பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

5. மூக்கும் மூடியும்

“அம்மா, கடிதம்” என்னும் அஞ்சல்காரரின் குரல் கேட்டது. வீட்டுக்குள்ளிருந்த தாய் வெளியே வந்தாள்; கடிதத்தைக் கையிலே வாங்கினாள். அஞ்சல் முத்திரையைப் பார்த்தாள், உடனே அவள் முகம் மலர்ந்தது.

அவளுடைய மகன் அந்தக் கிராமத்திலிருந்து சிறிது தூரத்திலுள்ள பட்டணத்துக்குச் சென்றிருந்தான். அது பள்ளி விடுமுறைக் காலம். அந்தப் பட்டணத்திலிருந்துதான் கடிதம் வந்திருந்தது. அவளுடைய தோழி அதை அனுப்பியிருந்தாள். தாய் கடிதத்தை ஆர்வத்தோடு பிரித்துப் படிக்கத் தொடங்கினாள்.

“அன்புள்ள தோழி, இனிமேல் உன் மகன் இங்கு இருந்தால், எங்கள் வேலையெல்லாம் கெட்டுவிடும். நீ உடனே இங்கு வந்து அவனை அழைத்துக் கொண்டு போய்விடு!” என்று கடிதத்தின் ஆரம்பத்தில் இருந்தது.

இதைப் படித்ததும், அந்தத் தாய் திடுக்கிட்டாள்.

‘விடுமுறை கழிந்த பிறகுதான் உன் மகனைத் திருப்பி அனுப்புவேன்’ என்று ஆசையோடு என் மகனை அழைத்துச் சென்றாளே, அந்தத் தோழியா இப்படி எழுதியிருக்கிறாள்! என் மகன் வம்பு வழக்குக்குப் போகமாட்டானே! என்ன காரணமோ?’ என்று கவலையோடு மேலும் படித்தாள்.

“உன் மகன் இங்கு வந்தது முதல், இரவு நெடுநேரம் சென்றுதான் நாங்கள் தூங்குகிறோம். இதனால், காலையில் விரைவிலே எழுந்து வேலைகளைக் கவனிக்க முடியவில்லை. அவன் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டால், நேரம் போவதே தெரிவதில்லை. பிள்ளைகளோடு நாங்களும் சேர்ந்து மணிக்கணக்காகக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். நெடுநேரம் சென்ற பிறகுதான், அடடா! இவ்வளவு நேரம் விழித்திருந்துவிட்டோமே!” என்று தோன்றுகிறது. “ஆனாலும், அவன் கதையைக் கேட்காமல் இருக்க

முடிவதில்லை. அவன் இங்கு இருந்தால், ஒவ்வொரு நாளும் இப்படித்தான் நடக்கும். ஆகையால், தயவு கூர்ந்து விரைவில் அழைத்துப்போய்விடு.”

கடிதம் முழுவதையும் படித்து முடித்ததும், “பூ! இதற்குத்தானா இப்படி எழுதியிருக்கிறாள் என்னவோ என்று பயந்து போனேன்” என்று கூறிச் சிரித்தாள்.

இப்படிச் சிறிய வயதிலே கதை சொல்வதில் வல்லவனாக இருந்த அவன், பெரியவனானதும், பெரிய கதாசிரியனாகி விட்டானோ? இல்லை. பன்னிரண்டு வயதுப் பையனாக இருந்தபோது, அவன் அடுப்புக்குப் பக்கத்திலே போய் உட்கார்ந்து கொள்வான். மூக்குச் சாடியில் நீர் கொதித்துக் கொண்டிருக்கும். நன்றாகக் கொதித்த சாடியின் மூக்கு வழியாகக் ‘குப்குப்’ என்று ஆவி வெளிவருவதைப் பார்ப்பான்.

“இந்த ஆவி வெளியில் வராதபடி சாடியின் மூக்கை அடைத்துவிட்டால், என்ன நடக்கும்?” என்று ஒருநாள் எண்ணினான். உடனே அந்த மூக்கை மூடினான்.

அப்போது நீராவியால் வெளியில் வர முடியவில்லை.

சிறிது நேரம் சென்றதும், சாடியின் மூடி மெல்ல அசைய ஆரம்பித்தது.

அப்போது சிறிது இடைவெளி ஏற்பட்டது. நீராவி கொப்புளித்துக் கொண்டு வெளியே வந்தது. அதை அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தான்.

மேலும் சிறிது நேரம் சென்றது. சாடியின் மூடி மேலே எழும்ப ஆரம்பித்தது.

அப்புறம்…? அப்புறம் என்ன? மூடியைத் தள்ளிவிட்டு நீராவி வேகமாக வெளிவரத் தொடங்கியது. அதை அவன் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவனுடைய தாய் வந்தாள். “பாடங்களைப் படிக்காமல் இப்படி வீண் பொழுது போக்குகிறாயே?” என்று கூறி வருத்தப்பட்டாள். ஆனால், அவன் கண்டுபிடித்த நீராவி எந்திரத்தைப் பின்பற்றியே புகை வண்டிகளும், கப்பல்களும் ஒரு காலத்தில் ஓடப்போகின்றன என்பது அந்த அன்னைக்கு அப்போது தெரியுமா?

அவனுக்கு மக்கள் சிலை எடுப்பார்கள் என்றும், அவனைப் பற்றி ஆங்கிலப் பெருங்கவிஞரான வேர்ட்ஸ் வொர்த் புகழ்மாலை சூட்டுவார் என்றும் அப்போது அந்த அன்னை எதிர்பார்த்திருப்பாளா?

ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்த ஜேம்ஸ் வாட் செய்த ஆராய்ச்சியின் பயனாகத்தான் இன்று நீராவி எந்திரங்களை நாம் காண்கிறோம்; அவற்றால் பயன் அடைகிறோம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 4.2 / 5. வாக்கு எண்ணிக்கை: 5

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *