பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

6. ஒன்பது வயதில் நாடக ஆசிரியர்!

யாழ்ப்பாணத்தில் நல்லூர் என்ற ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் 150 ஆண்டுகளுக்கு முன்னர்க் கந்தப்பப்பிள்ளை என்ற ஒரு மருத்துவர் இருந்தார். அவர் உடலுக்கு மருந்து கொடுத்து வந்ததோடு, உள்ளத்திற்கும் மருந்து கொடுக்க நினைத்தார். நல்ல நல்ல நாடகங்களை எழுதினார். அந்த நாடகங்களில் உயர்ந்த கருத்துக்கள் இருந்தன. மக்கள் அந்த நாடகங்களைப் பார்த்து மனம் திருந்த வேண்டும் என்பதே அவர் ஆசை

சிறிதுநேரம்கூட அவர் சும்மா இருக்கமாட்டார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நாடகத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்; அல்லது, நாடகம் எழுதிக்கொண்டிருப்பார்.

ஒரு நாள், கையிலே ஏட்டையும் எழுத்தாணியையும் வைத்து அவர் ஏதோ ஒரு நாடகத்தை எழுதிக்கொண்டிருந்தார். திடீரென்று எழுதுவதை நிறுத்தினார்; அப்படியே சாய்ந்து விட்டார். உடனே எல்லாரும் அவர் அருகிலே ஓடிவந்தார்கள். மூக்கிலே கைவைத்துப் பார்த்தார்கள். ‘மூச்சு நின்றுவிட்டது!’ என்று அறிந்தார்கள்.

“அந்தோ, நாடகம் முடிவதற்குள் இவர் ஆயுள் முடிந்துவிட்டதே!” என்று எல்லாரும் வருந்தினார்கள்.

கந்தப்பப் பிள்ளைக்கு ஆறுமுகம் என்று ஒரு மகன் இருந்தான். அவனுக்கு அப்போது வயது ஒன்பது. அந்த வயதிலே அவன் மிகவும் கெட்டிக்காரனாயிருந்தான். தமிழிலே அவனுக்கு நல்ல ஆர்வம் இருந்தது.

“நம் தந்தை எழுதிய நாடகம் அரை குறையாக இருக்கிறது. அதை எப்படியாவது தொடர்ந்து எழுதி முடித்துவிட வேண்டும்” என்று ஆறுமுகம் ஆசைப்பட்டான்.

தந்தை எழுதிய நாடகத்தைப் பலமுறை படித்தான். அது பற்றியே பல நாட்கள் சிந்தித்தான். பிறகு, எழுத்தாணியை எடுத்தான். ஏட்டிலே எழுதினான்;

நாடகத்தை ஒரு வழியாக முடித்தான்; அண்ணனிடம் கொண்டுபோய்க் காட்டினான். அவர் நாடகத்தைப் படித்துப்பார்த்தார்.

அவர் தம்பி, “நாடகம் மிக நன்றாக இருக்கிறது. நம் தந்தை எழுதுவதைப் போலவே எழுதியிருக்கிறாய். தந்தையின் ஆசையை நிறைவேற்றி விட்டாய்!” என்று கூறி ஆறுமுகத்தைக் கட்டித் தழுவினார்.

பர்சிவல் துரை என்ற ஆங்கிலப் பாதிரியார் நடத்திய பள்ளிக்கூடத்தில் சேர்ந்து ஆறுமுகம் படித்தான். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சிபெற்றான். சிறுவயதிலேயே ஆறுமுகத்திற்கு இருந்த தமிழ்ப் புலமையைக் கண்டு எல்லாரும் வியந்தார்கள்,

மாணவனாயிருந்த போதே கீழ் வகுப்புக்களுக்குத் தமிழ்ப் பாடம் சொல்லிக் கொடுக்கும்படி பர்சிவல் ஆறுமுகத்திடம் கூறினார். மாணவர்கள் மட்டுமா தமிழ் கற்றுக் கொண்டார்கள்? அந்தப் பர்சிவல் பாதிரியாரும் கற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டார். விரைவிலே அவர் தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டார். ஆறுமுகத்தின் உதவியுடன் பைபிள்’ என்னும் கிறித்தவ சமய நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார். எல்லாரும் அந்த மொழி பெயர்ப்பை மிகவும் பாராட்டினார்கள்.

சிறு வயதிலே இவ்வளவு திறமையுடன் விளங்கிய ஆறுமுகம் வளர்ந்து இளைஞரானதும் ஏட்டிலிருந்த பல இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட்டார்.

காற்புள்ளி, அரைப்புள்ளி, கேள்விக்குறி, வியப்புக்குறி முதலியவற்றை முதன் முதலாகத் தமிழ் நூல்களில் சேர்த்து அச்சிட்டவர் அவரே. சிறுவர்களுக்காக அவர் பால பாடங்கள், நீதி நூல்கள், கணக்கு நூல்கள், பூகோளம் முதலிய புத்தகங்களை எழுதினார். பல பழைய இலக்கிய

நூல்களுக்கு உரை எழுதினார்; திருவிளையாடல்புராணம், பெரியபுராணம் முதலியவற்றை உரைநடையில் எழுதி வெளியிட்டார். அவர் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கினார். அவர் தமிழில் அழகாகப் பேசுவார், அவர் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.

அவரது நாவன்மையை அறிந்து, திருவாவடுதுறை மடத்தில் அறிஞர்கள் கூடி அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.

‘ஆறுமுக நாவலர்’ என்பது தமிழ் தெரிந்த அனைவருக்கும் இன்று தெரிந்திருக்கிறது. இலங்கைக்குச் சென்றால் நாவலர் மண்டபம், நாவலர் வீதி, நாவலர் படிப்பகம், நாவலர் அச்சுக்கூடம் நாவலர் கல்விக்கூடம் என்று பல நினைவுச்சின்னங்களைக் காணலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 4.2 / 5. வாக்கு எண்ணிக்கை: 5

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *