
பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
2. சிறுமியின் நாட்டுப்பற்று
பிரெஞ்சு நாட்டில் ‘டாம் ரெமி’ என்பது ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் 550 ஆண்டுகளுக்கு முன் ஒரு குடியானவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அவள் பள்ளிக் கூடத்துக்குச் சென்றதே இல்லை. தந்தையைப் போலவே அவளும் ஆடு மாடுகளை மேய்ப்பாள், வயலில் இறங்கி வேலை செய்வாள். தாயைப்போல் நூல் நூற்பாள்; அழகாகத் தையல் வேலையும் செய்வாள். வேலையில்லாதபோது, தோழிகளுடன் அவள் தெருவில் விளையாடிக்
கொண்டிருப்பாள்; அப்போது, திடீரென அவள் விளையாட்டை நிறுத்திவிடுவாள்; நேராக மாதா கோயிலுக்கு ஓடுவாள்; மண்டியிட்டு வணங்குவாள்; திரும்பி ஓடிவருவாள். தொடர்ந்து தோழிகளுடன் விளையாடுவாள். இப்படி அடிக்கடி செய்வாள்.
அவளுக்குப் பதின்மூன்று வயதானது. அப்போது பிரெஞ்சு நாட்டின்மீது ஆங்கிலேயர் படை எடுத்திருந்தார்கள். ஆங்கிலேயருடன் சில பிரெஞ்சுக்காரரும் சேர்ந்து கொண்டார்கள்; ஆங்கிலேயரின் படை பிரெஞ்சு நாட்டில் புகுந்து பல இடங்களைத் தாக்கியது; கொள்ளை அடித்தது; கொலை செய்தது; தீவைத்தது, இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட அச்சிறுமி, “நம் நாட்டு மக்கள் இப்படித்
துன்பப்படுகிறார்களே! எதிரிகளை எதிர்த்து விரட்ட எவருமே இல்லையா?” என்று எண்ணி எண்ணி ஏங்கினாள். அடிக்கடி இதைப் பற்றியே நினைத்து மனம் உருகினாள்.
ஒரு நாள் அவள், தன் வீட்டுத் தோட்டத்தில் தனியாக உட்கார்ந்து சிந்தனை செய்து கொண்டிருந்தாள். அப்போது, அவளுடைய பெயரைச் சொல்லி, யாரோ அழைப்பது கேட்டது. சுற்று முற்றும் பார்த்தாள். ஒருவரையும் காணோம்.
“கவலைப்படாதே! பிரெஞ்சு நாடு உன்னால் நன்மை அடையும்” என்று அக்குரல் கூறியது.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் அதே குரல் கேட்டது. யார்? என்று மேலே பார்த்தாள். எவருமே தென்படவில்லை. மூன்றாவது முறையும் அதே குரல் கேட்டது. “ஆ! வானத்தில் இருந்தன்றோ இக்குரல் கேட்கிறது!
“ஆம், கடவுளே பேசுகிறார்!” என்று அவள் நினைத்தாள்.
அன்று முதல் அவள் போக்கே மாறிவிட்டது. அடிக்கடி அந்தக் குரலைக் கேட்டாள். கேட்கக் கேட்க அவளுக்கு எப்படியாவது தன் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டது.
ஒருநாள் வீட்டைவிட்டு அவள் புறப்பட்டு விட்டாள்; பிரெஞ்சு நாட்டு மன்னனைக் காணச் சென்றாள். வழியில் எத்தனையோ தொல்லைகள்!
எல்லாவற்றையும் கடந்து அரசனைக் கண்டாள். “ஆங்கிலேயருடன் போர் புரிய வந்திருக்கிறேன். என்னுடன் படை வீரர்களை அனுப்புங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்” என்று அரசனிடம் கூறினாள். அவள் பேச்சைக் கேட்டு அரசனும் மற்றவர்களும் சிரித்தார்கள். ஆனாலும், அவள் மனந்தளரவில்லை; மன்றாடி வேண்டினாள்.
கடைசியில் அரசன் ஒரு படையை அவளுடன் அனுப்பினான். ஆணைப்போல அவள் போர் உடை தரித்துக்கொண்டாள், குதிரைமீது ஏறி, எதிரிகளைத் தாக்கப் புறப்பட்டாள்.
அச்சிறுமியின் நாட்டுப்பற்று, மன உறுதி, விடாமுயற்சி முதலியவற்றைக் கண்டனர் பிரெஞ்சு வீரர்கள். அவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி பிறந்தது.
வீரமுடன் போர்க்களத்தில் இறங்கினர். அவள் தலைமையில் போரிட்டனர்.
முதல் போரிலே வெற்றி கிடைத்தது. பல இடங்களில் அவள் ஆங்கிலேயருடன் போர் புரிந்தாள். இருமுறை அவள்மீது அம்பு பாய்ந்தது. உடலெல்லாம் இரத்தம்! அப்படியிருந்தும் அவள் போரை நிறுத்தவில்லை, தொடர்ந்து போரிட்டாள். பலமுறை வெற்றி பெற்ற அவள், இறுதியில் ஓரிடத்தில் தோல்வி அடைந்தாள். பாவம், சொந்த நாட்டினரே அவளுக்குத் துரோகம் செய்து விட்டார்கள்!
தோற்றுப்போன அவளை எதிரிகள் சிறையில் அடைத்தார்கள். அவள்மீது வழக்குத் தொடுத்து அவளைக் குற்றவாளி என்றார்கள். பிறகு, சந்தை கூடும் இடத்தில், அந்தோ! ஒரு கம்பத்திலே அவளைக் கட்டிவைத்துச் சுற்றிலும் தீ வைத்தார்கள். பத்தொன்பது வயதிலே அவளை எரித்து
விட்டார்கள்! அவளது உடலை எரித்தாலும் அவளது பெயரை எரிக்க முடிந்ததா? ஜோன் ஆப் ஆர்க் என்ற பெயர் இன்று வரலாற்றில் நிலைத்து விட்டதே!



