ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை

9. முந்நாடும் முத்தமிழும்

சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காவியம் தமிழ்நாட்டு மூவேந்தர்க்கும் உரியதாகும். கதைத் தலைவியாகிய கண்ணகி சோழ நாட்டிலே பிறந்தாள்; பாண்டிநாட்டில் தன் கற்பின் பெருமையை நிறுவினாள்; பின்பு சேரநாடு போந்து வானவர் போற்ற வானகம் எய்தினாள். ஆகவே, நூலாசிரியர் சேர சோழ பாண்டியர்கள் ஆண்டு வந்த முந்நாட்டின் பெருமையையும் முறையாக எடுத்துரைக்கின் றார். இவ்வுண்மை,

முடிகெழு வேந்தர் முவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக்கென்று

சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகளை நோக்கிக் கூறுமாற்றால் இனிது விளங்கும். இவ்வாறு முந்நாட்டின் பெருமையையும் எழுதப் போந்த ஆசிரியர் அவற்றின் அரசியல் முறைகளையும், சமய நெறிகளையும் பழக்க வழக்கங்களையும் குறிப்பாகக் கூறியருளினார். ஆகவே, முந்நாட்டின் நீர்மையையும் ஒருங்கே எடுத்துரைக்கும் நூல் தமிழ்மொழியில் சிலப்பதிகாரம் ஒன்றேயாகும்.

மூவேந்தர்க்கும் உரிய நூலாக விளங்கும் சிலப்பதிகாரம், முத் தமிழ் நயங்களுமமைந்த அரிய நூலாகவும் திகழ்கின்றது. இயல், இசை, நாடகம் என முன்னோர் வகுத்த முத்தமிழும் அந்நூலில் இனிது விளங்கக் காணலாம். இயற்றமிழின் நயம் நூல் முழுமை யும் பரந்து இன்பம் பயக்கின்றது. இனிமையும் செம்மையும் வாய்ந்த அருந்தமிழ்நடையில் சிலப்பதிகாரம் அமைந்திருத்தலால் செந்தமிழ் மொழியின் பெருமை அதன்கண் தலைசிறந்து இலங்குகின் றது. பெருங் காவியமியற்றும் புலவர்கள், பெரும்பாலும் அகவற் பாவியிலேயே தமக்கினிய காதைகளை அமைக்கக் காண்கின்றோம். அருமையும் பெருமையும் வாய்ந்த பழந்தமிழ்ப் பனுவல்கள் பெரும்பாலும் அகவற்பாவிலேயே அமைந்திருக்கின்றன. செம்மையும் சீர்மையும் வாய்ந்ததாய், ஆற்றொழுக்குப் போன்று அழகாகச் செல்லும் தன்மையதாய், கற்போருள்ளத்தைப் பிணிக்கும் தகையதாய் சிலப்பதிகாரத்தின் செவ்விய நடை அமைந்துள்ளது.

நூலின் பிற் பகுதியில் காவிய நடை கனிந்திலங்குகின்றது. நயங்கள் பலவும் அமைந்த பெருங்காப்பியத்திற்கு அகவல் நடையே ஏற்றதாகும் என் பர். யாப்பிலக்கணத்தின் தடைகள் மிகுதியும் இன்றி ஆசிரியர் கருதிய கருத்துக்களை எளிதாகவும் இனிதாகவும் எடுத்துரைப்பதற்கு ஏற்ற நடை அகவலேயாகும். ஆங்கிலமொழியில் பெருங் காப்பியங்கள் செய்த ஆசிரியர்கள் (Blank verse) சுத்தப் பாவினம் என்னும் பாவகையாலேயே அவற்றை ஆக்கியுள்ளார்கள். ஆங்கிலக் காவிய நடையில் ஒப்புயர்வற்று விளங்கும் ‘மில்டன்’ என்னும் பேராசிரியர் அகவல்போன்ற மேற்கூறிய பாவாலேயே சுவர்க்க நீக்கம் (Paradise lost) என்னும் பெருநூலை அமைத்திருக்கின்றார்.

ஆகவே, சிலப் பதிகாரத்தின் நடை இயற்றமிழின் சீர்மையை இனிதுணர்த் துவதாகும்.

இனி, இசைநயம் வாய்ந்த பகுதிகள் சிலப்பதிகாரத்தில் பல வுண்டு. பழந்தமிழ் மொழியில் தலைசிறந்து விளங்கிய இசைத்தமிழின் இயல்பையும் பெருமையையும் இக்கால உலகிற்குச் செம்மை யாக விளக்குவது சிலப்பதிகார மேயாகும். மாதவி தன் ஆடல் பாடல்களைச் சோழமன்னன் சபையில் அரங்கேற்றப் போந்தபொழுது அங்கு நிகழ்ந்த இன்னிசையும், அப்பால் கோவலனும் மாதவியும் கடற்கரையில் மகிழ்ந்து பாடிய கானல்வரிப் பாக்களும், ஆயர் சேரி யில் ஆய்ச்சியர் திருமாலை வணங்கிப் பாடிய இசைப்பாக்களும், கண் ணகியை ணங்கும்பொழுது அங்கு நிறைந்து நின்ற பெருமக்கள் பாடிய வாழ்த்துப்பாக்களும், தமிழ்மொழியின் இசை நலத்திற்கு என்றும் அழியாத சான்று பகர்வனவாம். இப்பாக்கள் பண்ணொன்றசைபாடும் புலவர்க்கு நல்விருந்தாய் அமைந்து சிந்தைக்கும் செவிக்கும் ஒருங்கே இன்பம் ஊட்டுகின்றன.

இன்னும் நாடகத்தின் நல்லியல்களும் சிலப்பதிகாரத்தில் நன்கு அமைந்து விளங்கக் காணலாம். நாடக அங்கங்களாகப் பிரித்து அமைக்கப் பெறாவிடினும் நாடகத்தின் தன்மை அந்நூலில் விளங்குகின்றது. நாடக நூல்களின் தன்மையை நன்கு ஆராயும்.

அறிஞர் அவற்றை மங்கல நாடகம் என்றும் அகோர நாடகம் என்றும் பகுத்துரைப்பர். இவற்றுள் மங்கல நாடகம், ஒரு தலை மகனும் தலைமகளும் ஒருவரை யொருவர் காதலித்து மகிழ்ந்திருக் கும் நிலையில், எதிர்பாராத ஓர் இடையூறு நேர்ந்து ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதும், அவ்வாறு பிரிந்தபின் இருவரும் பலவகைத் துன் பங்களை அடைந்து இறுதியில் ஒருவரை யொருவர் மீண்டும் எதிர்ப் பட்டு மணம் செய்து கொள்வதுமாகிய தன்மையை யுடையதாக விளங்கும்.

இத்தகைய நாடகம் மங்கலமாக முடிதலால் மங்கல நாடகமென்று பெயர் பெறும். இவ்வாறன்றி உலகில் உயர்ந்த நிலைமையுற்ற பெருமக்கள் ஆற்றொணாத அருந்துயர் அடைந்து இறுதியில் இறந்துபடுவதாகிய முடிவினையுடைய நாடகம் அகோர நாடகம் எனப்படும். இப் பாகுபாடு மேலை நாட்டு நாடக களில் மிகத் தெளிவாகக் காணப்படுகின்றது. ஆனால், தமிழ்மொழியி லுள்ள பல நாடகங்கள் அகோரத் தன்மை வாய்ந்தனவா யிருப்பினும் இறுதியில் மங்கலமாகவே முடியக் காண்கின்றோம். சிலப்பதிகாரத்தில் கற்போர் மனத்தை உருக்கும் கடுந்துயரம் காட்டப்படுகின்றது. செல்வமும் சீர்மையும் வாய்ந்த கண்ணகியும் கோவலனும் கடுங் கானகத்தில் வழி நடந்து வருந்துகின்றார்கள். அப்பால் கண்ணகியின் காற் சிலம்பை விற்றுவர மதுரை வீதியிற் சென்ற கோவலன் அரசனது ஏவலாளனால் கொலையுண்டு இறக்கின்றான். அதை அறிந்த கண்ணகி மனம் கொதித்து அழுது, மன்னனிடம் சென்று வழக்குரைத்து மாறனையும் மதுரைமா நகரையும் அழிக்கின்றாள். இவ்வளவில் முடிவு பெறுமாயின் சிலப்பதிகாரம் அகோர நாடகம் என்று பெயர் பெறுவதாகும். ஆனால் கொலையுண்டு இறந்த கோவலன் இறைவன் அருளால் மீண்டும் உயிர்பெற்று எழுகின்றான். கணவனை இழந்து துயரடைந்த கண்ணகியும் விமானத்திலேறி விண்ணுலகடைகின்றாள். இவ்வாறு நாடகம் மங்கலமாக முடிகின்றது. யாதொரு குற்றமு மற்றவர்களாய்,நன்மையே நாடிச் செய்யும் இயல்புடையவர்களாய், அரும் பெரும் குணங்கள் அமையப் பெற்றவர்களாய் விளங்கும் நல் லோர் துன்பத்தால் நலிவதைக் காண்பவர் மனமுடைந்து வருந்து வர். அன்னார் இறந்துபடும் காட்சி அவர்களால் பொறுக்க முடியாது என்றுணர்ந்து அகோர நாடகம் இயற்றும் ஆசிரியர்கள் இறுதியில் இறந்தவர்களை எழுப்புகின்றார்கள். கோவலன் கொலையுண்டு இறந்த கொடுமையைக் கண்டு கொதிக்கும் உள்ளம், அவனை மீண்டும் உயிருடன் கண்ட அளவில் ஆறுதல் அடைகின்றது. அவ்வாறே கண்ணகியின் கடுந்துயரைக்கண்டு கலங்கிய மனம், அம்மங்கை ஊர்தியில் செல்வதைக் கண்டு அமைதி அடைகின்றது. அகோர முடிவினைக் காணப்பொறாத தமிழ் மக்களது மனப்பான்மையை, ஆசிரியர் நன்றாக அறிந்திருந்தமையால் கோவலனையும் கண்ணகியையும் விண்ணுலகேற்றி மங்கல முடிவை அமைத்தருளினார்.

முற்காலத்தில் நிகழ்ந்த செயல்களை, தற்காலத்தில் பார்ப்போர் கண்ணெதிரே நிகழும் செயல்கள் போலக் காட்டுவதே நாடகத்தின் நல்லியல்பாகும். நாடகத்தைக் காணச் செல்லும் நன்மக்கள், தாம் காணும் நிகழ்ச்சிகள் முற்காலத்தில் நிகழ்ந்தன என்னும் எண்ணத்தை முற்றும் மறந்து, அப்பொழுது தம் கண்ணெதிரே நிகழும் செயல்கள் போலவே கருதுமாறு செய்தல் நாடகக் கவிஞரது நோக்கமாகும். இத்தன்மை சிலப்பதிகாரத்தில் சிறந்து விளங்குகின்றது. மதுரைமா நகரை எரித்து, மலைமீது ஏறி, வேங்கை மரத்தின் நிழலில் கவலையுற்று வந்து நின்ற கண்ணகியைக் குன்றக் குறவர்கள் நேராகக் கண்டதாகவும், அம்மங்கையை யார் என்று வினவியதாக வும், அதைக் கேட்ட கண்ணகி,

மணமதுரையோடு அரசு கேடுற வல்வினைவந் துறுத்த காலை கணவனையங் கிழந்து போந்த கடுவினையேன் யான்

என்று மாற்றம் உரைத்ததாகவும், அப்பொழுது குறவர்கள் அஞ்சி அம்மையாரை இறைஞ்சித் தொழுது நின்றதாகவும், அன்னவர் கண்காண வானவர் மலர்மாரி பொழிந்ததாகவும், கற்பரசி தன் காதலனோடு விமானம் ஏறி விண்ணுலகம் அடைந்ததாகவும், அப் புதுமையைக் கண்ட குன்றக் குறவர் சேர மன்னனிடம் சென்று நிகழ்ந்த செயல்களை எடுத்துரைத்ததாகவும், அப்பொழுது அரசனோடு இருந்த அருந்தமிழ்ப் புலவரான சீத்தலைச் சாத்தனார் கோவலன் கொலையுண்டு இறந்ததையும், மதுரை மன்னனும் நகரமும் அழிந்ததையும், அப்பால் கண்ணகி சேரநாடு சேர்ந்ததையும் விரிவாக எடுத்துரைத்ததாகவும் ஆசிரியர் கூறுகின்றமையால் கண்ணகியின் கதை நம் கண்ணெதிரே நிகழ்வதுபோலவே இருக்கின்றது.

இன்னும் அகோர நாடகத்தில் விளையும் துயரங்களை ஒல்லும் வகையால் துடைக்கும் வண்ணம் இடையிடையே நகைச்சுவையும், இன்பச் சுவையும் ஊட்டுகின்ற காட்சிகளை நாடக ஆசிரியர்கள் அமைப்பதுண்டு. இத்தகைய காட்சிகள் அகோர நாடகத்திற்கு இன்றியமையாத அங்கங்கள் என்று நாடக நூல் வல்லார் கூறுவர். கடுங்கானகத்தில் கண்ணகியும் கோவலனும் வழி நடந்து அடி தளர்ந்து வருந்துவதைக் கண்டு துன்புற்ற மனம், காளி கோட்டத்தில் மறக்குலப் பெண் தெய்வமுற்று ஆடும் ஆவேசக் கூத்தையும் கோலத்தையும் கண்டு ஆறுதல் அடைகின்றது. கோவலன் கொலை யுண்டிறந்த கொடுமையைக் கண்டு உருகிய மனம் ஆய்ச்சியர் பாடும் பாட்டாலும், ஆடும் குரவைக் கூத்தாலும் ஒருவாறு ஆறுதல் அடைகின்றது. கண்ணகியின் பொறுக்க முடியாத சோகமும், மதுரை மன்னன் இறந்துபட்ட துயரமும், மதுரைமா நகரம் எரிந்தழிந்த துன்பமும் கண்டு ஆற்றாத மனம், குன்றக் குறவர் குரவைக் கூத்தாடுவதைக் கண்டு ஒருவாறு அமைதி அடைகின்றது. இவ்வாறு சோகத்தைப் பெரிதும் ஊட்டுகின்ற காட்சிகளை அடுத்து இன்பம் விளைக்கும் இனிய காட்சிகளை ஆசிரியர் அமைத்துள்ள அழகு, நாடகவியல் உணர்ந்தோர் நன்கு போற்றுதற் குரியதாகும். இன்னோரன்ன சிறப்புக்கள் வாய்ந்திருத்தலாலேயே, முத்தமிழ்த் துறையின் முறைபோகிய வித்தகர் சிலப்பதிகாரத்தைச் சிறந்த நாடகக் காப்பியம் என்று போற்றுகின்றனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *