ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை

12. குறத்தியும் குறியும்

குறிஞ்சி நிலத்தில் வாழும் குறத்தியர் குறிசொல்லும் வழக்கம் நெடுங்காலமாகத் தமிழகத்தில் நிலவிவருகின்றது. கைக்குறியும் மெய்க்குறியும் பார்த்து முக்காலச் செய்தியையும் முறையாகக் கூறும் திறம் குறத்தியர்பால் உண்டென்று முற்காலத் தமிழ் மாதர் கருதினர். திருக்குற்றால மலைக் குறிச்சியில் வாழ்ந்த சிங்கன் மனைவி குறி சொல்லப் புறப்பட்டாள்; தன் மலையின் சிறப்பினைப் புகழ்ந்து பாடிப் பன்னாள் வழி நடந்து பாண்டியன் தலைநகராகிய மதுரைமா நகரையடைந்தாள்.

மாடவீதியிற் பாடிப்போந்த குறவஞ்சியைக் கண்ட நகர மங்கையர் அவளைச் சூழ்ந்து குழுமினர். அன்னவருள் அழகிற் சிறந்து விளங்கிய அங்கயற்கண்ணியைக் குறவஞ்சி அமர்ந்து நோக்கி ‘அம்மே! ஒரு காலம் கஞ்சியும், ஒரு சிரங்கை எண்ணெயும், ஓருடையும் தந்தால் உன் உள்ளத்தில் உள்ளதெல்லாம் உள்ளபடி உரைப்பேன்; முக்காலத்தையும் முறையாக வகுத்துப் பார்த்து, வருங்கால நலங்களைத் திறம்படப் பகர்வேன்’ என்று நேர்மையாகக் கூறினாள். மாறன் குடியிற் பிறந்த அம் மங்கை மாற்றமொன்றும் உரையாது புன்முறுவல் பூத்துநின்றாள். அப்பொழுது குறமாது தன் வழிபடு தெய்வத்தை வணங்கி, அங்கயற்கண்ணியின் செங்கமலக் கையினைக் கூர்ந்து நோக்கிக் குழைந்து தலையசைத்துக் குறி சொல்லத்தொடங்கினாள்.

மாறாமல் இருநிலத்தில் அறம்வளர்க்குங் கையே
மனையறத்தால் அறம் பெருக்கித் திறம்வளர்க்குங் கையே
விற்க நவநிதியம் விளையுமிந்தக் கையே
மேன்மேலும் பாலமுதம் அளையுமிந்தக் கையே
ஆறுத சனங்கள்பசி ஆற்றுமிந்தக் கையே
அணங்கனையார் வணங்கிநித்தம் போற்றுமிந்தக் கையே
பேற்க நன்னகரம் காக்குமிந்தக் கையே
பிறவாத நெறியார்க்கே ஏற்குமிந்தக் கையே

என்று அக்கையின் சிறப்புரைத்து, கண்ணில் அதனை எடுத்தொற்றிக் களிப்புற்று நின்றாள். அங்கயற்கண்ணியைச் சூழ்ந்து நின்று குறுநகை செய்த சிறுமியர் அச்சொல்லை நம்புமாறு குறவஞ்சி தன் குலப்பெருமை கூறலுற்றாள்.

‘கன்னிமாரே! வழி வழியாகக் குறி சொல்லும் என் குலத்தினர் சொன்னது சொன்னபடியே பலிக்கும். திருமாலின் தேவியாய்த் திருமகள் விளங்குவாள் என்று என் பாட்டி குறி சொன்னாள். கமலத்தில் வாழும் அயனைக் கலைமங்கையே மணப்பாள் என்று என் பெரி யம்மை குறி பகர்ந்தாள். இந்திரனை மணத்தற்குரியவள் சுந்தரியே என்று என் தாய் இனிதாகக் குறி பார்த்துக் கூறினாள். இம்மூவரும் சொல்லிய குறி சொல்லியவண்ணமே பலித்தது. இன்னும் தடாதகைப் பிராட்டி இத்தரணியிற் பிறந்த பொழுது நான் அவள் முகக்குறி கண்டு அவள் உலகமுழுதாள்வாள் என்றேன். பின்பு அம்மங்கையின் கைக்குறி பார்த்து, பிறை சூடும் பெருமானே அவள் மணவாளப் பிள்ளையாவான் என்றேன். பின்னும் அம்மங்கையின் மெய்க்குறி கண்டு அவள் வயிற்றில் ஆண் பிள்ளை பிறந்து அரசாளும் என்றேன். நான் சொன்ன குறி யெல்லாம் சொன்னபடி பலித்தது. ஆதலால் என் சொல்லில் எள்ளளவும் ஐயம் வேண்டாம், அம்மே என்று குறவஞ்சி நேர்மையாயுரைத்த செய்தி கேட்டு அங்கயற் கண்ணி பெருமகிழ்ச்சியுற்றாள்; மாளிகைக்கு அவளை அழைத்துச் சென்றாள்; அங்கு கன்னிமாடத்தில் விரையாலே தரை மெழுகிக் கோலமிட்டு, நிறை நாழி வைத்து, மலர்க் கரத்தைக் காட்டிக் குறி கேட்கலுற்றாள். மங்கையின் கரத்தினை மகிழ்ந்து நோக்கிய சிங்கி வருங்காலச் சிறப்பையெல்லாம் வண்ணமாக எடுத்துரைத்தாள். மனக்கினிய குறி கேட்டு மகிழ்வுற்ற அங்கயற்கண்ணி பட்டும் பணியும், முத்தும் பவழமும் பரிசாகக் கொடுத்தாள். மன்னன் திருமகள் வழங்கிய பரிசை வணங்கியேற்ற சிங்கி பட்டாடையைச் சுற்றி உடுத்தாள்; நல்லணிகளை நலமுற அணிந்தாள்; செம்மாந்து வழி நடந்து தெம்மாங்கு பாடி மீண்டும் குற்றாலமலைக் குறிச்சியை நண்ணினாள். அங்கு அவள் கணவனான சிங்கன் பன்னாள் ஊர் சுற்றி வந்தடைந்த சிங்கியின் புத்தழகைக் கண்டு வியந்து,

இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி”

என்று வினவினான். சிங்கன் மனத்திலெழுந்த ஆர்வத்தை நன்கறிந்த சிங்கி,

கொத்தார் குழலார்க்கு வித்தார மாகக்
குறி சொல்லப் போனனடா சிங்கா

என்றுமாற்றமுரைத்தாள். அடி முதல் முடி வரை தன் மனைவி அணிந்திருந்த புதிய கோலத்தைப் பொருந்த நோக்கிய சிங்கன்,

இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய் நீ சிங்கி

என்று நயந்து வினவினான். கணவன் வியப்பினைக் கண்டு களிப் புற்ற மாது,

நாட்டில் நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா

என்று கட்டுரை கூறினாள். பரிசு பெற்று வந்த சிங்கியை மீண்டும் குற்றாலக் குறிச்சியிலே கண்ட குறமாதர் ஆனந்தக் களிப்புற்று

வஞ்சி வந்தனளே மலைக்குற வஞ்சி வந்தனளே
மெய்க்குறி கைக்குறி விழிக்குறி மொழிக்குறி எக்குறி யாயினும் இமைப்பினில் உரைக்கும் வஞ்சி வந்தனளே மலைக்குற வஞ்சி வந்தனளே

என்று சீராட்டிப் பாராட்டினார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *