ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை

7. திருவாசகம் என்னுந் தேன்

இயற்கையோ டியைந்த இன்பம் நுகர்ந்து, இயற்கை வடிவாய இறைவனது பெருநலம் துய்த்த ஆன்றோர், தாம் பெற்ற இன்பம் உலகெலாம் பெற வேண்டும் எனக்கருதும் உயரிய அருளாளராய் விளங்குவர். கருங்கல்லைப் பிசைந்து கனியாக்கும் இறைவனது பெருங் கருணைத் திறத்தினை இயற்கையோடு ஒன்றி வாழும் சிற்றுயிர்களும் அறிந்து உய்யுமாறு அவற்றை அன்புடன் அழைத்து இறைவன்பால் உய்க்கும் ஆன்றோர்முறை அறியத்தக்கதாகும். நறுமணங் கமழும் நாண் மலர்களில் அமர்ந்து தேனுண்டு இசைபாடும் வண்டை நோக்கி மகிழ்வுற்ற மணிவாசகப் பெருமான் அளவிறந்த கருணையால் அதனை அழைத்து,

தினைத்தனை யுள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்பொழுதும் அனைத்தெலும் புள்நேக ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

என்று வேண்டுகின்றார். கொம்பார்சோலைத் தும்பியை நோக்கி, ‘தினை யளவு தேனளிக்கும் சிறுபூக்களில் ஆடித்திளைக்கும் அரச வண்டே! மலர்களில் அமைந்த நறுந்தேன் நாவிற்குமட்டுமே இனியதாகும்.

இன்ப வடிவினனாய ஈசன் பாலமைந்த ஆனந்தத்தேன், கருதும் மனத்திற்கு இனியதாகும்; காணும் கண்ணிற்கு இனியதாகும்; நவிலும் நாவிற்கு இனியதாகும். அவ்வின்பத்தேனை இறைவன் அள்ளிச் சொரிகின்றான். இவ்வாறு எங்கும் பொங்கித் ததும்பும் ஈசனது பேரானந்தத் தேனை நாடாது, துளித்தேன் அளிக்கும் மலர்களிற் சுழன்று திரிதல் ஏழைமைப்பால தன்றோ? ஆதலால் எங்கும் ஓடி இடருறும் கோத்தும்பி ! இனி இறைவனது நறுந்தேனுண்டு அவன் புகழையே பாடுவாய்’ என்று மணிவாசகர் பணிக்கின்றார்.

இன்னும், அடியார்க்கெளியனாய், ஏழைபங்காளனாய், உள்ளுவார் உள்ளத்துள் ஊறும் தெள்ளமுதாய் இலங்கும் இறைவனது இணையற்ற பெருமையைத் தேன் மணக்கும் வாயால் வாழ்த்துமாறு மணிவாசகர் அரச வண்டை அழைக்கின்றார்.

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையுமட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ

என்னும் திருவாசகம் அன்பினில் விளைந்த அருங்கனியாகும். ‘காளத்தி மலையிலமர்ந்த இறைவனது கண்ணினின்றெழுந்த குருதியைக் கண்டு ஆற்றாது, ஊனுக்கு ஊனே ஏற்ற மருந்தாகுமெனத் தேர்ந்து, ஒன்றன்பின் ஒன்றாய்த் தன் கண்ணிரண்டையும் விரும்பி அளித்த கண்ணப்பனது ஒப்பிலா அன்பினைக் கண்ட என் அப்பன், கல் மனம் படைத்த கடையேனையும் கருணையினாலாண்டு கொண்டான். ஆதலால் அரச வண்டே! பவளமேனியில் பால் வெண்ணீறணிந்த பரம்பொருளையே வாழ்த்தி வணங்கிப் பாடுவாய்’ என்று மணிவாசகர் இறைவனது எல்லையற்ற கருணையை வியந்து புகழ்கின்றார்.

இத்தகைய பேரருளாளன் மண்ணுலகில் வாழும் உயிர்களின் கண்ணுக் கெளியனாகித் தில்லைமன்றுளே திருநடம் புரியும் அழகினைக் கண்டு அப்பதியில் வாழும் அன்னங்களும் நடமாடித் திளைக்கு மென்று அடிகள் கருதுகின்றார்.

வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ

என்று மணிவாசகர் இன்ப அன்பினால் அருளுகின்றார். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் முறையாக நடத்தும் ஈசனது அருள் பெற்றோர் அவனடியின் கீழமர்ந்து நீடு வாழ்வராத லால் அப்பொன்னடிகளே போற்றுதற்குரியனவென்றும், புன்னெறியிற் பட்டுழலும் வன்னெஞ்சக் கள்வரையும் இணையற்ற கருணையினால் ஏன்று கொள்ளும் இறைவன், அன்போடுருகி அகங்குழைந்து பாடும் தும்பிக்கு அருள் செய்தல் திண்ணமாதலின், அப்பெருமான் திருவடிகளைப் பாடுதலே ஏற்றதாகுமென்றும் மணிவாசகர் அரு ளும் பொருளுரை தெய்வ மணம் கமழ்வதாகும்.

இங்ஙனம் இறைவனது பெருங் கருணைத் திறத்தினை வியந்த அடிகள் தம்மை ஆட்கொண்டருளிய தலைவனைத் ‘தாயான ஈசன்’ என்றறிந்து தலைக்கொண்டு போற்றுகின்றார். ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து,’ அன்பால் நினைவாரது ஊனினைச் சுருக்கி உள்ளொளி பெருக்கும் ஈசனைத் தார்யன்று போற்றுதல் தகவுடைய தன்றோ? இத்தகைய இறைவன் சிற்றறிவு வாய்ந்த உயிர்கள் செய்யும் பிழையனைத்தும் பொறுத்து அருள் புரிவான் என்றும், அவர்கள் ஆற்றும் சிறு நற் பணியையும் பெரிதாகக் கொண்டு இணை யற்ற பேரின்பம் அளிப்பான் என்றும் மணிவாசகர் இனிதுணர்த்து கின்றார்.

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளும் தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ

என்று அடிகள் ஏவுகின்றார். அவனன்றி ஓரணுவும் அசையா தெனும் உண்மையை உணர்ந்த அடிகள் அழகிய தமிழ்ப் பாட்டிசைக்கும் திறமையும் இறைவனருளாலேயே எய்தப் பெறும் என்று அறிவிக்கின்றார். அவனருளாலே அவன் தாள் வணங்கிச் செழுந்தமிழ்ப் பாமாலை புனையும் பேறுபெற்ற அடிகள், பண்ணார்ந்த பாட்டிசைக்கும் வண்டை நோக்கி ‘அருமைத் தும்பி! ஈசனது அருளால் இசைபாடும் திறம் பெற்றுள்ளாய். அவனருளாற பெற்ற நலத்தினை அவன் பணியிலேயே செலுத்தக்கடவாய். சை நலம் வாய்ந்த நீ ஈசனது பெரும் புகழையே இசைப்பாய்.ஒரு நாமம், ஒருருவம் ஒன்றுமில்லாது அப்பாலுக்கப்பாலாய இறைவனை எங்ஙனம் பாடுவது என்றெண்ணிமயங்காதே! ஐயா! என் ஆருயிரே! அம்பலவா! என்றழைத்து அவன் மலரடியை வாழ்த்திப் பாடுக’ என்று அடி கள் அரச வண்டுக்கு வழி காட்டுகின்றார்.

பொய்யாய செல்வத்தே புக்கழந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை யாட்கொண்ட
ஐயாஎன் னாருயிரே அம்பலவா என்றவன்தன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ

என்று அடிகள் அருளும் வாசகம் உருக்கம் மிக வாய்ந்ததாகும். பிழையெலாம் பொறுக்கும் பெருமை வாய்ந்த இறைவனை நோக்கி “ஐயனே! பொய்யாய செல்வத்தை மெய்யாகக் கருதி உழன்று நின் பொன்னடியைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே! பொருளல்லவற்றைப் பொருளென் றெண்ணி, வாழ்நாளைப் பாழ் நாளாக்கினேனே! செல்வன் கழலேத்தும் செல்வமே செல்வம் என்றறியாது சாலநாள் சிறுநெறியிற் கழித்தேனே! இத்தகைய பேதையையும் ஆட்கொண்ட நின் பெருமையை என்னென்று புகழ்வேன்! கருணையங்கடலாய் நின்னை ‘ஐயா! என்னாருயிரே! அம்பலவா! என்றழைத்து மனங்குழைந்து அழுவதல்லால் மற்று என் செய்வல்லேன்’ என்று மணிவாசகர் தாம் மெய்யாக் கண்டதனை வளமார்ந்த இசைபாடும் வண்டினிடம் இனிதெடுத்துரைக்கின்றார்.

இவ்வாறு செம்பொருளாய இறைவனைப் பெருங் கருணைக் கடலாகவும் பேரானந்த அமுதாகவும் அறிந்த மணிவாசகப் பெருமான், கொம்பார் சோலைத் தும்பிக்கு அருளும் திருவாசகம் ஈசன்பால் அன்புடையாரது நெஞ்சை அள்ளுவதாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *