
பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
20. படகுப் பயணம்
ஜோசப், ஜான்.
இந்த இரண்டு சிறுவர்களும் வீட்டுக்குள்ளே குத்துச்சண்டை போட்டார்கள்.
சண்டை என்றால், சாதாரணச் சண்டையன்று; கடுமையான குத்துச்சண்டை!
பாய்ந்து பாய்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கினார்கள், கட்டிப் புரண்டார்கள்; பலமாகக் குத்திக்கொண்டார்கள். நீண்டநேரம் சண்டை நடந்தது.
சுற்றிலும் ஐந்து பெண் குழந்தைகளும், ஒரு பையனும் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தார்கள்.
‘உம், விடாதே!’
‘ஆ! அப்படித்தான்!’
இப்படி அந்தக் குழந்தைகள் ஆரவாரம் செய்தார்கள்.
ஜோசப்புக்கு வயது பதினான்கு. அவன் சற்றுப்பருமனாக இருந்தான். ஜான் அவனைவிட இரண்டு வயது இளையவன்; ஒல்லியாக இருந்தான், பார்ப்பதற்கு நோஞ்சானாக இருந்தாலும், வீரமாகச் சண்டைபோட்டான்.
ஆனாலும், முடிவில் ஜோசப்தான் வெற்றி பெற்றான்.
குத்துச்சண்டை போடும்போது மட்டுமன்று, பந்து விளையாடும் போதும், நீந்தும் போதும், படகு ஓட்டும் போதும், அவர்கள் வலுத்த போட்டி இடுவார்கள். மற்றப் போட்டிகளில் தோற்றுப் போனாலும், நீச்சல் போட்டியில் ஜான் தோற்றதே இல்லை. அரைநொடியில் அவன் ஐம்பது மீட்டர் தூரம் நீந்தி விடுவான்.
விளையாட்டு நேரங்களில் தான் அவர்கள் எதிரிகள் போல் இருப்பார்கள். மற்ற நேரங்களில், இருவரும் மிகுந்த அன்போடு பழகுவார்கள். அப்படியானால், அந்த இருவரும் நெருங்கிய நண்பர்களோ? இல்லை, இல்லை. இருவரும் கூடப் பிறந்தவர்கள். ஒரே தாயின் வயிற்றுப்பிள்ளைகள்! சுற்றிலும் உட்கார்ந்து குத்துச்சண்டையை வேடிக்கை பார்த்தார்களே, அவர்களும் இவர்களின் உடன் பிறந்தவர்களே.
அவர்களுடைய தந்தையார் ஒரு பெரிய பணக்காரர். சொந்த முயற்சியால் பல இலட்சம் டாலர்களைச் சம்பாதித்தவர். இருபத்தைந்தாவது வயதிலே அவர் ஒரு பாங்கின் தலைவரானார். பிற்காலத்தில், அவர் அமெரிக்கத்தூதராக இங்கிலாந்தில் இருந்தார்.
“நீங்கள் பெரியவர்களானதும், எந்த வேலை செய்தாலும், நான் கவலைப்படமாட்டேன். ஆனால், எந்த வேலையைச் செய்தாலும், அந்த வேலையில் சிறந்து விளங்கவேண்டும். மண்வெட்டுபவனாக இருந்தாலும், உலகிலே சிறந்த மண் வெட்டுபவன் என்று பெயர் எடுக்க வேண்டும்” என அவர் பிள்ளைகளுக்கு அடிக்கடி அறிவுரை கூறுவார்.
சிறு வயதிலே படகு ஓட்டுவதில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்தான் ஜான்.
இளைஞனானதும் கடற்படையிலே சேர அவன் விரும்பினான்.
இலட்சாதிபதியின் மைந்தனாக இருந்தாலும் அவன் போர்ப்படையில் சேரவேண்டும், பிறந்த நாட்டுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டான்.
ஆனால், அதிகாரிகள் அவனைப் போர்ப்படையில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார்கள். காரணம் அவனது எடை குறைவாயிருந்ததுதான். அதற்காக, அவன் மனம் தளரவில்லை. ஐந்து திங்கள் தண்டால், பஸ்கி, ஓட்டம் முதலிய கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்தான். எடை மிகுதியானது.
ஆறாம் திங்கள், அவனைக் கடற்படையிலே சேர்த்துக் கொண்டார்கள். விரைவிலே அவன் போர்ப்படகு ஒன்றின் தலைவனானான். ஒரு சமயம், அவனுடைய படகு இரண்டாக உடைந்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.
அவன், தான் தப்பியதோடல்லாமல், தன் நண்பர்களையும் வீரமுடன் காப்பாற்றினான். அவனுடைய வீரத்தைப் பாராட்டிப் போர்ப்படையினர் அவனுக்கு விருது வழங்கினர்.
சிறந்த வீரனாக மட்டுமல்லாமல், சிறந்த எழுத்தாளனாகவும், அவன் விளங்கினான். ‘தீரர்கள் வாழ்க்கை’ என்ற அவனுடைய புத்தகத்திற்குப் பெரிய பரிசு ஒன்றும் கிடைத்தது. அவன் தந்தை கூறியதுபோல், அவன் போர்ப்படையில் சிறந்து விளங்கினான் புத்தகம் எழுதுவதிலே சிறந்து விளங்கினான்.
இவை மட்டுமா? அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகவும் அவன் சிறந்து விளங்கினான். ஆம், அமெரிக்காவின் முப்பத்தைந்தாம் குடியரசுத் தலைவராக நாற்பத்து மூன்று வயதிலே தேர்ந்தெடுக்கப் பெற்ற ஜான் எப் கென்னடிதான் அந்தச் சிறுவன்.
அமெரிக்கக் குடியரசுத்தலைவராக விளங்கியவர்களில் கென்னடிதான் மிகவும் இளமையானவர்!
முற்றும்.
★ ★ ★



