
ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை
2. சேரனும் கீரனும்
தமிழ்நாடு தன்னரசுபெற்று வாழ்ந்தகாலத்தில் தமிழ்மொழி தலைசிறந்து விளங்கிற்று. தமிழறிந்த மன்னர் தமிழ்நாட்டை ஆண்டுவந்தமையால் முத்தமிழும் முறையே வளர்ந்தோங்கித் திகழ்ந்தன. அறிவினைக் கொல்லும் வறுமைவாய்ப்பட்டு வருந்திய தமிழ்ப் புலவர்களைத் தமிழ் நயமறிந்த அரசர் ஆதரித்துப் போற்றுவாராயினர்.
சேரநாட்டை ஆண்டுவந்த பெருஞ்சேரல் என்னும் அரசன் ஆண்மையிலும் வண்மையிலும் சிறந்து விளங்கினான்.
அம் மன்னன் சோழநாட்டை ஆண்ட வளவனையும் பாண்டிநாட்டை ஆண்ட மாறனையும் வென்று, ஒளவைக்கு நெல்லிக்கனி அளித்த அதிகமான் அஞ்சியின் வலியழித்து, தகர்த்தற்கரிய தகடூரை அடிப்படுத்துத் தமிழுலகம் போற்றத் தனிக்கோலோச்சி வந்தான்.
சேரமானது கொடிய வாளின் கொற்றம் கண்டு அஞ்சி, அவனடி தொழுத முடி வேந்தர் பலராயினர்.
இத்தகைய சீர்த்திவாய்ந்த சேரமானது கொடைத்திறத்தினைக் கேள்வியுற்ற மோசுகீரனார் என்னும் தமிழ்ப்புலவர், அம்மன்னன் பால் பரிசு பெற்றுப் பசிப்பிணி அகற்றக் கருதி நெடுவழி நடந்து அரண்மனை வாயிலை நண்ணினார். அப்பொழுது சேரமான் ஓர் அணி விழாக் காணுமாறு வெளியே சென்றிருந்தான். ஆயினும் அரண் மனைவாயில் அடையாதிருந்தமையால் கீரனார் இடையூறின்றி உள்ளே சென்றார். மன்னனுக்குரிய மாளிகையின் அழகையும் அமைப்பையும் கண்குளிரக் கண்டுகளித்தார். மாடத்தைச் சூழ்ந்திருந்த சோலையின் வழியே தவழ்ந்துவந்த மெல்லிய தென்றல் நறு மணம் கமழ்ந்தது. நெடும்பசியால் நலிந்து, வெயிலால் உலர்ந்து, வழிநடையால் வருந்தித் தளர்வுற்ற தமிழ்ப்புலவர் அவ்வரண்மனையில் இருந்து இளைப்பாற எண்ணினார். அதற்கு ஏற்ற இடத்தை நாடுகையில் மாளிகையின் ஒரு பால் அழகிய மஞ்சம் ஒன்று தோன்றிற்று. அம் மஞ்சத்தில் மெல்லிய பஞ்சமைந்த மெத்தை இட்டிருந்தது. அதன்மீது பாலாவி போன்ற பூம்பட்டு விரித்திருந்தது. மஞ்சத்தைக் கண்ட புலவர் நெஞ்சம், பள்ளத்துட் பாயும் வெள்ளம் போல் அதன்மீது படர்ந்தது. வண்ணப்பூஞ் சேக்கையைக் கையினால் தீண்டி இன்புறக் கருதி அதன் அருகே சென்றார். மருங்கு செல்லச் செல்ல அம்மஞ்சம் அவர் மனத்தை முற்றும் கவர்ந்து தன் வசமாக்கிக் கொண்டது. கையினால் அதன் மென்மையை அறிய விரும்பி அணுகிய புலவர் மெய்மறந்து அதன்மீது சாய்ந்தார். அந் நிலையில் என்றும் அறியாத பேரின்பமுற்றார். அவ்வின்ப நிலையில் மற்றெல்லாம் மறந்து சற்றே கண்முகிழ்த்தார். இயற்கை நலமறிந்த புலவரை இளைப்பாற்றக் கருதிய தமிழ்த் தென்றல் இன்புறத் தவழ்ந்து போந்து அவர் கண்களை இறுக்கியது. அருந்தமிழ்ப்புல வர் இனிய உறக்கத்தில் ஆழ்ந்தார்.
சிற்றுடை உடுத்த செந்தமிழ்ப் புலவர் இவ்வாறு கவலையற்று உறங்குகையில் சேரமான் தானைத்தலைவர் புடைசூழத் தன் மாளிகை வந்தடைந்தான்; விழாவணி கண்டு மகிழ்ந்த அமைச்சர்க்கும் தானைத்தலைவர்க்கும் விடைகொடுத்த பின்பு, சிறிது இளைப்பாற எண்ணினான்; விழாவிற்காக அணிந்திருந்த ஆடை அணிகளையும் உடைவாளையும் களைந்தான்; அரண்மனை ஒடுக்கத்திற் போந்து தனித்திருக்கக் கருதி வீரமுரசம் வீற்றிருத்தற்குரிய மணிமஞ்ச டத்தின் வழியே சென்றான்; அங்குப் பழுத்த மேனியும் நரைத்த முடியும் வாய்ந்த பெரியாரொருவர் தளர்ந்து கண்வளரக் கண்டான்; அவரது முகத்தின் விளக்கத்தால் அவர் வாக்கில் ஒளியுண்டெனத் துணிந்தான்; அவரணிந்திருந்த பழுதுற்ற உடையினைக் கண்டு பூமகளால் புறக்கணிக்கப்பட்டவர் எனத் தெளிந்தான்;
”இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு“
என்னும் பொருளுரையை நினைந்து பொருமினான்; அருந்தமிழறிந்த புலவரது மேனி தோய்ந்ததால் வீரமணிமஞ்சம் புனிதமுற்றதெனக் கருதி மனமகிழ்ந்தான்; அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பாவலர்க்குப் பணிசெய்யக் கருதி மஞ்சத்தின் அருகே தூங்கிய பெருங் கவரியைத் தன் வலக்கையால் எடுத்து வீசி நின்றான்; செங்கோ லும் வெம்படையும் பற்றிப் பழகிய கையினால் சேரமான் பணியாளர்க் குரிய கவரியைப் பற்றிக் குழைத்துக் கவிஞர்க்குப் பணிசெய்வானாயினான்.
சிறிதுநேரத்தில் கீரனார் தளர்வு தீர்ந்து கண் விழித்தார்; மெல்லிய மஞ்சத்தில் தாம் படுத்திருத்தலையும், காவலன் அதனருகே நின்று கவரி வீசுதலையுங் கண்டு உளம் பதைத்துப் பரக்க விழித்தார்; தாம் கண்ட காட்சி கனவோ நனவோ என ஐயுற்று மனங் குழம்பினார். கீரனது மனநிலை அறிந்த சேரன், அவ்வறிஞரைப் பற்றிநின்ற ஐயத்தையும் அச்சத்தையும் ஒருங்கே அகற்றக் கருதி அன்பளாவிய இன்பமொழி இயம்பினான். அம்மொழி கேட்ட கீரனார் திடுக்கிட் டெழுந்து மன்னர்க்குச் செய்த பெரும்பிழையை நினைந்து மனம் பதைத்தார். மெய்முழுதும் நடுங்க, கண்கள் அச்சத்தால் இடுங்க, மஞ்சத்தினின்றும் இறங்க முயன்றார். இங்ஙனம் பாவலர் மனமும் மெய்யும் வருந்தக்கண்ட சேரமான், அன்பொடு அமர்ந்து நோக்கி மென்மொழி பேசி அவர் மனத்திலிருந்த அச்சத்தை மாற்றினான். புலவரும் ஒருவாறு மனந்தேறி நடுக்கம் தீர்ந்து மன்னவன் பெருமையை மனமாரப் புகழலுற்றார். செஞ்சொல் இன்பமே சிறந்த இன்ப மெனக் கருதிய சேரமான் செவிகுளிர, “அரசே!மெல்லிய பூம்பட்டு விரித்த வீரமஞ்சத்தில் எளியேன் அறியாது ஏறித் துயின்றேன். அப்பிழை செய்த என்னை நீ இலங்கு வாளால் பிளந்து எறிதல் தகும். எனினும், தமிழறிந்தவன் என்னும் தன்மையால் என்னை விடுத்தாய்! இதுவொன்றே தமிழன்னைபால் நீ கொண்டுள்ள அன்பிற்குச் சாலும். ஆயினும் அவ்வளவிலமையாது படைக்கலம் எடுத்து வீசும் நின் தடக்கையினால் கடையேற்குக் கவரி வீசவும் இசைந்தனையே! நின் பெருமையை ஏழையேன் என்னென்று உரைப்பேன்” என்று புகழ்ந்து அவனடிகளில் வீழ்ந்து வணங்கினார்.
வாளா தமிழ்ச் சொல்லின் சுவையறிந்த சேரமான், அடிபணிந்த புலவரை ஆர்வமுற எடுத்தணைத்து, பல்லாண்டு அவர் பசிநோய் அகற் றப் போதிய பரிசளித்து விடைகொடுத்தனுப்பினான்.



