமாயிருக்கிறது. இவ்வளவு கோழையாக இருக்கிறாயே! இப்படி இளைத்து இருக்கிறாயே! என்னைப் பார்; என் உடம்பைப் பார். நான் எவ்வளவு பலசாலியாக இருக்கிறேன்! விளையாட்டுக்களில் எவ்வளவு கெட்டிக்காரனாக இருக்கிறேன்! இவற்றுக்கெல்லாம் என்ன காரணம், தெரியுமா? நான் மாமிசம் சாப்பிடுகிறேன்” என்று கூறினான்.
“நீ ஆங்கிலேயர்களைப் பார்த்திருப்பாயே, அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?
‘கொழு கொழு’ என்று இருக்கிறார்கள்! நம்மையெல்லாம் அடக்கி ஆளுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? அவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள்! அவர்களைப் போல் நாமும் மாமிசம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வலிமை உடையவராக ஆக முடியும், அவர்களை நம் நாட்டை விட்டு விரட்டியடிக்கமுடியும். விரைவிலே சுதந்தரம் பெறமுடியும். மாமிசம் சாப்பிடுவதில் உள்ள நன்மை, சொன்னால் புரியாது. சாப்பிட்டுப் பார்த்தால்தான் உனக்குத் தெரியும்.”
மோகனுக்குப் பலசாலியாக வேண்டும், பயமில்லாமல் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், மாமிசம் சாப்பிட மனம் இடம் கொடுக்கவில்லை.
ஆயினும், அந்த நண்பன் விடவில்லை. திரும்பத் திரும்ப மாமிசத்தின் பெருமையை எடுத்துக் அவ கூறிவந்தான். “கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” என்பது பழமொழி. அதற்கிணங்க மோகனுடைய மனம் நாளடைவில் மாறிவிட்டது.
ஆனால், மாமிசத்தை எங்கு வைத்துச் சாப்பிடுவது யாராவது பார்த்து விட்டால்…? தாய் தந்தைக்குத் தெரிந்து போனால்…? அவனுக்குப் பயமாகவே இருந்தது.
ஆனால், அந்த நண்பன், “மோகன், வீணாகப் பயப்படாதே. நாம் இருவரும் ஆற்றங்கரைக்குப் போவோம். எவரும் வராத இடத்தில் உட்கார்ந்து மாமிசம் சாப்பிடுவோம். மனத்தைத்திடப்படுத்திக் கொள்” என்று தைரியம் கூறினான்.
அவன் சொன்னபடியே இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள். மறைவான ஓரிடத்தில் உட்கார்ந்தார்கள். காகிதத்தில் மடித்து வைத்திருந்த ஆட்டு மாமிசத்தை நண்பன் வெளியே எடுத்தான், மோகனிடம் கொடுத்தான், மோகன் அதை வாயின் அருகிலே கொண்டுபோகத் தயங்கினான். “உம், என்ன தயக்கம்? சாப்பிடு” என்றான் நண்பன்.
மோகன் கண்களை நன்றாக மூடிக்கொண்டான். கசப்பு மருந்து
சாப்பிடுவது போல் வேண்டா வெறுப்புடன் மாமிசத் துண்டை வாய்க்குள்ளே போட்டான்; அப்போது அவன் உடல் நடுங்கியது. வியர்வை கொட்டியது.
அதற்குமேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை. எழுந்து வீடுபோய்ச் சேர்ந்தான்.
அன்று இரவு முழுவதும் மோகனுக்குத் தூக்கம் வரவில்லை. கண்களை மூடினால் போதும்; வயிற்றுக்குள்ளே ஓர் ஆடு வந்து நிற்பதுபோல் இருக்கும். அது சும்மா நிற்காது; ‘மே, மே’ என்று கதறும்! அப்போது மோகனின் உள்ளம் படாதபாடுபடும். “பரம சாதுவான ஆட்டைக்கொன்று
தின்பதா? சே, இனி உயிருள்ளவரை மாமிசத்தைத் தொடமாட்டேன்” என்று அப்போது அவன் உறுதி செய்துகொண்டான்.
சாகும்வரை அவன் எந்த உயிரையும் கொன்று தின்றதில்லை. அது மட்டுமா?
எந்த உயிருக்கும் தீங்கு செய்ததும் இல்லை; தீங்கு நினைத்ததும் இல்லை. மாமிசம் சாப்பிட்டால்தான் ஆங்கிலேயரை விரட்ட முடியும்; சுதந்தரம் பெற முடியும் என்று சொன்னானல்லவா அந்த நண்பன்? ஆனால், மாமிசம் சாப்பிடாமலே, அன்பு வழியில் ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு விடுதலை வாங்கித்தந்தான் அந்த மோகன்!
அந்த மோகன் யார் என்பது உங்களுக்கா தெரியாது?
நம் நாட்டுத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியேதான்!



