
ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை
10. வீரமா முனிவர்
இவ்வுலகில் வழங்கும் செம்மைசான்ற தொன்மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்றென்று மொழித்திறமறிந்தோர் கூறுவர். இற் றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, சிறப்புற்றிருந்த தென்னாட்டில் தமிழ்மொழி தோன்றி வளர்ந்த வரலாறு இன்றும் புதை பொருளாகவே அமைந்துள்ளது. ஆயினும் இக்காலத்தில் வெளிவந்துலவும் பழந்தொகை நூல்களைத் துணைக்கொண்டு ஆராயும் பொழுது அக்காலத்திய அந்தணரும் அரசரும், வணிகரும் வேளி ரும் வளமார்ந்த தமிழ்மொழியை ஆதரித்து வளர்த்த ஆர்வம் பளிங்குபோல் விளங்குவதாகும். இவ்வாறு அறிஞரனைவரும் மன மொத்து வளர்த்தமையாலேயே தமிழ்மொழி முற்காலத்தில் தழைத் தோங்குவதாயிற்று. இன்னும் சைவரும் வைணவரும், சமணரும் பௌத்தரும் பைந்தமிழ் மொழியைப் போற்றி வளர்ப்பாராயினர். இங்ஙனம், சாதிமதச் சுழிகடந்து, காலமென்னும் கடும்புனலில் தமிழ்க்கலம் களித்துலாவியது.
இத்தகைய தொன்மைவாய்ந்த தமிழ்மொழியைச் சென்ற இரு நூறாண்டுகளாகப் பிறநாட்டு நல்லறிஞர் போற்றி வளர்க்கத் தலைப் பட்டார்கள். ஐரோப்பிய நாடுகளில் சீரும் சிறப்புமுற்று விளங்கும் கிறிஸ்துமதக் கொள்கைகளைத் தமிழ்நாட்டிற் பரப்பக் கருதி இந்நாட் டிற் போந்த பாதிரிமார்கள், அருந்தமிழ் மொழியை வருந்திக் கற்கத் தொடங்கினார்கள். இயேசு மதக் கொள்கைகளைத் தமிழ்மக்கள் நன்குணர்ந்து ஆதரிக்கும் வண்ணம் அவற்றைப் போதிக்கக் கருதிய பெரியார், பிழையறப் பேசவும் எழுதவும் விரும்பித் தமிழ்மொழியி லமைந்த சிறந்த நூல்களை ஆராயத் தலைப்பட்டார்கள்.
அற நூல்களிற் சிறந்த திருக்குறளையும், அருஞ்சுவை நிரம்பிய பெருந் தமிழ்க் காவியங்களையும்,அன்னார் ஆர்வமுறப் பயின்றபொழுது, அந்நூல்களின் தெள்ளிய சுவை அவர் உள்ளத்தை அள்ளுவதாயிற்று. தமிழ் மொழியைப் போதிய வளவு கற்றுப் போதனை செய்யக்கருதிய மேலை நாட்டறிஞர் செழுந்தமிழ்த் தேனை மாந்தித் திளைத்தார்கள்.
இத் தகைய மேலைநாட்டறிஞருள், இத்தாலிய நாட்டினின்றும் தமிழகம் போந்து தமிழ்மக்களோடு கலந்துறைந்து, விழுமிய புகழ்பெற்ற வீரமாமுனிவர் தலைசிறந்தவராவார். ஐரோப்பிய நாடுகளில் உயர் தனிச் செம்மொழிகளாகக் கருதப்படும் லத்தீன், கிரீக்கு முதலிய மொழிகளில் அமைந்த செழுங்கலைகளைச் செவ்வையாக ஓதியுணர்ந்து, செல்வத்துட் செல்வமாய செவிச்செல்வம் பெற்ற அம்முனிவர், அருந்தமிழ் மொழியின் அகலங்காண விரும்பிப் பல்லாண்டு முயன்று பயின்றார். அறம் மணக்கும் திருக்குறளின் அருஞ்சுவையையும், தமிழ் மணக்கும் சிந்தாமணியின் செழுஞ்சுவையையும், கலைமணக்கும் கம்பன் கவிச்சுவையையும் கலந்து நுகர்ந்த முனிவர் உள்ளம், பள்ளத்துட் பாயும் வெள்ளம்போல் ஏனைய தமிழ்ப் பனுவல்களிலும் பரந்து படர்வதாயிற்று. தாளுண்ட நீரைத் தலையாலே தரும் தெங்கின் தகைமை வாய்ந்த அப்பெரியார் தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டு அருமை வாய்ந்ததாகும்.
தைரியநாதர் என்றும், வீரமா முனிவர் என்றும் தமிழகத்திற்புகழ் பெற்ற வித்தகரே தமிழ் அகராதியின் தந்தையாவார் என்று கூறுதல் மிகையாகாது. தமிழ்மொழியில் அமைந்த சொல்லின் பொருளை அறிந்துகொள்வதற்கு முற்காலத்தில் நிகண்டுகளே சிறந்த கருவிகளா யமைந்தன. திவாகரம், பிங்கலம், கயாதரம்,சூடாமணி முதலிய பழைய நிகண்டுகள் தமிழ்மொழியில் விளங்கக் காணலாம். நூற் பாவால் அமைந்த நிகண்டுகள் யாவும் கற்றோர்க்கேயன்றி மற்றோர்க் குப் பயன்படாதனவாயின. கவிபாடும் புலவர்க்கும் பொருள் காணும் அறிஞர்க்குமே அவை பெருந்துணையாயிருந்தன. கற்றோரே யன்றி மற்றோரும் தமிழ்மொழியின் சொற் செல்வமறிந்து இன்புற வேண்டுமென்று கருதிய வீரமா முனிவர் ‘சதுர் அகராதி’ என்னும் பெயரால் ஒரு சிறந்த அகராதி செய்து உதவினார். அவ்வகராதி நூற்பாவால் அமைந்த நிகண்டுகள் போலாது, தமிழ்ச் சொற்களை அகர முதலாக எடுத்தடுக்கிப் பொருள் விளக்கிய பான்மையால் ‘தமிழ்ப்பெருங்கடற்கு அஃது ஓர் மரக்கலமாகத் திகழ்ந்த ‘தென் அந்நூற்பாயிரம் கூறுகின்றது. சதுரகராதி அளவிற் சிறிதாயி னும் அருமைவாய்ந்த தென்பதில் ஐயமில்லை. பிற்காலத்தில் தமி ழில் எழுந்த பேரகராதிகட்கெல்லாம், சதுர் அகராதி கலங்கரை விளக்கம்போல் நின்று நெறிகாட்டும் தகைமையொன்றே அதன் பெருமைக்குப் போதிய சான்றாகும். பெயர், பொருள்,தொகை, காடை என்னும் நான்கு பகுப்புடையதாய் நலமுறத் திகழும் சது ரகராதி பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்ததாகும். அவ்வக ராதியை அடிப்படையாகக் கொண்டு, தனித் தமிழ் அகராதிகளும், தமிழ் ஆங்கில அகராதிகளும் எழுந்தன.
தமிழ் அகராதியின் தாதையாய வீரமா முனிவர் தமிழ் லத்தீன் அகராதி யொன்றும், போர்ச்சுகீசியத் தமிழ் அகராதி யொன்றும் இயற்றிப் போந்தார். இவ்வாறு அகராதிகள் இயற்றிச் சிறப்புற்ற முனிவர், தேம்பாவணி யென்னும் நறுந்தமிழ் மாலை புனைந்து தமிழணங்கைப் போற்றுவாராயினர். சூதேய நாட்டிற் பிறந்து புகழ் பெற்ற சூசையப்பர் என்னும் வளவன் பெருமையைக் கூறும் தேம்பா வணியில் திருக்குறளின் தெள்ளிய கட்டுரை மணமும், சிந்தாமணியின் செவ்விய கற்பனை நலமும், கலைமலிந்த கம்பன் கவிச்சுவையும் ஆங்காங்கு அமைந்து அழகுசெய்யக் காணலாம். இதனை விரித்துரைத்தல் ஈண்டியலாதாயினும் இரண்டொரு சான்று காணலாகும்.
வேளாண்மை யென்னும் விழுமிய பணியின் நலமுணர்த்தப் போந்த திருவள்ளுவர் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்று அருளிப்போந்தார். இத் திருக்குறளின் தெள்ளிய நயமறிந்த முனிவர்,
“உழதுண்பார் உயிர் வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்பார் எனில் தாம் தொழில் செய்தபின்
அழுதுண்பார் கொடை கோடலில் லாயின
பொழுதுண்பாரில் யாரெனப் பூசவே”
என்று தேம்பாவணியிற் பொதிந்துரைத்துப் போந்தார்.
இனி, கல்வியிற் பெரியவர் என்று தமிழ்நாடு போற்றிப் புகழும் கம்பர் அருளிய கவிகள் வீரமா முனிவரது உள்ளத்தைக் கவர்ந்து, அவர் காவியத்தில் மிளிரும் தன்மையை ஆராய்வோம். தமிழ்நூல் மரபுக் கேற்பத் தேம்பாவணியில் வழிபடுதெய்வ வணக்கம் கூறலுற்ற வீரமா முனிவர்,
“சீரிய உலகம் மூன்றும் செய்தளித்து அழிப்ப வல்லாய்
நேரிய எதிர் ஒப்பின்றி நீத்தவோர் கடவுள் தூய வேரிய கமல பாதம் வினையறப் பணிந்து போற்றி ஆரிய வளவன் தன்காதை அறழதல் விளங்கச் சொல்வாம்“
என்றருளினார்.
முழுமுதற் பொருளாய் இறைவனைப் பெயராற் குறியாது முத்தொழில் புரியும் முறைமையால் அறிவித்தார். மும்மை சால் உலகமெல்லாம் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் கட வுளை, சீரிய உலகம் மூன்றும் செய்து, அளித்து, அழிப்பவல்லாய்,’ என்று சிறப்பித்தார். தனக்குவமையில்லாத் தனிப்பெருந் தலைவனை ‘நேரிய எதிர் ஒப்பில்லான்’ என்று ஏத்தினார். இருள்சேர் இரு வினையும் கடந்து, காலமும் கணக்கும் நீத்த காரணனாய் நின்ற இறை வனை, ‘நீத்த ஓர் கடவுள்’ என்று குறித்தார்.வள்ளுவார் உள்ளத்தில் ஆனந்தத் தேன்சொரியும் இறைவன் திருவடியை ‘வேரிய கமல பாதம்’ என்று வியந்துரைத்தார். இத்தகைய தெய்வமணங் கமழும் திருவடி மலர்களை ‘வாக்கால் தணிவுதோன்ற வாழ்த்தியும், மெய்யாற் பணிவு தோன்றத் தொழுதும் அறம் முதலாய உறுதிப் பொருள்களை விளக்கும் வளன் கதையை முனிவர் தமிழ்மொழியால் விளக்கலுற்றார். இவ்வாறு தேம்பாவணியில் அமைந்த தெய்வ வணக்கம்,
“உலகம் யாவையும் தாழள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட் டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே“
என்னும் கம்பர் கவியோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கதாகும்.
இன்னும்,தேம்பாவணி அவையடக்கக் கவியின் ஈற்றடியில் அமைந்த ‘ஆசையுற்று ஊமனேனும் அருங்கதை அறையலுற்றேன்’ என்னும் முனிவர் மொழிகள் ‘அன்பெனும் நறவம்மாந்தி மூங்கை யான் பேசலுற்றான், என்ன யான் மொழியலுற்றேன்’ என்னும் கம்பர் வாக்கைத் தழுவி எழுந்தனவென்று கருதுதல் மிகையாகாது.
இனிச் சிந்தாமணியின் நந்தாச் சவையினை நுகர்ந்து இன்புற்ற வீரமாமுனிவர், நாட்டுவளம் கூறும் கவிகளிலும், நகரநலம் கூறும் கவிகளிலும், அக்காவியத்தின் சிறந்த வாடை வீசுகின்றது. கீதமாவும் தீம்பலாவும், தெங்கும் வாழையும் எங்கும் நிறைந்து இலங்கிய ஏமாங்கத நாட்டைப் புகழப்போந்த சிந்தாமணி யாசிரியர்
“காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கழகின் எற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனியோடு வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென்னும் இசையால் திசை போயதுண்டே”
என்று செழுந்தமிழ் மொழிகளால் எழுதியமைத்தார். இக்கவியின் இன்பம் நுகர்ந்த முனிவர், சூதேய நாட்டு வளங் கூற நேர்ந்த பொழுது,
”பாய்ந்த தெங்கதின் பழங்கள் வீழ்தலால்
வாய்ந்த வாழைமா வருக்கை ஆசினி
சாய்ந்த தீங்கனி சரிந்த தேம்புனல்
தோய்ந்த வாயெலாம் இனிமை தோய்ந்தன“
என்று திருத்தி யமைத்துத் திளைப்பாராயினர்
அரியதோர் அகராதி தொகுத்தும், அருங்காவியம் இயற்றியும் தண்டமிழ் மொழிக்குத் தொண்டு செய்த வீரமா முனிவர், நன்னூல் முதலிய பன்னூல்களையும் ஐயந்திரிபற ஓதியுணர்ந்து, ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் பெயரால் ஒரு செந்தமிழ் இலக்கணம் இயற்றினார். இந்நூல் எழுத்து முதல் அணியீறாகவுள்ள ஐந்திலக்கணங்களையும் அழகுறத் தொகுத்துரைக்கின்றது. நன்னூல் போலவே இந்நூலும் நூற்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. நூல் வழக்கில் அமைந்த செந்தமிழ் மொழியின் திட்பநுட்ப முணர்ந்து ஐந்திலக்கண நூலும் உரையும் எழுதிய வீரமா முனிவர், உலக வழக்கிலமைந்த தமிழையும் இனிதறிந்து, ‘கொடுந்தமிழ்’ என்னும் பெயரால் லத்தீன் மொழியில் ஓர் இலக்கண நூல் வரைந்துதவினார். தமிழ்மொழியைப் பிழையறப் பேசவும் எழுதவும் ஆர்வமுற்று முயலும் பிறநாட்டறிஞர்க்கு இந்நூல் பேருதவியாக நிற்பதாகும். பழம் பெருமைவாய்ந்த தமிழ்நாட்டாரது பண்பினை மேலை நாட்டினரும் இனிதுணருமாறு, தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் இயற்றிய திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும், வீரமாமுனிவர் லத்தீன் மொழியிற் பெயர்த்தமைத்தார். இன்னும் இவர் வேதியர் ஒழுக்கம்,வேதவிளக்கம், வாமன் கதை முதலிய வசன நூல்களும் இயற்றித் தமிழ் உரைநடையை ஆதரித்தார். இங்ஙனம் தமிழ்மொழிக்குப் பல்லாற்றாற் பணிசெய்த வீரமாமுனிவர் போன்ற மேலைநாட்டறிஞரைச் செய்ந்நன்றியறியும் தமிழ்நாட்டார் என்றும் பாராட்டுவர்.



